முகப்பு
லீ குவான் யூ

30. உழைக்கும் தோழர்கள் என் பக்கம்!

உற்பத்தித் தொழிற்சாலைகள், நிதி மையம் ஆகியவை காலூன்றும்போது, நாட்டில் தொழிலாளிகள் எண்ணிக்கை கணிசமாகப் பெருகும்.

Updated On : 30 அக்டோபர், 2015 at 12:47 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:56 PM

உற்பத்தித் தொழிற்சாலைகள், நிதி மையம் ஆகியவை காலூன்றும்போது, நாட்டில் தொழிலாளிகள் எண்ணிக்கை கணிசமாகப் பெருகும். தொடக்கத்தில், தொழிலாளிகள் வேலை கிடைத்ததே என்று சந்தோஷப்படுவார்கள். நாட்கள் ஓடும். வேலை நிரந்தரமாகும். நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும், அப்போது, நம் உழைப்பால்தானே முதலாளிக்கு இவ்வளவு லாபம் வருகிறது என்று உழைப்பாளிகள் நினைக்கத் தொடங்குவார்கள். அதிகச் சம்பளம், போனஸ் கேட்பார்கள். முதலாளி - தொழிலாளி இருவர் தரப்பிலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால், இருவரின் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். இல்லையென்றால், தகராறுகள், வேலை நிறுத்தங்கள். அரசாங்கத்துக்கு இக்கட்டான நிலை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன். இருவரில், எந்தத் தரப்புக்கு ஆதரவு தந்தாலும், அடுத்தவர் எகிறுவார்கள். இது எல்லா ஆட்சியாளர்களும் சந்திக்கவேண்டிய நிகழ்வு, தரவேண்டிய விலை.

1922 - இல், சீனாவின் பின்னணி ஆதரவில், நான்யாங் கம்யூனிஸ்ட் கட்சி (Nanyang Communist Party) என்னும் பெயரில் கம்யூனிசம் சிங்கப்பூரில் நுழைந்தது. 1930 - இல், மலேஷியன் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றிக்கொண்டது. தொழிற்சங்கங்களை ஊடுருவத் தொடங்கியது. அடுத்த பத்து வருடங்களில் பெரும்பாலான யூனியன்கள் கம்யூனிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. இடதுசாரிகளின் முக்கிய ஆயுதம் வேலை நிறுத்தம். 1947 - இல் இது உச்சம் தொட்டது. 300 - க்கும் அதிகமான வேலை நிறுத்தங்கள் நடந்தன.

1951 - இல், சிங்கப்பூர் டிரேட் யூனியன் காங்கிரஸ் (Singapore Trade Union Congress - STUC) என்னும் புதிய அமைப்பு உருவானது. முதலில் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு நடந்த இந்தச் சங்கம், நான்கே ஆண்டுகளில் கம்யூனிஸ்ட்கள் வசம் வந்தது. நாட்டின் அதிகபட்சத் தொழிலாளிகள் இதன் அங்கத்தினர்கள். தான் ஆட்சியைப் பிடிக்கவேண்டுமானால், தன் கனவுகளின்படி நாடு வளரவேண்டுமானால், STUC -ன் இரும்புப் பிடியைத் தளர்த்த வேண்டும். லீ எடுத்த வழி, STUC - க்குள் பிளவு ஏற்படுத்துவது. ஆளும் கட்சி நினைத்தால் முடியாத காரியமா?

Advertisement

தொடங்கினார் சதுரங்க ஆட்டம். ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, 1959 - இல், தொழிற்சங்கச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தார். இதன்படி, எந்த யூனியனின் பதிவுரிமையையும் பறிக்கும் திருத்தம் வந்தது. அரசுக்கு எதிர்ப்பான பல சங்கங்கள் முடக்கப்பட்டன. 1961 - இல், கம்யூனிஸ்ட்கள் PAP கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இதைப் பயன்படுத்தி, STUC - ஐயும் லீ உடைத்தார். ஆளும் கட்சிக்கு ஆதரவான National Trade Union Congress (NTUC), Singapore Association of Trade Unions (SATU) என இரண்டு கோஷ்டிகள்.

