36. சாதனைச் சரித்திரம்
தானாகவே அவர் இளைய தலைமுறையை வளர விட்டிருக்காவிட்டால், மக்கள் அவரை நிரந்தர முதல்வராக்கியிருப்பார்கள். மக்களாட்சியில், 52 வருடங்கள் தொடர்ந்து உயர் பதவியில் ஒருவர் தொடர்வது மாபெரும் வரலாற்றுச் சாதனை.
1959-ல், பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த சிங்கப்பூரின் முதல்வராக, முதன் முதலில் லீ அரசு கட்டில் ஏறினார்.
1965-ல், நாடு விடுதலை பெற்றவுடன் முதல் பிரதமர் லீ.
1990 வரை 31 ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.
Advertisement
1990-ல், இன்னொரு முதல்வரை நியமித்துவிட்டு, தான் மூத்த அமைச்சரானார்.
2004-ல், வழிகாட்டும் அமைச்சரானார்.
2011-ல், ஆட்சிப்பீடத்தில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.
தானாகவே அவர் இளைய தலைமுறையை வளர விட்டிருக்காவிட்டால், மக்கள் அவரை நிரந்தர முதல்வராக்கியிருப்பார்கள். மக்களாட்சியில், 52 வருடங்கள் தொடர்ந்து உயர் பதவியில் ஒருவர் தொடர்வது மாபெரும் வரலாற்றுச் சாதனை.
மக்கள், லீயிடம் மட்டும் இந்த அழுத்தமான நம்பிக்கையை வைக்கவில்லை. அவர் தலைமையேற்று நடத்திய PAP கட்சி மீதும்தான். சுதந்தரச் சிங்கப்பூரில், இதுவரை நடந்திருக்கும் 12 பாராளுமன்றத் தேர்தல்களின் முடிவுகள் இதற்குச் சாட்சி -
தேர்தல் வருடம் | மொத்தத் தொகுதிகள் | போட்டி இல்லாமல் ஒருமனதாக வென்ற தொகுதிகள் | போட்டியிட்ட தொகுதிகள் | வென்ற தொகுதிகள் | மொத்தம் வென்ற தொகுதிகள் |
1968 | 58 | 51 | 7 | 7 | 58 |
1972 | 65 | 58 | 7 | 7 | 65 |
1976 | 75 | 37 | 38 | 38 | 75 |
1980 | 75 | 37 | 38 | 38 | 75 |
1984 | 79 | 30 | 49 | 47 | 77 |
1988 | 81 | 10 | 70 | 69 | 79 |
1991 | 81 | 41 | 40 | 36 | 77 |
1997 | 83 | 47 | 36 | 34 | 81 |
2001 | 84 | 55 | 29 | 27 | 82 |
2006 | 84 | 37 | 47 | 45 | 82 |
2011 | 87 | 5 | 82 | 76 | 81 |
2015 | 89 | 0 | 89 | 83 | 83 |
*லீ மறைவுக்குப் பின் நடந்த முதல் பொதுத் தேர்தல்.
கோட்டைக்குப் போகும் பாதை வழுக்குப் பாதை. மக்கள் மனங்கள், காற்றடித்த பக்கமெல்லாம் திசை திரும்புபவை. தலைவராக ஒருவரைத் தலையில் வைத்துக் கூத்தாடுவார்கள். நாளையே இன்னொருவர் வருவார். நேற்றைய ஹீரோ இன்றைய ஜீரோ ஆவார். பொது வாழ்க்கையில் இது சகஜம்.
இந்த நிலையில், 52 ஆண்டுகளாக லீ தலைமையில் தொடர்ந்தது எப்படி? இதைவிட ஆச்சரியம், மக்கள் மனங்களில் அசைக்கவே முடியாத இடம் பிடித்தது எப்படி? லீதான் சிங்கப்பூர், சிங்கப்பூர்தான் லீ என்று எல்லோரும் கொண்டாடுவது ஏன்? இவர்தான் தலைவர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் காமரூன், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, தென்கொரிய அதிபர் பார்க் கூன் ஹே, ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி ஆபட் ஆகியோர் மட்டுமல்ல, கொள்கையில் அவருக்கு எதிர் துருவங்களான ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடின், சீனக் குடியரசுத் தலைவர் ஷீ ஜின் பிங் போன்றோரும் புகழாரம் சூட்டுவது ஏன்?
