26. இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
சீனர்களைப் பொருத்தவரை, வியாபாரம்தான் மதிப்பான தொழில், ராணுவம் ஒரு இழிவான வேலை. ஒரு நல்ல சிறுவன் ராணுவ வீரனாகக்கூடாது;
சீனர்களைப் பொருத்தவரை, வியாபாரம்தான் மதிப்பான தொழில், ராணுவம் ஒரு இழிவான வேலை. ஒரு நல்ல சிறுவன் ராணுவ வீரனாகக்கூடாது; நல்ல உருக்கு ஆணியாகக்கூடாது என்பது சீனப் பழமொழி, பாரம்பரிய நம்பிக்கை. நாட்டின் இருபது லட்சம் பேரில் ஒரு லட்சம் பேரை, அதாவது, ஐந்தில் ஒருவரை ராணுவத்தில் சேர்த்தாக வேண்டும். மக்கள் தொகையில் எழுபது சதவிகிதம் பேர், ராணுவத்தை வெறுக்கும் சீனர்கள். மலாய்கள், இந்தியர்கள் ஆகிய இனத்தவருக்கும், ராணுவம், போலீஸ் என்றால், ஜப்பானியரின் சாம்பல்நிற யூனிஃபார்மும், அராஜகமும்தான் நினைவுக்கு வந்தன. இரு துறைகளிலும் பணியாற்ற யாருமே தயாராக இல்லை. என்ன செய்யலாம்?
மிலிட்டரி வேலையைக் கட்டாயப்படுத்துவது ஒரு வழி. அப்படிச் செய்தால், யுத்தம் வரும்போது, அத்தனை பேரும் மாயமாகக் காணாமல் போய்விடுவார்கள். லீ கண்ட வழி, தனி வழி. மனமாற்றம். ராணுவம் பற்றி மக்கள் மனங்களில் மதிப்பை, மரியாதையை உண்டாக்கவேண்டும்.
உயர்நிலைப் பள்ளிகளில் தேசிய மாணவர் படை (National Cadet Corps), தேசியக் காவல் மாணவர் படை (National Police Cadet Corps) என்னும் இரு அமைப்புக்கள் தொடங்கப்பட்டன. இவற்றுள் ஏதாவது ஒன்றில் மாணவர்கள் கட்டாயமாகச் சேர வேண்டும், பயிற்சி பெறவேண்டும் என்று வந்தது சட்டம். தொடங்கியது திட்டம். சிறுவர்கள் குழந்தைகள் யூனிஃபார்ம் அணிந்து ’‘டொக்' ‘டொக்' என்று பளபளக்கும் ஷூக்கள் ஒலிக்கக் கம்பீர நடை போட்டபோது, பெற்றோரின் மனங்கள் பெருமையால் நிறைந்தன. நாட்கள் ஓட, ஓட, ராணுவ, போலீஸ் யூனிஃபார்ம்களைப் பார்க்கும்போது, அவர்கள் நினைவில் வந்தவர்கள் ஜப்பானியர்களல்ல, அவர்களுடைய செல்லக் குழந்தைகள். ராணுவம், போலீஸ் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பு மறைந்தது, ஒருவிதப் பாசம், பிணைப்பு எழுந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டார் லீ? அவருடைய மனோதத்துவ மருத்துவம் பலன் தந்துவிட்டது.
Advertisement
ராணுவ வீரர்களைத் தங்களுள் ஒருவராக மக்கள் நினைக்கவேண்டும். நாட்டின் பாதுகாப்பு வெறும் ராணுவ வீரர்களுடையது மட்டுமல்ல, ஒவ்வொரு சிங்கப்பூரியனின் அடிப்படைக் கடமை. அதற்குத் தோள் கொடுக்கும் தோழர்கள் ராணுவ வீரர்கள் என்பதை மக்கள் உணரவேண்டும். அன்றைய சிங்கப்பூர் சமுதாயத்தில், பணம் சேர்ப்பதுதான் முக்கிய இலக்காக இருந்தது. உடற்பயிற்சி, வீர தீர விளையாட்டுக்களில் பங்கேற்பது ஆகியவை நேரத்தை வீணடிக்கும் வெட்டித்தனங்களாக நினைத்தார்கள். இந்த மனப்போக்கை மாற்றவேண்டும்.