இது லீ எடுத்துவைத்த முதல் அடிதான். 1963 - இல் கொடுத்தார் மரண அடி. Operation Cold Store என்னும் நடவடிக்கை தொடங்கியது. நூற்றுக்கும் அதிகமான இடதுசாரித் தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். SATU தடை செய்யப்பட்டது. இப்போது, அத்தனை தொழிற்சங்கங்களும் லீ கையில்.

லீ முதலில் தன் அடிப்படைக் கொள்கையைத் தெளிவாக்கினார். தொழிலாளிகளின் ஊதியம் அவர்கள் வேலையில் செலவிடும் நேரத்தின் அடிப்படையில் இருந்தது. இந்த முறையை மாற்றினார். ஒவ்வொருவரும் எத்தனை உற்பத்தி செய்கிறார்களோ, அந்த உற்பத்தித் திறன் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. அன்று, சிங்கப்பூர் தனிநாடான ஆரம்ப நாட்கள்.

மலேஷியாவிலிருந்து பிரிவு, பிரிட்டீஷ் ராணுவ மைய வெளியேறல் ஆகிய காரணங்களால், வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடியது. ஆகவே, லீயின் கருத்தை யூனியன்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். ஏற்றார்கள். படிப்பை முடித்து ஒவ்வொரு வருடமும் 30,000 இளைஞர்கள் வேலை தேடி வருவதை லீ சுட்டிக் காட்டினார். தொழிலாளிகள் வெறுமே கூலிக்கு மாரடித்தால், நிறுவனங்கள் அவர்கள் இடத்தில், புதிய தலைமுறையினரைப் பணியில் அமர்த்திவிடுவார்கள் என்னும் நிதர்சன நிஜத்தைச் சொன்னார்.

தான் வெறுமே மிரட்டுபவரல்ல, சொன்னதைச் செய்பவர் என்று நிரூபித்தார். தடாலடி நடவடிக்கைகள் தொடங்கின. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான தொழிலகங்களில் யூனியன் அமைப்பது தடை செய்யப்பட்டது. விடுமுறை நாட்களில் வேலை பார்த்தால், ஓவர்டைமாக, மூன்று மடங்கு சம்பளம் தரும் பழக்கம் இருந்தது. லீ இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கட்சிப் பாகுபாடில்லாமல், அவருடைய சொந்தக் கட்சியான PAP கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கங்கள் கூட எதிர்க்குரல் எழுப்பினார்கள். லீ ஒவ்வொரு யூனியன் தலைவரையும் தனித்தனியாகச் சந்தித்தார். அவர்களின் மனங்களை மாற்ற முயற்சி செய்தார்.

ஆனால், 1967 - இல், லீயின் சமரசப் பேச்சு எதற்கும் மசியாமல், போர்க்கொடி தூக்கியவர் சுப்பையா. பொதுத்துறை தினக்கூலித் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Public Daily Rated Employees’ Unions Federation) தலைவர். இந்தக் கூட்டமைப்பின் அங்கத்தினர்கள் இந்தியர்கள், துப்புரவுத் தொழிலாளிகள். இவர்களின் தினக்கூலியை ஒரு டாலர் உயர்த்தவேண்டுமென்று கோரிக்கை வைத்தார். லீ, சுப்பையாவையும், அவர் சகாக்களையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். வந்தார்கள். 40 நிமிடப் பேச்சுக்கள். கூலி உயர்வை உடனே தர நாட்டின் நிதிநிலைமை அனுமதிக்காது, 1968 - இல் பரிசீலனை செய்யலாம் என்று லீ சொன்னார். சுப்பையாவும், தோழர்களும் சம்மதிக்கவில்லை. வேலை நிறுத்தம் செய்வதாகப் பயமுறுத்தினார். சலசலப்புக்கு அஞ்சாத நம் பனங்காட்டு நரியார் இப்போது தன் இன்னொரு முகத்தைக் காட்டினார். ‘உங்கள் கூட்டமைப்பில் இருக்கும் மொத்த 15,000 தொழிலாளிகளில் 7000 பேர் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் அரசு அனுமதி (Work Permit) இல்லாதவர்கள். ஸ்ட்ரைக் செய்தால், 7000 பேரையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவோம்.’