இந்த எப்படிகளுக்கும், ஏன்களுக்கும் பதில் - அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள், சாதனைகள், சாதனைகள்!
இதோ, அவர் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய மைல்கற்கள் -
1923, செப்டம்பர் 16 – பிறப்பு.
1929 - சூன் குவான் சீனப் பள்ளி, தெலோக் குரா ஆரம்பப் பள்ளி (ஆங்கில அரசுப் பள்ளி) ஆகியவற்றில் ஆரம்பப் படிப்பு.
1936 – 39 - ராஃபிள்ஸ் பள்ளியில் படிப்பு. சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில், ஒட்டுமொத்த சிங்கப்பூரிலும், மலேயாவிலும் முதல் ராங்க். இதனால், புகழ்பெற்ற ராஃபிள்ஸ் கல்லூரியில் இடமும், கல்விக்கான உதவித்தொகையும் கிடைக்கின்றன.
1940 - 42 - ராஃபிள்ஸ் கல்லூரிப் படிப்பு. இரண்டாம் உலகப் போரால் படிப்பு பாதியில் நிற்கிறது.
1942 – சிங்கப்பூரை ஜப்பான் ஆக்கிரமிக்கிறது. ஜப்பானின் விளம்பரப் பிரிவான ஹொடோபு-வில் வேலைக்குச் சேருகிறார்.
1943 - 44 - கள்ளச் சந்தை வியாபாரம் செய்கிறார். பசை தயாரிக்கிறார்.
வருங்கால மனைவியான குவா கியோக் சூவுடன் காதல் மலர்கிறது. மனைவியைச் சுய சம்பாத்தியத்தில் காப்பாற்றும் நிலை வரும்போது, திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள்.
1945 - மறுபடியும் பிரிட்டீஷ் ஆட்சி.
1946 - சட்டம் படிக்க இங்கிலாந்து பயணம். லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் சேர்கிறார். ஹரால்ட் லாஸ்கி என்னும் பொருளாதாரப் பேராசிரியரின் சோஷியலிஸக் கொள்கைகளால் கவரப்படுகிறார். ஆனால், லண்டன் வாழ்க்கை பிடிக்கவில்லை.
1947 - கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துக்கு மாறுகிறார். சூவும், உதவித்தொகை பெற்று இங்கிலாந்தில் சட்டம் படிக்க வருகிறார். இருவர் வீடுகளுக்கும் தெரியாமல் ரகசியத் திருமணம்.
அரசியல் ஈடுபாடு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக இருக்கும் மிதவாதிகள், தீவிரவாதப் பாதையில் பயணிக்கும் கம்யூனிஸ்ட்கள், இருவர் மீதும் வெறுப்பு. நடுப்பாதை வகுக்க முடிவெடுக்கிறார்.
1949 - லீ முதல் வகுப்பு. அத்தோடு 75 சதவீத மதிப்பெண் வாங்கி, ‘‘நட்சத்திர அந்தஸ்து” வாங்கிய ஒரே மாணவர். சூவும் முதல் வகுப்பு.
1950 - சிங்கப்பூர் திரும்புகிறார். சூவோடு, இருவர் குடும்பங்களும் பங்கேற்கும் திருமணம்.
லேகாக் அண்ட் ஓங் (Laycock & Ong) என்னும் வெற்றிகரமான வழக்கறிஞர் நிறுவனத்தில் வேலைக்குச் சேருகிறார். சில மாதங்களில், மனைவி சூவுக்கும் இங்கே வேலை கிடைக்கிறது. பல தொழிற்சங்கங்களுக்கு வாதாடுகிறார். ஏராளமான வெற்றிகள்.