ராணுவ அமைச்சர் கெங் ஸ்வீ வித்தியாசமாக யோசித்தார். பொது மக்கள், அரசு ஊழியர்கள், மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கொண்ட மக்கள் பாதுகாப்புப் படை (Peoples’ Defence Force) தொடங்கினார். இவர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கினார். சிங்கப்பூர் மலேஷியாவிலிருந்து பிரிந்து வந்த முதல் தேசீயதின விழா. ஆகஸ்ட் 1, 1966. மக்கள் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தோடு சேர்ந்து அணிவகுத்து வந்தனர். இவர்களுள் பலர் நாற்பது வயதைத் தாண்டியவர்கள். திருவிழாக் கூட்டமாக வந்திருந்த மக்கள் ஆரவாரமாகக் கைகள் தட்டினார்கள், உற்சாகக் கூச்சலிட்டார்கள். 'ராணுவ வீரர் நம் தோழர், நமக்குள் ஒருவர் என்னும் எண்ணம் ஆழமாகப் பதிந்தது. பொதுமக்களுக்கும், ராணுவம், காவல் துறைகளுக்குமிடையே இருந்த தடுப்புச் சுவர் தகர்ந்தது.
'சிங்கப்பூரில் எல்லோரும் ஒரே இனம், ஒரே குலம்' என்னும் குறிக்கோளை உலகம் முழுக்க எதிரொலிக்கச் செய்ய, லீ முதல் தேசீயதின விழாவைப் பயன்படுத்திக்கொண்டார். பரேடில், சீனர்கள், மலாய்கள், இந்தியர்கள், பிரிட்டீஷார் ஆகிய அனைவருக்கும் முக்கியத்துவம் தந்தார். சாதாரணமாக ரராணுவ வீரர்கள், காவல் துறையினர், கட்சிக்காரர்கள் ஆகியோர் மட்டும்தானே அணிவகுப்பில் பங்கேற்பார்கள்? இங்கோ, பிசினஸ்மேன்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோரும் பெருமையோடு நடந்துவந்தார்கள். இனம், மொழி, தொழில், முதலாளி – தொழிலாளி வர்க்க பேதங்கள் ஆகிய அனைத்தையும் தாண்டி,’ 'நான் சிங்கப்பூரியன்' என்னும் பெருமிதக் குரல் ஓங்காரமாக ஒலித்தது, உலகெங்கும் எதிரொலித்தது.
முதல் தேசீய தின விழாவுக்குப் பின், ராணுவத்திலும், காவல் துறையிலும் பணியாற்ற ஏராளமானோர் ஆர்வம் காட்டினார்கள். இதைப் பயன்படுத்தி, ராணுவ வீரர்கள் எண்ணிக்கையைப் பலமடங்காக்க கெங் ஸ்வீ திட்டமிட்டார். இதற்கு லீ சம்மதிக்கவில்லை. சிங்கப்பூரின் பாதுகாப்பு முக்கியம்தான். ஆனால், பெரிய முழுநேர ராணுவத்தைக் கட்டி மேய்க்கும் நிதிவசதி அரசிடம் இல்லை. நாட்டை ஓராயிரம் பிரச்சனைகள் எதிர்நோக்கியிருக்கின்றன. அவற்றுக்குத் தீர்வுகாணப் பணம் தேவைப்படுகிறது.
லீ மாற்று வழி சொன்னார். பொதுமக்களுக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி தரவேண்டும். தேவை வரும்போது, இவர்கள் பாதுகாப்புக்குத் தோள் கொடுப்பார்கள். இது மட்டுமல்ல, ராணுவப் பயிற்சி நாட்டில் ஒழுங்கு, கட்டுப்பாடு, இன ஒற்றுமை, நாட்டுப்பற்று ஆகிய நல்ல குணங்களை வளர்க்கும். அதே சமயம், செலவும் குறையும்.
பெண்களையும் இதில் சேர்க்கவேண்டும் என்று லீ விரும்பினார். ஆனால், நடைமுறைச் சிரமங்களை கெங் ஸ்வீ விளக்கியவுடன், மனதை மாற்றிக்கொண்டார். பெப்ருவரி 1967. கட்டாய ராணுவச் சேவைச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, பதினெட்டிலிருந்து இருபத்தியொரு வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான அத்தனை இளைஞர்களும் இதில் சேரவேண்டும். யாருக்கும் விதிவிலக்குக் கிடையாது. இவர்கள் சிங்கப்பூர் ராணுவத்தின் (Singapore Armed Force – சுருக்கமாக SAF) அங்கமாகக் கருதப்படுவார்கள். ராணுவப் பயிற்சி முடித்ததும், அரசாங்க, தனியார் துறைகளில் வேலைக்கான உத்தரவாதம் உண்டு. திட்டத்துக்கு அமோக வரவேற்பு. உடனடியாக 9,000 பேர் சேர்ந்தார்கள். ஆமாம், லீ ஆசைப்பட்டதுபோல் மக்கள் மனநிலை மாறிவிட்டது.