சுப்பையாவும் தில்லான தலைவர். அவர் பதில், ‘அரசு அனுமதி இல்லாமல் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிக பட்சம் 3000 மட்டுமே இருக்கும். நீங்கள் செய்வதைச் செய்யுங்கள். வேலை நிறுத்தம் தொடங்கும். லீ அவர்களே, உங்கள் முதலமைச்சர் பதவி யூனியன் ஆதரவில்தான் இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.’

டிசம்பர் 29, 1967. சுப்பையா வேலை நிறுத்தம் அறிவித்தார். துப்புரவுத் தொழிலாளிகள் வராவிட்டால் குப்பை கூளங்கள் மலையாய்க் குவிந்து நாடே நாறும் என்பது அவர் நினைப்பு. லீயும் சண்டையை விடுவதாக இல்லை. பிரச்சனையைத் தொழிலாளர் நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொண்டு போனார். வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று கோர்ட் சொன்னது. சுப்பையா பின்வாங்கினார். பதுங்கிய சுப்பையா இரண்டே மாதங்களில் பாய்ந்தார். அவர் தலைமையில் இயங்கிய பொதுத்துறை தினக்கூலித் துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் (Public Daily Rated Cleansing Workes’ Union) 2000 அங்கத்தினர்கள் முன் அறிவிப்பின்றி வேலை நிறுத்தம் தொடங்கினார்கள். தங்கள் ஊதியத்தை அதிகரிக்காவிட்டால், கூட்டமைப்பின் 15,000 தொழிலாளிகளும் அவர்களோடு களத்தில் குதிப்பார்கள் என்று எச்சரித்தார்கள்.

அரசாங்கம் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று அறிவித்தது. சுப்பையாவும், முக்கிய 14 யூனியன் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். பொதுத்துறை தினக்கூலித் துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் உரிமம் பறிக்கப்பட்டது. அவர்கள் இனிமேல் இயங்க முடியாது. வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் வேலையை இழந்துவிட்டதாகச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது. சுப்பையா ஸ்டிரைக்கைத் தொடர நினைத்தார். தொழிலாளிகளுக்கு வேலை போய்விடும் பயம். மன்னிப்புக் கேட்டார்கள். வேலைக்குத் திரும்பினார்கள்.

இந்த அனுபவம் பிற யூனியன்களிலும் கிலியை உண்டாக்கியது. வேலை நிறுத்தம் தொடங்கும் துணிச்சல் ஒரு யூனியன் தலைவருக்கும் வரவில்லை. அப்படி யாராவது பகற்கனவு கண்டாலும், அவர்களோடு சேர ஒரு தொழிலாளியும் தயாராக இல்லை. கடுமையான செயல்பாட்டால், லீ தொழிற்சங்கங்களின் முதுகெலும்பை முறித்துவிட்டார். லீ சொன்னார், ‘இந்த வேலை நிறுத்தம் சிங்கப்பூரின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை.’ நூறு சதவிகித உண்மை!

இந்த வெற்றியால், லீ முழங்கினார், ‘(வேலை நிறுத்தம் செய்வது) மாபெரும் தேசத் துரோகம். அந்த யூனியன் தலைவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பேன். நீதிமன்றம் போவதெல்லாம் அதற்குப் பிறகுதான்.’ சட்டத்திலும் இதற்கு ஏற்றபடி திருத்தங்கள் கொண்டுவந்தார். இவை நீதியை அவமதிக்கும் பிரதமரின் பேச்சும் செயலுமல்ல. சட்டத்தைவிட, நாட்டு மக்களின் பசியைத் தீர்க்கும் வெறி கொண்ட ஏழை பங்காளரின் நெஞ்சத் துடிப்புக்கள்.

