31. ஆளுக்கொரு வீடு கட்டுவோம்!
எல்லா சிங்கப்பூரியர்களும் தங்களுக்குச் சொந்தமான அழகான, வசதியான வீடுகளில், சுகாதாரச் சூழலில் வாழவேண்டும் என்பது லீயின் கனவுகளில் ஒன்று.
எல்லா சிங்கப்பூரியர்களும் தங்களுக்குச் சொந்தமான அழகான, வசதியான வீடுகளில், சுகாதாரச் சூழலில் வாழவேண்டும் என்பது லீயின் கனவுகளில் ஒன்று. இது கனவு மட்டுமல்ல, வருங்காலச் சமுதாயத்துக்குத் தன் கடமை என்று லீ நினைத்தார். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. லீயைப் பொறுத்தவரை, வீடு என்பது, செங்கல், சிமெண்ட், மரம், கண்ணாடி ஆகியவற்றால் எழுப்பப்பட்ட வெறும் கட்டடமல்ல: வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும், உரிமையாளர்களின் உழைப்பு இருக்கும், வியர்வை இருக்கும், கணக்கில்லாத் தியாகங்கள் இருக்கும். அவர்கள் வாழ்வின் ஜனனங்கள், மரணங்கள், சிரிப்புக்கள், அழுகைகள், உறவுகள், பிரிவுகள் என எல்லாமே நடப்பது நான்கு சுவர்களுக்குள்தான். ஆகவே, ஒவ்வொரு மனிதனும் தன் வீட்டைக் காதலிக்கிறான். சொந்த வீடு வாங்க ஆசைப்படுகிறான்.
1959 காலகட்டத்தில், சிங்கப்பூர் ஒரு ஏழை நாடு. பாலைவனச் சோலையாக இருந்த ஒரு சில பணக்காரப் பகுதிகள் தவிர, ஏராளமான குடும்பங்கள் சுகாதாரமற்ற குடிசைகள் நிறைந்த சேரிப்பகுதிகளில் வசித்தார்கள். நாய்களும், பன்றிகளும் வீட்டைச் சுற்றி ஓடும். சில சமயங்களில் வீட்டுக்குள்ளும். 1819 முதல் ஆட்சியில் இருந்த பிரிட்டீஷ் அரசு வீட்டு வசதிகள் தருவதற்காக முதல் முயற்சி எடுத்ததே 108 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகுதான். அதுவும், வெறும் பெயரளவுக்குத்தான். 1927 - இல், சிங்கப்பூர் முன்னேற்ற வாரியம் (Singapore Improvement Trust -SIT) என்னும் அமைப்பை ஏற்படுத்தினார்கள். 1927 முதல் 1959 வரை SIT கட்டிய குடியிருப்புகள் 23,000 மட்டுமே. இவையும் தரமானதாக இல்லை. இங்கே வசித்தவர்களிடம், பழக்க தோஷத்தால், அடிப்படைச் சுகாதார உணர்வுகளே இருக்கவில்லை. புது வீடுகளில் ஆடுகள், பன்றிகள் வளர்த்தார்கள். குடியிருப்புகளைச் சேரிகளாக்கிவிட்டார்கள்.
எல்லாச் சிங்கப்பூரியர்களுக்கும், சொந்த வீடு தரவேண்டும் என்று லீ ஆசைப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் சொன்னார், ‘சொந்த வீடு வைத்திருப்பவனின் கால்கள் அவன் வாழும் மண்ணில் ஆழமாக ஊன்றும் வேர்களாகின்றன. தன் வீட்டைக் காதலிப்பவன், அனிச்சைச் செயலாக நாட்டை நேசிக்கிறான்.’
Advertisement
இதனால், தன் கட்சி போட்டியிட்ட முதல் பொதுத்தேர்தலிலேயே, 1959 - லேயே, ஏழைகளுக்கு மலிவு விலை வீடுகள் கட்டித்தருவதாகத் தேர்தல் வாக்குறுதி தந்திருந்தார். லீ சொன்னார், ‘உலகின் பல பாகங்களில், ஏராளமான மக்கள் நடைபாதைகளில் பிறக்கிறார்கள், நடைபாதைகளில் வளர்கிறார்கள், நடைபாதைகளில் வாழ்கிறார்கள். இது சிங்கப்பூரில் நடக்க நான் அனுமதிக்கமாட்டேன்.’