பயிற்சி தொடங்கியது. லீ ஏராளமான பயிற்சி மையங்களுக்குப் போனார். . ராணுவ சேவைக்கு முன்வந்ததற்காக அவர்கள் சேவைக்கு நாடு எத்தனை பெருமைப்படுகிறது என்று உத்வேகம் தந்தார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், பலதுறைப் பிரபலங்கள் ஆகியோரையும் லீ மையங்களுக்கு விசிட் அடிக்கச் சொன்னார். பயிற்சி பெற வந்தவர்களின் உற்சாகம் உச்சம் தொட்டது.
இதே சமயம், இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் மும்முரமாக முழுநேரப் படையினரைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள். பீரங்கிகள், நவீன ஆயுதங்கள், கடும் பயிற்சிகள், தொழில்நுட்பம் நிறைந்த செய்தித் தொடர்புக் கருவிகள் எனச் சிங்கப்பூர் ராணுவமும், போலீஸும் மறுபிறவி எடுத்துக்கொண்டிருந்தன.
சொந்த ராணுவத்தை வளர்த்துக்கொண்டிருந்தபோதிலும், பிரிட்டிஷ் படைகளின் முகாம் சிங்கப்பூரில் தொடர லீ அனுமதி கொடுத்திருந்தார். இதற்கு இரண்டு காரணங்கள் – சிங்கப்பூரை எதிரி நாடுகள் தாக்கினால், இந்தப் படைகள் துணைக்கு வரும். இதைவிட இன்னொரு முக்கிய காரணம் இருந்தது. அது, பொருளாதாரக் காரணம். முகாமின் தேவைகள், பராமரிப்பு ஆகியவற்றுக்காக இந்த முகாமில் 30,000 சிங்கப்பூரியர்கள் வேலை பார்த்தார்கள். இன்னும் 40,000 பேர் பலவித ஐட்டங்கள் சப்ளை செய்து தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பிரிட்டிஷ் முகாமை நம்பியிருந்தார்கள். சிங்கப்பூர் உள்நாட்டு உற்பத்தியின் (Gross National Product) 20 சதவிகிதம் முகாம் உபயம். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரிட்டீஷார் உதவி நிரந்தரமல்ல என்று லீ அறிவார். ஆனால், குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்கு முகாம்கள் நீடிக்கும் என்று கணக்குப் போட்டிருந்தார்,
லீ கணக்கில் விழுந்தது இடி. 1966 – 67 களில் பிரிட்டனின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியது. 1971 – க்குள், சிங்கப்பூர் முகாமை மூடப்போவதாக அறிவித்தது. லீ அதிர்ந்துபோனார். பிரிட்டிஷ் படைகள் திரும்பிப்போனால், அண்டைய நாடுகளிலும், உள்ளுர்த் திவிரவாதிகளிடமும் திமிர் துளிர்விடும். நமக்குப் பாதுக்காப்பாக இங்கிலாந்துப் படை இருக்கிறது என்னும் பொதுமக்கள் நம்பிக்கை சிதறும். பொருளாதாரப் பாதிப்பை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். உடனேயே, உடனேயே, ராணுவத்தைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்யவேண்டும்.
லீ இங்கிலாந்துக்குப் பறந்தார். பிரதமர் ஹரால்ட் வில்சன், பிற அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்தார். முகாமை மூடியே ஆகவேண்டிய அவர்கள் கட்டாயத்தை லீ புரிந்துகொண்டார். அந்தச் சிரம நிலையிலும், சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ இங்கிலாந்து சம்மதித்தது. அவர்கள் செய்த மாபெரும் உதவி, 12 போர் விமானங்கள் சப்ளை செய்தார்கள். ஆறு விமானிகளுக்கு இங்கிலாந்தில் உயர்தரப் பயிற்சி தந்தார்கள். 1971. சிங்கப்பூரின் 16 போர்விமானங்கள் கொண்ட விமானப் படை தயார்.
இதே சமயம், இஸ்ரேல், நியூசிலாந்து நாடுகளின் உதவியுடன் கப்பல் படை ரெடி. அதிவேகக் கப்பல் ரோந்துப் படை, ஆயுதக் கப்பல் படை என இருமுனை வீரர்கள்.