லீயின் இந்த இரும்புக் கர நடவடிக்கைகளின் விளைவு என்ன தெரியுமா? ஜுலை 1961 முதல் செப்டம்பர் 1962 வரையிலான 15 மாதங்களில் நடந்த வேலை நிறுத்தங்கள் 153. 1969 - இல் லீ சுதந்திரச் சிங்கப்பூரின் லகானைக் கைகளில் எடுத்த நான்காம் வருடம் நடந்த வேலை நிறுத்தங்கள் ஜீரோ. ஆமாம், ஒரு வேலை நிறுத்தம்கூட இல்லை.

தொழிலாளிகளுக்கு அன்று இருந்த பல உரிமைகளை லீ பறித்தது நிஜம். ஆனால், அவர் முதலாளித்துவத்தின் கைக்கூலியல்ல. நாட்டின் பொருளாதாரம் என்னும் வண்டி ஓட, முதலாளி, தொழிலாளி என்னும் இரண்டு சக்கரங்களும் தேவை. இந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால், நாடு தடம் புரளும் என்பதை அறிவார். இரண்டு கைகள் நான்கானால்தான் இருவருக்குமே எதிர்காலம்.

லீ தொழில் அதிபர்களோடு தொடர்ந்து பேசினார். அவர் காட்டிய ஈடுபாட்டால், பங்கெடுப்பால், வேலை பார்க்கும் சூழ்நிலை, வசதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டன; ஜப்பானிய ஆலோசகர்கள் ஆலோசனையோடு நவீனத் தரக்கட்டுப்பாட்டு முறைகள் அறிமுகமாயின: தொழிலாளிகளின் திறமைகளைத் தொடர்ந்து பட்டை தீட்டும் பயிற்சிப் பாசறைகள் நிறுவனங்களில் தொடங்கின. உற்பத்தித் திறன் அடிப்படையில், ஊதிய உயர்வுகளை நிர்ணயிக்கும் மேனேஜ்மென்ட் நெறிமுறைகள் நிறைவேறின.

தொழிலாளர் நலம் காக்க, 1972 - இல், தேசீய ஊதியக் குழு (National Wage Council) அமைத்தார். இது, அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் கொண்ட முக்கோணக் கவுன்சில். உற்பத்தி செலவுகள், முதலீடு, லாபம், ஊதியங்கள் ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரித்து, முத்தரப்பினரும் தங்கள் கருத்துக்களை விவாதித்து, இந்தக் கவுன்சில் முடிவெடுக்கும். இந்த முடிவை அனைத்துத் தரப்பினரும் ஏற்கவேண்டும்,

நிர்வாகம் - தொழிலாளிகள் நடுவே வரும் கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண, 1960 - இல், அரசாங்கம் தொழில் நடுவர் நீதிமன்றம் தொடங்கியது. பேச்சு வார்த்தைகளால் தீர்வு கண்டு, வேலை நிறுத்தங்களைத் தவிர்ப்பது இந்த மன்றத்தின் பணி. இதேபோல், பிற நாட்டு நிறுவனங்களோடு வரும் பிரச்சனைகளுக்குச் சுமுக முடிவு காண, பன்னாட்டு நடுவர் மையம் (International Arbitration Centre) 1991 - இல் அமைக்கப்பட்டது. சிங்கப்பூரின் தொழிற்சூழல் அமைதிப்பூங்காவாக இருப்பதற்கு இத்தகைய வருமுன் காக்கும் முயற்சிகள்தாம் காரணம்.