லீ சொன்னதைச் செய்பவர். பதவிக்கு வந்தவுடனேயே, 1960 - இல் SIT - ஐக் கலைத்தார். சிங்கப்பூர் வீட்டு வசதி முன்னேற்ற வாரியம் (Singapore Housing Development Board) தொடங்கினார். இந்த வாரியம் ஆரம்ப நாட்களில் குடியிருப்புகளைக் கட்டி, குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காகக் குறைந்த வாடகையில் தந்தது. இவர்களுள் பலர் வீடுகளைச் சொந்தமாக வாங்க விரும்பினார்கள். இதற்காக, வாரியம், 1964 - இல், Home Ownership Scheme என்னும் திட்டம் அறிமுகம் செய்தது. வீட்டின் மதிப்பில் 20 சதவிகிதம் முன்பணம் தரவேண்டும்: மீதியைக் குறைந்த வட்டியில், 15 வருடத்தில் திருப்பித்தரும் கடனாக அரசாங்கம் தரும்.
நல்ல திட்டம், ஏராளமான அடிமட்ட மக்களை ஈர்க்கும் திட்டம், அவர்கள் கனவுகளை நிறைவேற்றும் திட்டம் என்று லீ நினைத்தார். அவர் கடை விரித்தும் கொள்வாரில்லை. வெகு சிலரே புது வீடு வாங்கினார்கள். மற்றவர்கள் குடிசைகளிலேயே தொடர்ந்தார்கள். ஏன் என்று லீ விசாரித்தார், ஆராய்ந்தார். ஒரே ஒரு காரணம்தான். 20 சதவிகித முன்பணம் அவர்களிடம் இல்லை. அதிகக் கடன் தரவும் அரசிடம் கையிருப்பு இல்லை. என்ன செய்யலாம்? மனமிருந்தால், மார்க்கம் உண்டு. லீ மார்க்கம் கண்டார். தொழிலாளர்கள் தங்கள் சேமநல நிதி (Provident Fund) யிலிருந்து இந்த 20 சதவிகித மொத்த முன்பணத்தையும் செலுத்தலாம் என்று அரசின் அனுமதி தந்தார்.
லீ கண்ட இன்னொரு பிரச்சனை, வீடுகள் விலை வருடா வருடம் அதிகமாகிக் கொண்டிருந்தது. காரணம், நில விலை உயர்வு. நில உரிமையாளர்களும், இடைத் தரகர்களும், அடிக்கடி விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் பார்த்தார்கள். இந்தச் சுமை வீடு வாங்கும் சாமானியன் தலையில் விழுந்தது. பெரும்பாலும், அவன் பட்ஜெட்டைத் தாண்டி எகிறியது. லீ தனிவழி கண்டார். எல்லா நிலங்களுக்கும், நவம்பர் 3, 1973 விலைதான் தொடர்ந்து நீடிக்கும், எந்தப் பொதுநிலத்தையும் இந்த விலைக்கு வாங்கும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு என்று அறிவித்தார். நில வாங்கல் விற்கலில் கறுப்புச் சந்தை ஒழிந்தது.
1960 முதல் 1965 வரை, வீட்டு வசதி வாரியம், ஒருவகைக் குடிசை மாற்று வாரியமாகத்தான் செயல்பட்டது. குடிசைவாழ் ஏழை மக்களுக்கு அடுக்குக் குடியிருப்புகள் கட்டித் தந்தார்கள். இந்த ஐந்து வருடங்களில் வீட்டு வசதி வாரியம் கட்டிய குடியிருப்புகள் 54,430. சிங்கப்பூர் வரலாற்றில், இத்தகைய வீட்டுக் கட்டுமானம் எப்போதும் நடந்ததே கிடையாது.
