முகப்பு
லீ குவான் யூ

29. பொன்மகள் வந்தாள்!

லீயைப் போலவே, வின்ஸெமியஸும் சாதனைகளில் திருப்தி அடையாதவர். இன்னும், இன்னும் வேண்டும் என்று அடங்காப் பசி கொண்டவர். எலெட்ரானிக்ஸ், பெட்ரோலியம் என வகை

Updated On : 23 அக்டோபர், 2015 at 2:55 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:33 PM

லீயைப் போலவே, வின்ஸெமியஸும் சாதனைகளில் திருப்தி அடையாதவர். இன்னும், இன்னும் வேண்டும் என்று அடங்காப் பசி கொண்டவர். எலெட்ரானிக்ஸ், பெட்ரோலியம் என வகை வகையான உற்பத்தித் தொழிற்சாலைகள் வந்தன. வித்தியாசமாக வேறு என்ன செய்யலாம், பொருளாதார அடித்தளத்தை எப்படி விரிவுபடுத்தலாம் என்று வின்ஸெமியஸ் மனத்தில் எண்ண ஓட்டங்கள்.

வின்ஸெமியஸின் நண்பர் வான் ஓனென் (Von Oenen), Bank of America - வின் சிங்கப்பூர்க் கிளையின் வைஸ் பிரசிடென்ட்டாகப் பணியாற்றினார். லண்டனுக்குப் பணி மாற்றம் பெற்றார். வின்ஸெமியஸ், நண்பரைத் தொடர்பு கொண்டார், ‘இப்போது உலகப் பணப் பரிவர்த்தனை மையங்களாக, சுவிட்சர்லாந்தின் ஜூரிக், ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட், அமெரிக்க நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, லண்டன் ஆகிய நகரங்கள் இருக்கின்றன. சிங்கப்பூரும் அடுத்த பத்து வருடங்களுக்குள் இந்த வரிசையில் இடம் பெறவேண்டும். இதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?’

வந்தது ஓனென் பதில், ‘அடுத்த ஃபிளைட்டில் ஏறி லண்டன் வாருங்கள்.’ வின்ஸெமியஸ் கிளம்பினார். அப்போது அவரும், லீயும் கனவில்கூட நினைக்கவில்லை, எத்தகைய தங்கச் சுரங்கம் தங்களுக்காகத் தன் கதவுகளைத் திறக்கிறதென்று.

Advertisement

வான் ஓனென் சொன்னார், ‘சிங்கப்பூரைப் பத்து வருடங்களில் உலகப் பணப் பரிவர்த்தனை மையமாக்க ஆசைப்படுகிறீர்கள். பத்து ஆண்டுகள் வேண்டாம். ஐந்தே வருடங்களில் இது சாத்தியம்.’

வின்ஸெமியஸுக்குத் தன்னையே நம்பமுடியவில்லை. ஓனென் தன் வங்கியில் இருந்த பிரம்மாண்டப் பூகோள உருண்டை அருகே அழைத்துக்கொண்டு போனார். விளக்கினார், ‘இங்கே பாருங்கள். ஜூரிக் நகரில் காலை மணி ஒன்பது. வங்கிகள் திறக்கின்றன. உலக நிதி நடவடிக்கைகளின் ஆரம்பம். ஜூரிக் வங்கிகள் வேலை நேரம் முடியும்போது, ஃபிராங்க்ஃபர்ட், லண்டன் வங்கிகளின் பணி தொடக்கம். இதுவே சங்கிலித் தொடராகிறது. ஃபிராங்க்ஃபர்ட், லண்டனில் வேலை நேரம் முடியும்போது, பரிவர்த்தனை மையம் நியூயார்க்குக்கு நகர்கிறது. அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ. அடுத்த எட்டு மணி நேரம், ஜூரிக் வங்கிகள் மறுநாள் காலை 9 மணிக்குத் திறப்பதுவரை, உலகப் பணப் பரிவர்த்தனை ஒட்டுமொத்தமாக நின்றுபோகிறது. நேர வித்தியாசத்தால், சிங்கப்பூர் இந்த வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்பமுடியும். முதன் முதலாக, உலகப் பணப் பரிவர்த்தனை நிறுத்தப்படாமல், 24 மணி நேரம் தொடரும்.’