தங்கள் வளர்ச்சிக்கு முதலாளிகளையும், அரசாங்கத்தையும் நம்பியிருக்காமல், சொந்தக் கால்களில் நிற்கும் தன்னம்பிக்கையைத் தொழிலாளிகள் மனங்களில் உருவாக்குவதில் லீ உறுதியாக இருந்தார். இந்தப் பணியைச் செம்மையாகச் செய்துமுடிக்க, பிசினஸ் பற்றிய ஆழ்ந்த அறிவு, பழுத்த அனுபவம் கொண்ட ஒரு தலைவர் வேண்டும். அவர் தொழிலாளிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பெற்றவராக இருக்கவேண்டும்.

லீ மனதில் வந்த ஒரே மனிதர், நண்பர் தேவன் நாயர். ஒரே ஒரு பிரச்சனை, அவர் அப்போது மலேஷியக் குடிமகன். அங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். லீ அழைத்தவுடன், ஒரு விநாடியும் தயங்காமல், தன் மலேஷியக் குடியுரிமையையும், நாடாளுமன்றப் பதவியையும் துறந்தார். சிங்கப்பூர் வந்தார். தேசிய டிரேட் யூனியன் காங்கிரஸ் (National Trade Union Congress - சுருக்கமாக NTUC) என்னும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரானார். இந்த அமைப்பில், கம்யூனிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் இருந்த சில யூனியன்கள் தவிர, மற்ற அத்தனை தொழிற்சங்கங்களும் சேர்ந்தார்கள். சிங்கப்பூரின் சுமார் 90 சதவிகிதத் தொழிலாளர்களுக்குத் தேவன் நாயர் தலைவர், லீ வழிகாட்டி.

இந்த மாபெரும் சக்தி இதுவரை, நிறுவனங்களோடு சச்சரவுகள், வேலை நிறுத்தங்கள் என்று விழலுக்கு இறைத்த நீராகிக்கொண்டிருந்தது. இதைத் தேவன் நாயர் ஆக்க சக்தியாக்கினார். அப்போது டாக்சி சர்வீஸ் ஊழல் சாம்ரஜ்ஜியமாக, தாதாக்கள் உலகமாக இருந்தது. சூடுபோட்ட மீட்டர்கள், இஷ்டத்துக்குக் கேட்கும் சார்ஜ், சாமான்னியர்கள் டாக்சிகளில் பயணிக்கவே பயந்தார்கள். இந்த அராஜகத்துக்குத் தீர்வுகட்ட முடிவெடுத்தார் தேவன் நாயர் மக்கள் மனங்களில் தொழிலாளிகள் பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்த அற்புத வாய்ப்பு.

தேவன் நாயர் NTUC பதாகையில் ஓட்டுநர்கள் கூட்டுறவுச் சங்கம் அமைத்தார். வாடிக்கையாளர்கள் எப்போது கூப்பிட்டாலும் மறுக்காமல் சவாரிக்குப் போதல், நிர்ணயித்த கட்டணம் வசூலித்தல், பணிவான பழகுமுறை ஆகிய அடிப்படைக் கொள்கைகளில் அவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்தார். மக்கள் அமோக ஆதரவு தந்தார்கள். 25 வருடங்கள் ஓடின. 10,000 டாக்சிகள், 200 ஸ்கூல் பஸ்கள் இந்தக் கூட்டுறவுச் சங்கத்திடம்.

டாக்சி சர்வீஸின் வெற்றி, யூனியன்களைப் புதிய பாதைகளில் பயணிக்கவைத்தது. பலசரக்குக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள், இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆகிய பல்துறை முயற்சிகள். அத்தனையும் வெற்றி கண்டன. இந்த ஜெயங்களின் அங்கீகாரக் கிரீடமாக, நாடு 1981 - இல் தேவன் நாயரை ஜனாதிபதியாக்கிப் பெருமைப்பட்டது.