இப்படி லீ குடிசைகளை நீக்கிக் குடியிருப்புகள் எழுப்ப வெறித்தனமாக உழைத்துக்கொண்டிருந்தபோது, சிலர் குடியிருப்புக்களைக் குடிசைகளாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சில சாம்பிள்கள்.
பலர் பன்றி வளர்த்தார்கள். தங்களோடு இந்தப் பன்றிகளையும் அடுக்கு மாடிக் கட்டடங்களில் தங்க வைத்தார்கள். இன்னொரு குடும்பத்தில் 12 குழந்தைகள், 12 கோழிகள். இவையும் குடும்பத்தோடு குடியேறின. குடியிருப்புகளில் மாடியேற லிஃப்ட்கள் இருந்தன. ஆனால், யாரும் இவற்றைப் பயன்படுத்தவேயில்லை. இவற்றில் பயணிக்க பயம். இதேபோல் வீடுகளில் இருந்த மின்சார விளக்குகளை ஒரு சில குடும்பங்களே உபயோகித்தார்கள். குடிசைகளின் அரிக்கேன் விளக்குகளே தொடர்ந்து குடியிருப்புகளில் வெளிச்சம் போட்டன. வீடுகளிலும், அண்டைய இடங்களிலும், பொட்டிக் கடைகள் திறந்தார்கள். சிகரெட், மிட்டாய், பிஸ்கெட் வியாபாரம் அமோகமாக நடந்தது. குடிசைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அவர்களை லீ அடுக்குக் குடியிருப்புகளுக்கு அழைத்துவந்தார். அவர்களோ, குடிசைகளைக் குடியிருப்புகளுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். இன்னும் ஒரு பிரச்சனை. பெரும்பாலான குடிசைவாசிகள் தங்கள் பகுதிகளிலிருந்து வீடு மாறி வரவே தயாராக இல்லை. சிலரை அழைத்துவர வேண்டியிருந்தது: பலரை இழுத்துவர வேண்டிய கட்டாயம்.
குடிசைகளில், குப்பை, கூளங்கள், பன்றிகள், கோழிகள் நடுவே வாழ்ந்து பழகியவர்கள் மனங்களில், சுத்தம், சுகாதாரம் என்றால் என்னவென்றே புரியவைப்பது சிரமமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில், வாழ்க்கைத் தரம் உயரும்போது இந்த மனமாற்றம் வந்துவிடும் என்று லீ நம்பினார். இந்த நம்பிக்கை பலித்தது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தோன்றிவிட்டது.
லீ இதைப் பயன்படுத்திக்கொண்டார். பழைய வீடுகளைப் புதுப்பிக்கும் கடமையை வாரியம் ஏற்றுக்கொண்டது. சிங்கப்பூருக்கு இதில் முன் அனுபவம் கிடையாது. செய்யும் வேலை உலகத்தரத்தில் இருக்கவேண்டும் என்பதில் லீ உறுதியாக இருந்தார். வாரியத்தின் பொறியியல் வல்லுநர்கள், வீட்டுப் புனரமைப்புத் தொழில் நுட்பத்தில் முன்னோடிகளாக இருக்கும் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் போனார்கள். அந்த அறிவின் அடிப்படையில், கன கச்சிதமாகக் குடியிருப்புகளை மாற்றியமைத்தார்கள்.