காலாட்படையில், இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் நம்பவே முடியாத முன்னேற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருந்ததார்கள். கமாண்டோக்கள், தரைப்படையினர், ஆயுதப் படை என வகை வகையான வீரர்கள் அணி, ஒவ்வொரு படைப் பிரிவிலும், பீரங்கிகள், ஆயுதங்கள், தாங்கிய வாகனங்கள், பொறியியல் வல்லுநர்கள், மருத்துவர்கள், தனி மருத்துவமனை என ஓராயிரம் வசதிகள், ராணுவப் பயிற்சி தருவதற்காகவே, இஸ்ரேலிய ஆலோசகர்கள் நிரந்தரப் பயிற்சி மையங்கள் தொடங்கினார்கள். இங்கே போர்முறைகள், யுத்த வியூகங்கள், ஆயுதப் பயன்படுத்துதல், வெடிகுண்டுகள் அகற்றுதல், தொழில் நுட்பம், ராணுவ அலுவக நிர்வாகம் ஆகிய துறைகளில் கடும் பயிற்சிகள் தந்தார்கள். உலகத்தர வரிசையில் இடம் பெறும் வீரர்கள் தயார்.
பொதுமக்கள் படையிலும் கெங் ஸ்வீ பிரம்மாண்ட வளர்ச்சி காட்டினார். இரண்டே வருடங்களில், 1971 – இல், 16,0000 வீரர்கள் கொண்ட 17 தேசீயச் சேவைப் படைப்பிரிவுகளும், 14,000 படைபலம் நிறைந்த 14 அவசரகாலப் படைப்பிரிவுகளும் சவால்களைச் சந்திக்கத் தயாராக.
1965 – இல் சிங்கப்பூர் தனிநாடாக அவதரித்தபோது, மொத்த ராணுவம் 1000 பேர். அதில் சிங்கப்பூரியர்கள் வெறும் முந்நூறே முந்நூறு பேர். நாடு முழுக்க ராணுவத்தின்மேல் வெறுப்பு. மூன்றே வருடங்களில் ராணுவத்தோடு பாசப் பிணைப்பு. ஒவ்வொரு சிங்கப்பூர் ஆண்மகனும் ராணுவ வீரர்.
Military Technology ஜெர்மன் நாட்டிலிருந்து வெளியாகும் ஆங்கில மாதப் பத்திரிகை உலக ராணுவ வீரர்களின் வழிகாட்டி, வேதம். 1990 – இல் இந்தப் பத்திரிகையில் எழுதினார்கள், ‘!965 – இல் சிங்கப்பூர் சுதந்திர நாடாக இயங்கத் தொடங்கியது. அப்போது, தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் படைபலம் அவர்களிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. 1990 – இல், சிங்கப்பூர் ராணுவம் நவீன ராணுவத் தளவாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக, தங்கள் தேசத்தையும், சுதந்திரத்தையும் கட்டிக் காப்பவர்களாக, உலகமே மதிக்கும் வல்லுநர்களாக எழுச்சி பெற்றுவிட்டார்கள்.' மாபெரும் அங்கீகாரக் கிரீடம் இது.
லீ மகிழ்ச்சி கொண்டார். ஆனால், திருப்திப்படவில்லை. முன்னேற்ற முயற்சிகளை முழுவேகத்தில் முடுக்கிவிட்டுக்கொண்டேயிருந்தார். சில வருடங்களுக்கு ஒருமுறை, படையினர் ஆஸ்திரேலியா, புரூனே, தைவான், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டன்ர், திறமைகள் பட்டை தீட்டப்பட்டனர்.
சிங்கப்பூர்க் குடிமக்கள் அனைவருக்கும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபாட்டை ஏற்படுத்த, Total Defence என்னும் அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டன. நிறுவன ஊழியர்கள், பிசினஸ்மேன்கள், பள்ளி ஆசிரியர்கள், சமுதாய முக்கியங்கள் ஆகியோருக்கு இந்த மையங்கள் பாதுகாப்புப் பயிற்சிகள் தருகிறார்கள். ராணுவ வளர்ச்சியும், அதில் பொதுமக்களைப் பங்குபெறச் செய்வதும், சிங்கப்பூரில் தொடர்கதைதான்.
நம்பவே முடியாததைச் சாதித்துவிட்டீர்களே லீ!
மூட்டை மூட்டையாக ஆந்திராவின் கார நெடி மிளகாய் வற்றலைக் கொண்டுவாருங்கள். அக்னிக்கு அர்ப்பணிப்போம். லீக்குத் திருஷ்டி சுற்றிப் போடுவோம். ராணுவம் முதல் சாதனை மட்டுமே. பட்டியல் நீ………..ளப்போகிறது.
(தொடரும்)