1952 - முதல் மகன் லீ செயின் லூங் பிறப்பு.
1954 - Peoples Action Party (PAP) தொடங்குகிறார்.
1955 - லீ அன்ட் லீ (Lee & Lee) என்னும் சொந்தச் சட்ட நிறுவனம் ஆரம்பிக்கிறார். மனைவி சூவும், தம்பி டென்னிஸும் கூட்டாளிகள்.
தேர்தலில், தஞ்சோங் பகார் தொகுதியில் ஜெயிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராகிறார். (இறப்பதுவரை, 60 வருடங்களுக்கு இந்தத் தொகுதியின் பிரதிநிதி லீதான்)
மகள் லீ வே லிங் பிறப்பு.
1956 - சிங்கப்பூருக்குச் சுயாட்சி பெற பிரிட்டிஷ் அரசிடம் பேச்சுவார்த்தைகள் நடத்த இங்கிலாந்து செல்லும் அணியில் அங்கத்தினர். இங்கிலாந்து அரசு சுயாட்சி தரச் சம்மதிக்கிறது.
1957 - ஆங்கிலேய ஆட்சியிலிருந்து மலேஷியா விடுதலை பெறுகிறது.
மகன் லீ செயின் யாங் பிறப்பு.
1959 ஜூன் - பொதுத் தேர்தலில், லீ தலைமையில் PAP கட்சி பெரும்பான்மை. 35 வயதில், சிங்கப்பூரின் முதலமைச்சர் ஆகிறார்.
ஆங்கிலம், மான்டரின் (சீனம்), மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்கிறார்.
1960 - வீட்டு வசதி வாரியம் அமைக்கிறார். குடிசைவாசிகளுக்குக் குடியிருப்புகள்.
1961 - மலேஷியாவுடன் சிங்கப்பூர் இணைய வேண்டும் என்று பிரசாரம்.
தொழில் வளர்ச்சிக்காக, சிங்கப்பூர் பொருளாதார முன்னேற்ற வாரியம் (Singapore Economic Developmemt Board) அமைக்கப்படுகிறது.
பெண்கள் முன்னேற்றத்துக்கும், அவர்கள் உரிமையைப் பாதுகாக்கவும், பெண்கள் உரிமைச் சட்டம் (Womens Charter) நிறைவேற்றப்பட்டது.
1962 - இணைப்பு பற்றி சிங்கப்பூரில் வாக்கெடுப்பு. மக்கள் இணைப்பை ஆதரிக்கிறார்கள்.
நேருஜியுடன் தில்லியில் சந்திப்பு.
1963 – சிங்கப்பூர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டுச் சுதந்தரம் பெறுகிறது. மலாயா, சராவாக், சபா ஆகிய பகுதிகளோடு இணந்து, மலேஷியக் குடியரசு பிறக்கிறது.
Operation Cold Store என்னும் நடவடிக்கையால், தொழிற்சங்கங்கள் இரும்புக் கரங்களால் அடக்கப்படுகின்றன.
ஊழலை ஒழிக்க, ஊழல் ஒழிப்பு புலனாய்வுத் துறையைத் (Corrupt Practices Investigation Bureau - CPIB) தன் நேரடிப் பார்வையின் கீழ்க் கொண்டுவந்தார்.
1964 - பல மலாய் - சீன இனக் கலவரங்கள். ஏனோ, மலேஷிய மத்திய அரசு கலவரங்களை அடக்க மறுக்கிறது.
நேருஜியுடன் தில்லியில் மீண்டும் சந்திப்பு.
1965 ஆகஸ்ட் 9 - சிங்கப்பூருக்கும், மத்திய மலேஷிய அரசுக்குக்கும் இடையே பல மனக்கசப்புகள். சிங்கப்பூர் பிரிந்துவந்து தனிநாடாகிறது.
முதல் வேலையாக, இஸ்ரேல் உதவியோடு, பலமான ராணுவம் அமைக்கும் முயற்சிகள் தொடங்குகிறார்.