சிங்கப்பூரின் பொருளாதாரம் முன்னேறத் தொடங்கியது. தொழில் வளர்ச்சியால், வேலை வாய்ப்புகள் அதிகமாயின. தொழிலாளிகளின் ஊதியமும் பெருகியது. இதனால், வந்தது ஒரு சிக்கல். எல்லோரும் சொந்த வீடுகளுக்கு ஆசைப்பட்டார்கள். அத்தனை வீடுகள் இல்லை. இதனால், வீட்டு விலை எகிறத் தொடங்கியது
சிங்கப்பூர் சின்ன நாடு. அதிலும், பெரும்பகுதி சதுப்பு நிலங்கள். வீடுகளின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்குக் குடியிருப்புகள் கட்டத் தேவையான காலி நிலம் தட்டுப்பாடு. ஆகவே, வாரியம் வீணாய்க் கிடந்த சதுப்பு நிலங்களைச் சீரமைத்துப் புதிய டவுன்ஷிப்களை உருவாக்கினார்கள். இவை அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக வரவில்லை. வாரியம், எல்லா டவுன்ஷிப்களும் கடைப்பிடிக்கவேண்டிய நகரத் திட்டம் (Town Planning) தீட்டினார்கள். எல்லா டவுன்ஷிப்களிலும், கல்வி நிலையங்கள், ஷாப்பிங் சென்டர், சூப்பர் மார்க்கெட்கள், மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள், பொழுதுபோக்கு மையங்கள், நூலகங்கள், உணவகங்கள், காவல், தீயணைப்பு நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், போக்குவரத்து வசதிகள் என மக்களின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்யும் முழு வசதிகளும் இருக்கவேண்டும். இந்தத் திட்டத்தில் சின்ன மாற்றம்கூடச் செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
1961 - இல் முதலில் வந்தது குவீன்ஸ்டவுன் (Queenstown) டவுன்ஷிப். சதுப்பு நிலமாக, மக்கள் நடமாட முடியாத இருந்த இந்த நிலத்தைப் பொறியியல் வல்லுநர்கள் சொகுசுக் குடியிருப்புகளாக மறுபிறவி எடுக்கவைத்தார்கள். இவை, ஒன்று, இரண்டு, மூன்று அறைகள் கொண்டவை என மூன்று வகை அடுக்குக் குடியிருப்புகள். 1952 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் இங்கே கட்டப்பட்ட குடியிருப்புகள் 19,372. இவற்றுள் பெரும்பாலானவை வந்தது 1962 - க்குப் பிறகுதான்!
1965 - இல், தோ பாயோ (Toa Payoh) - வில் இரண்டாம் டவுன்ஷிப் வந்தது. 1975 வரை இந்த டவுன்ஷிப்கள் நகரத்திலும், புறநகர்ப் பகுதிகளிலும் மட்டுமே வந்தன. நிலத் தட்டுப்பாட்டால், புதிய டவுன்ஷிப்களை நகரத்தின் மையப்பகுதியிலிருந்து தூரத்தில் கட்டவேண்டிய கட்டாயம். நகருக்கு வெளியேயும், கிராமப்புறங்களிலும் வரத் தொடங்கின.எத்தனைதான் போக்குவரத்து வசதிகள் கொடுத்தாலும், பயண நேரம் அதிகமாவதைத் தடுக்கமுடியாது. இந்தப் பயண நேரம், தொழிலாளிகள் தங்கள் குடும்பத்தோடு செலவிடுவதைத் தடுக்கும் விரய நேரம்.
லீ இதற்கும் தீர்வு வைத்திருந்தார். சுற்றுப்புறச் சூழலை எந்த விதத்திலும் பாதிக்காத தொழிற்சாலைகள் இந்த குடியிருப்புகளின் அருகே வர முயற்சிகள் செய்தார். பிலிப்ஸ், அய்வா ஸீமென்ஸ், ஆப்பிள், காம்பாக், ஹெச்.பி, மோட்டரோலா, டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், ஹிட்டாச்சி, மிட்சுபிட்சி போன்றோர் நகருக்கு வெளியே தொழிற்சாலைகள் அமைத்தார்கள். ஆண்கள் மட்டுமல்லாது, சுமார் ஒன்றரை லட்சம் கிராமப் பெண்கள் வேலை பெற இந்தத் தொழிலகங்கள் வாய்ப்புக் கதவுகள் திறந்தன.