நான்கே வருடங்களில், நாட்டின் தலைமகன் அவமானச் சின்னமானார். பாராளுமன்றத்தில், லீ, தேவன் நாயர்மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார், ‘தேவன் நாயர் கடந்த ஒரு வருடமாக மதுவுக்கு அடிமையாகிவிட்டார். ஒரு வருடமாக இதை என்னிடமிருந்து மறைத்துவிட்டார். ஐந்து மருத்துவ நிபுணர்கள் நாயரைப் பரிசோதனை செய்தார்கள். அவர்கள் ஆய்வுகளின்படி, பல ஆண்டுகளாகத் தொடரும் மதுப்பழக்கத்தால், நாயர் தன் நுண்ணறிவையும், நிகழ்வுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் திறனையும் இழந்துவிட்டார். சுய கட்டுப்பாடும், பொறுப்புணர்ச்சியும் அவரிடம் இல்லவே இல்லை. இவற்றை நேற்று இரவு என்னிடம் ஒத்துக்கொண்டுவிட்டார். தன் ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்’ என்று அறிவித்தார்.

இதற்கு முன்னால் நடந்த சில நிகழ்ச்சிகள் மர்மம், மர்மம்…..அரசு தந்த அறிக்கையின் சுருக்கப்படி:

1985, மார்ச் 9 முதல் 18 வரை தேவன் நாயர் சாராவாக் பகுதிக்குத் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டார். அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு, பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவது, அவர்கள் உடலைத் தடவுவது போன்ற கீழ்த்தரமான செய்கைகளில் ஈடுபட்டார். சாராவாக் பகுதியின் அரசு மருத்துவர், தேவன் நாயரின் தனி மருத்துவர் டாக்டர் ஜான் தம்பையாவைத் தொடர்புகொண்டு விவரங்கள் சொன்னார். இதன்படி, நாயர் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டார். அரசின் பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள், நாயர் கொடிய மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதாகத் தீர்ப்புச் சொன்னார்கள்.

தேவன் நாயர் விசாரிக்கப்பட்டார். அப்போது வெளியான உண்மைகள் - தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காமலிருப்பதற்காக அடிக்கடி விக் அணிந்து, டிரைவர் இல்லாமல் தானே காரை ஓட்டிக்கொண்டுபோவார், ஒரு ஜெர்மனியப் பெண்ணை அடிக்கடி சந்திப்பார், அவர்களுக்குள் தகாத உறவுகள் இருந்தன, என்னும் விஷயங்கள். நாயரின் மனைவி தனலட்சுமியும் இவை உண்மைகள்தாம் என்ற கவலையில் இருக்கிறார். இந்தக் காரணங்களால், நாயர் தன் ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்யவேண்டுமென்று முதலமைச்சர் லீ அவருக்கு ஆலோசனை சொன்னார். நாயர் முதலில் மறுத்தார். ஆனால், ராஜிநாமா செய்யாவிட்டால், பதவி நீக்கம் செய்யப்படும் அவமானத்தை அவர் சந்திக்கவேண்டும் என்று லீ விளக்கியபின், பதவி விலகச் சம்மதித்தார்.

நாயர் இதை மறுத்தார். அத்தனையும் லீயின் சதி என்று மாற்றுக்கணை வீசினார். அவருடைய மகன்கள் அப்பா மனநிலை பிறழிவிட்டார் என்று லீ சார்பாகச் சாட்சி சொன்னார்கள். ஆனால் நாயரின் மனைவி தனலட்சுமி கணவருக்குத் துணை நின்றார். இருவரும், 1988- இல் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின், அங்கிருந்து கனடா போனார்கள். நாயருக்கு மறதி நோய் (Dementia) வந்தது. ஏப்ரல் 2005 - இல் தனலட்சுமி மறைந்தார். டிசம்பரில் நாயர் மரணம் தொடர்ந்தது.

சிங்கப்பூரின் வரலாற்றில், தேவன் நாயர் மேல் கறை படிந்திருக்கலாம், ஆனால், சிங்கப்பூரின் தொழிற்சங்கச் சரித்திரத்தில் அவர் காலடித்தடங்கள் மறக்க முடியாதவை, அழிக்க முடியாதவை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.