அண்ணாவுடன் சிங்கப்பூரில் சந்திப்பு. (அண்ணா பற்றி லீ பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் - “தமிழ் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகத் தோன்றிய மொழி. அண்ணா, தமிழில் தங்குத் தடையின்றிப் பேசுபவர். அண்ணா வருகைக்காக மதியம் இரண்டு மணி முதலே மக்கள் காத்திருந்தார்கள். வேறு வேலைகள் இருந்ததால், என் பேச்சை முடித்தவுடன் திரும்பிவிட்டேன். கூட்டம் இரவு 12 மணிவரை நடந்ததாக ராஜரத்னம் சொன்னார். அண்ணாவுக்கு வந்ததுபோல் பெரும் கூட்டம், இதுவரை நேருவுக்கு மட்டும்தான் வந்திருக்கிறது’’).
1966 – தில்லியில், பிரதமர் இந்திரா காந்தியுடன் சந்திப்பு.
ஆங்கிலப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.
1967 - ஆண்களுக்குக் கட்டாய ராணுவச் சட்டம் அமலுக்கு வந்தது.
1968 - தேசியச் சுத்தத் திட்டம்.
1971 - சிங்கப்பூர் நிதி ஆணையம் (Singapore Monetary Authority) தொடக்கம். சிங்கப்பூர் உலகப் பணப் பரிவர்த்தனையின் முக்கிய மையமாகும் தொடக்கம்.
மரம் நடும் இயக்கம் தொடக்கம்.
1972 - தொழிலாளர் நிலையை உயர்த்த, தேசிய ஊதியக் குழு (National Wage Council) அமைக்கப்பட்டது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்னும் அரசு விமான சேவை ஆரம்பம்.
1976 - சீனப் பயணம். உறவுகள் தொடங்குகின்றன.
1978 - சீன நாட்டின் சேர்மேன் டாங் ஷா பிங், சிங்கப்பூர் வருகிறார்.
1981 - சாங்கி விமான நிலையம் திறப்பு விழா.
1983 - தேசிய ஆரோக்கியத் திட்டம் (National Health Plan) நிறைவேற்றப்படுகிறது.
1984 - மருத்துவச் செலவுகளுக்கு உதவும் Medisave திட்டம் அறிமுகம். (இதன் விரிவாக்கமாக, 1990-ல் Medishield, 1993-ல் Medifund திட்டங்கள் வந்தன).
1986 - சிங்கப்பூர் காப்புரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
1987 - சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் சேவை (Singapore Mass Rapid Transit System) தொடங்கப்பட்டது.
1990 - பதவியேற்ற 31 வருடங்களில் மகத்தான சாதனைகள். முதலமைச்சர் பதவியை, கோ சொக் டாங் (Goh Chok Tong) கைகளில் ஒப்படைக்கிறார். ‘‘மூத்த அமைச்சர்” என்னும் பதவியில் அமர்கிறார்.
1992 - PAP கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார்.
1994 - அரசு அதிகாரிகளின் சம்பளம், தனியார் நிறுவனங்கள் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. திறமைசாலிகளை அரசுப் பணிகளுக்கு இழுக்கவும், ஊழலை ஒழிக்கவும் இந்த முயற்சி.
2001 - அறிவுசார் தொழில்நுட்ப உரிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Intellectual Propery Office of Singapore) உருவாக்கப்படுகிறது.
2003 - தேசிய நூலக போர்டு (National Library Board) வாசிப்பு இயக்கம் தொடங்குகிறது. வருடா வருடம் தொடர்கிறது.
2004 - மகன் லீ செயின் லூங், முதலமைச்சராகிறார். லீ “வழி காட்டும் அமைச்சர்” என்னும் பதவி ஏற்கிறார்.
2010 - மனைவி சூ மரணம்.
2011 - 52 வருடங்கள் வகித்த அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்.
2015, ஃபிப்ரவரி 5 - நிமோனியா காய்ச்சல். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
மார்ச் 23, காலை மணி 3.18. 91-ம் வயதில், லீ சகாப்தம் முடிகிறது.
(முற்றும்)