குடிசைவாசிகளான சமுதாய அடிமட்டத்தினரின் வீட்டுப் பிரச்சனைக்கு லீ வழி கண்டுவிட்டார். அடுத்து அவர் பார்வை, நடுத்தர வர்க்கத்தினர் பக்கம் திரும்பியது. 1974 முதல் 1982 வரை இவர்களுக்காகப் பல்லாயிரம் குடியிருப்புகள் எழுந்தன. அடுத்து, மேட்டுக்குடி மக்கள். வருமானத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்களும் சிங்கப்பூரியர்கள்தாமே? அவர்கள் தங்கள் அறிவாலும், உழைப்பாலும் அதிகப் பணம் சம்பாதிப்பதையும், அதிக வருமான வரி கட்டுவதையும் தவிர வேறு என்ன பாவம் செய்தார்கள்? ஆகவே, 1999 முதல் உயர் மட்டத்தினர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எக்ஸிக்யூட்டிவ் தரப்பு வீடுகளை அரசாங்கம் கட்டியது. இவை கார் பார்க்கிங் வசதிகள் கொண்டவை. முத்தரப்பினருக்கும், வீடுகளை வாரியம் 99 வருடக் குத்தகை அடிப்படையில் வழங்குகிறது.
ஐ.நா. சபையின் அங்கமான Building and Social Housing Foundation, உலகின் அனைத்து நாடுகளிலும் அரசாங்கம் வழங்கும் கட்டட வசதிகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றுள் முன்னோடியாக இருக்கும் நாட்டுக்கு World Habitat Award என்னும் கெளரவம் வழங்குகிறது. 1992 - இல் இந்தக் கிரீடம், சிங்கப்பூரின் தெம்பினிஸ் (Tampines) டவுன்ஷிப்புக்குக் கிடைத்தது. 20.61 சதுரக் கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட தெம்பினிஸில், 1,52,000 குடியிருப்புகள் இருக்கின்றன. 2,37,800 பேருக்கு வசதியான வாழ்விடம் தருகின்றன.
தெம்பினிஸில் இருக்கும் சில முக்கிய வசதிகள்:
· 12 ஆரம்பப் பள்ளிகள்
· 9 நடுநிலைப் பள்ளிகள்
· ஒரு ஜூனியர் கல்லூரி
· ஒரு பாலிடெக்னிக் கல்லூரி
· ஒரு இன்டர்நேஷனல் பள்ளி
· ஒரு விளையாட்டு ஸ்டேடியம்
· 6 மால்கள் (Malls). இவற்றில் பல நூறு கடைகள்
· சர்ச்
· ம்யூசியம்
· சாங்கி பீச்
· ஏராளமான பூங்காக்கள், 5 4, 3 நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், தியேட்டர்கள்…
இன்று, 22 டவுன்ஷிப்கள். இவற்றில் 11,000 அடுக்குமாடிக் கட்டடங்கள் உள்ளன. இவை அத்தனையுமே, தெம்பினிஸுக்குச் சோடை போகிறவையல்ல.
சொந்த வீடு வாங்குவதால் நாட்டுப்பற்றை வளர்க்கலாம் என்று நம்பிய, நிரூபித்த லீ, சிங்கபூரிலிருந்த மூன்று முக்கிய இனத்தவர்களான சீனர்கள், மலாய்கள், இந்தியர்கள் மத்தியில் இன ஒற்றுமையை வளர்க்கவும், வீட்டு வசதிகளைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
லீயின் யுக்தி இதுதான் - சிங்கப்பூர் மக்கள் தொகையில் சீனர்கள் 74.2 சதவிகிதம்: மலாய்கள் 13.3 சதவிகிதம்: இந்தியர்கள் 9.2 சதவிகிதம்: பிறர் 3.3 சதவிகிதம். ஒவ்வொரு கட்டடத்திலும், மக்கள்தொகைச் சதவிகிதப்படி ஒவ்வொரு இனத்தவருக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதனால், எந்த இனமுமே தீவாக வாழமுடியாது. எல்லோரும் சிங்கப்பூரியர் என்னும் உணர்வோடு சேர்ந்து வாழ்கிறார்கள்.
சிங்கப்பூரின் வீட்டு வசதி வளர்ச்சியில், இன்னொரு முக்கிய அம்சம், அப்பட்டமான நேர்மை. ஒதுக்கீடு செய்வதில் எந்தவித அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறுக்கீடோ, சிபாரிசோ, பாரபட்சமோ கிடையவே கிடையாது. தேவைகள், தகுதிகள் அடிப்படையில் மட்டுமே குடியிருப்புகள் வழங்கப்படுகின்றன. பல லட்சம் ஒதுக்கீடுகள் இதுவரை நடந்திருக்கின்றன. ஒரு முணுமுணுப்போ, குறையோ, குற்றச்சாட்டோ இதுவரை இல்லை.
இன்று சிங்கப்பூரின் 80 சதவிகித மக்கள் அரசாங்க வீடுகளில்தான் வசிக்கிறார்கள். இது சிங்கப்பூர் வீட்டு வசதி வாரியத்தின் மாபெரும் சாதனை.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடியிருப்புத் தரும் லீயின் ஆசைக் கனவின் உச்ச கட்டம், தஞ்சோங் பகார் (Tanjong Pagar) என்னும் இடத்தில், டக்ஸ்டன் (Duxton) பகுதியில் தலை நிமிர்ந்து நிற்கும் பினாக்கிள் (Pinnacle) என்னும் குடியிருப்பு. 50 மாடிகள், வானுயர்ந்த 536 அடியில் ஏழு கோபுரங்கள், 1848 குடியிருப்புகள். 26 - வது மாடியிலும், 50 - வது மாடியிலும், கட்டடங்களை இணைக்கும் விண்பாலங்கள். 26 ஆம் மாடிப்பாலம், பினாக்கிளிலில் வசிப்பவர்களுக்கு மட்டுமே. 50 மாடிப் பாலத்துக்குப் பொதுமக்களும் வரலாம். இரு பாலங்களிலும், ஓடுதளங்கள், பூங்காக்கள் இருக்கின்றன. 50வது மாடியிலிருந்து ஒட்டுமொத்தச் சிங்கப்பூரையும் கண்டு களிக்கலாம்.
குறைந்த அளவு நிலப்பரப்பில், எத்தனை அதிகம் வசதியான குடியிருப்புகள் கட்ட முடியும் என்னும் எண்ணம் லீ மனதில் மின்னல் வெட்டியது. அதன் பலன்தான், பினாக்கிள். டக்ஸ்டன் பகுதியை அவர்தான் தேர்வு செய்தார். அழகு, வசதி, பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டம் என அத்தனை அம்சங்களிலும், உலகின் அத்தனை வானளாவும் கட்டடங்களுக்கும் சவால் விடவேண்டும், முன்னோடியாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருந்தார்.
உலகின் தலை சிறந்த கட்டடக் கலைஞர்களின் அற்புதப் படைப்பாக, காலமெல்லாம் அவர்கள் கற்பனை வளத்தின், கலை நயத்தின் புகழ் பாடும் படைப்பாக இருக்கவேண்டும். இந்தத் திறமையைச் சலித்தெடுக்க, வீட்டுவசதி வாரியம், 2001 - இல், உலகளாவிய வடிவமைப்புப் போட்டி நடத்தியது. 202 கட்டடக் கலைஞர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். ஒன்றை ஒன்று மிஞ்சும் கற்பனைகள். ARC Studio Architecture + Urbanism, RSP Architects Planners & Engineers (Pte) Ltd ஆகிய இரு சிங்கப்பூர் வடிவமைப்பு நிறுவனங்களின் கூட்டணி முதல் பரிசை வென்றது. வெறும் ஆறே ஏக்கர்களில் 1,848 குடியிருப்புகள்! 2005 - இல் தொடங்கி, ஐந்தே வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டது. வேகத்தில் மட்டுமல்ல, தரம், வடிவமைப்பு, அழகு, வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் உலக நம்பர் 1. இந்த முதன்மையை அங்கீகரித்தார்கள், அமெரிக்காவின் Council on Tall Buildings and Urban Habitat அமைப்பு, 2010 - இல் ஆசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் மிகச் சிறந்த உயர்ந்த கட்டடம் (Best Tall Building Asia and Australasia Award) என்னும் பரிசைத் தந்து கெளரவித்தார்கள்.
லீக்கு அளவிடமுடியாத சந்தோஷம். பினாக்கிள் புதிய உடைமையாளர்களுக்குச் சாவிகள் வழங்கும் விழா. லீ பேசினார், ‘வீட்டு வசதி வழங்குவதில், இன்றைய நாள் ஒரு முக்கிய மைல்கல். இதே இடத்தில்தான், 47 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டு வசதி வாரியம், முதல் வாடகைக் குடியிருப்புகள் கட்டியது. இன்று, இங்கே வானளவும் பினாக்கிள். வடிவமைப்பிலும், கட்டடங்களின் தரத்திலும் எத்தனை தூரம் முன்னேறி வந்திருக்கிறோம் என்பதற்கு இந்தப் பினாக்கிள் உதாரணம். சிங்கப்பூரின் உருமாற்றம் பிரமிக்க வைக்கும் மாற்றம். 1960 - களில், நெரிசலான இடங்களிலும், குடிசைகளிலும் நாம் வசித்தோம். மக்கள் ஏழ்மையில் வாடினார்கள். கடினமான வாழ்க்கை. வசிக்கும் இடங்களில் குடிநீர் கிடையாது, நல்ல கழிப்பறைகள் கிடையாது. இருப்பவர்களுக்கே வீடுகள் இல்லாதபோது, மக்கள் தொகை ஆண்டுக்கு நான்கரை சதவிகிதத்தில் பெருகிக்கொண்டிருந்தது. அப்போது, ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட குடியிருப்புகள் கட்டி வாடகைக்குத் தருவதைத் தவிர, பிரச்சனையைத் தீர்க்கும் வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு சிங்கப்பூரியனுக்கும் சொந்த வீடு இருந்தால்தான், அவர்களுக்கு நாட்டின்மேல் இறுக்கமான பந்தப் பிணைப்பு ஏற்படும் என்று நான் நினைத்தேன். 1964 - இல், Home Ownership Scheme தொடங்கியபோது, அது வெற்றி காணும் என்று நம்பியவர்கள் ஒரு சிலரே.
இன்று பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் வசிப்பது வாடகை வீடுகளில் அல்ல, தங்கள் சொந்த இல்லங்களில்! இந்தச் சொந்தம் அவர்கள் வேர்களை ஆழமாக ஊன்றச் செய்தது. தேசீய உணர்வை உருவாக்கும் அஸ்திவாரம் இதுதான்.
இது என் வீடு என்னும் பெருமித உணர்வு, தங்கள் வீடுகளைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது, குடியிருப்புகள் சேரிகளாகாமல் தடுக்கிறது. ஒவ்வொரு சிங்கப்பூரியனையும், தன் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளும் உந்துதல் சக்தியாகி, கடுமையாக உழைக்க வைக்கிறது.
1960 - களில், நம் மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் வசித்தார்கள். 1980 - களில் இது 80 சதவிகிதமாக உயர்ந்தது. வெகுசில நாடுகளே எட்டிய சாதனை இது.
இந்தப் பினாக்கிள் குடியிருப்பு நம் விடாமுயற்சியையும், திறமைகளையும் நிரூபிக்கும் சின்னம், சிங்கப்பூரின் வளர்ச்சியில் நாம் இன்னும் பினாக்கிளை எட்டவில்லை. (Pinnacle என்னும் ஆங்கில வார்த்தைக்கு, ‘சிகரம்’ என்று அர்த்தம்.)…நாம் ஒற்றுமையாக இருந்து, புத்திசாலித்தனமாகவும், கடுமையாகவும் உழைத்தால், அந்தச் சிகரம் நம் வசப்படும்.’
1960 - இல் பிறந்த சிங்கப்பூர் வீட்டு வசதி வாரியத்தின் 50 வருடச் சாதனைச் சரித்திரத்தை, இத்தனை உணர்ச்சிபூர்வமாக, நெஞ்சில் ஆழமாகப் பதியவைக்க லீ ஒருவரால் மட்டுமே முடியும். ஏனென்றால், இந்தச் சாதனையின் சிருஷ்டிகர்த்தாவே அவர்தானே?
(தொடரும்)