பூமி, சூரியன் ஆகியவற்றின் சுழற்சியால், நாட்டுக்கு நாடு, இரவு, பகல், கடிகாரம் காட்டும் நேரம் ஆகியவற்றில் வித்தியாசம் இருக்கிறது. உலகம் முழுக்க நேரம் குறித்த ஒத்திசைவும், சீர்மையும் ஏற்படுத்துவதற்காக, கிரீன்விச் இடைநிலை நேரம் (Greenwich Mean Time) என்னும் நியமம் (Standard) பயன்படுத்தப்படுகிறது. இதை, கிரீன்விச் தீர்க்கரேகை நேரம் (Greenwich Meridian Time) என்றும் சொல்வார்கள். இதன்படி, லண்டனில் உள்ள கிரீன்விச் ராயல் வானிலை ஆய்வுக்கூடத்தில் (Royal Meteorological Laboratory) கடிகாரம் காட்டும் நேரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் மணிநேரமும் வரையறுக்கப்படுகிறது. உதாரணமாக, கிரீன்விச் ஆய்வுக்கூடக் கடிகாரம் இரவுமணி 12 காட்டும்போது, லண்டனில் அதே நேரம்: 1.00 இந்தியாவில் அதிகாலை மணி 5.30: சுவிட்சர்லாந்தில் அதிகாலை மணி 1.00. சான் பிரான்ஸிஸ்கோவில் முந்தைய நாள் மாலை 4 மணி.

சிங்கப்பூரை நிதி மையமாக்கும் ஆலோசனையை லீ உடனேயே ஏற்றுக்கொண்டார். சிங்கப்பூர் நிதி ஆணையம் (Singapore Monetary Authority) என்னும் அமைப்பை உருவாக்கினார். அந்நியச் செலாவணி தொடர்பான விதிகளைத் தளர்த்தினார். வெளிநாட்டுப் பணம் நாட்டுக்குள் வருவதையும், அயல்நாடுகளுக்குப் போவதையும் எளிதாக்கும் சட்டங்கள் கொண்டுவந்தார். சிங்கப்பூருக்கு வரும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் தந்தார். சீக்கிரமே, சிறுதுளி பெருவெள்ளமாகத் தொடங்கியது. இரண்டே வருடங்களில், ஆசியாவின் மிகப் பெரிய அந்நியச் செலாவணி மையம் சிங்கப்பூரானது.

இப்போது வந்தது ஒரு பெரிய பிரச்சனை. ஜிம் ஸ்லேட்டர் (Jim Slater) இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற நிதி ஆலோசகர். இங்கிலாந்துப் பிரதமரின் சொந்தச் சொத்துக்களை நிர்வகித்த முக்கியமானவர். ஸ்லேட்டர் சிங்கப்பூர் வந்தார், லீயைச் சந்தித்தார். தன் கம்பெனியின் அலுவலகம் திறந்தார். மும்முர பிசினஸ். மூன்றே வருடங்கள். வெடித்தது ஒரு அணுகுண்டு. கஸ்டமர்களை ஏமாற்றி, தனக்கும், சக இயக்குநர்களுக்கும் ஏராளமான பணத்தை ஸ்லேட்டர் சுருட்டிவிட்டார். அரசின் ஆரம்ப விசாரணைகள் ஸ்லேட்டரின் தில்லாலங்கடி வேலைகளை நிரூபித்தன.

பிசினஸ் சமுதாயம் முழுக்கக் கேள்விகள் - பிரபலமான நிதி ஆலோசகர், இங்கிலாந்துப் பிரதமரின் நம்பிக்கை பெற்றவர் தவறுகளைக் கண்களை மூடிக்கொண்டு லீ விட்டுவிடுவாரா, அல்லது நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பாரா?

எடுத்தார். இங்கிலாந்து அரசும், அதன் பிரதமரும் என்ன நினைப்பார்களோ, தனிப்பட்ட முறையில் தன்மீது கோபப்படுவார்களோ என்று நினைக்கவேண்டிய நேரமில்லை இது. சிங்கப்பூரின் நேர்மையை, நம்பகத்தன்மையை உலகுக்கு நிரூபிக்க வேண்டிய நேரம். ஸ்லேட்டர் மற்றும் சக குற்றவாளிகள் மேல் கைது வாரன்ட் பறந்தது. ஆனால், அதற்குள் பட்சிகள் இங்கிலாந்து பறந்துவிட்டன. அத்தனை பேரையும் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பி, சட்டத்தைச் சந்திக்குமாறு லீ லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஸ்லேட்டரை அனுப்ப இங்கிலாந்து மறுத்துவிட்டது, ரிச்சர்ட் டார்லிங் (Richard Tarlng) என்பவரை மட்டும் அனுப்பினார்கள். அவர்மேல் 17 குற்றச்சாட்டுக்கள். 18 மாதங்கள் சிங்கப்பூர்ச் சிறையில் கம்பி எண்ணினார்.

சிங்கப்பூரின் நேர்மைக்கும், நீதி நிலைநாட்டலுக்கும் நற்சான்றிதழ்கள் மலையெனக் குவிந்தன. தங்கள் கிளைகள் திறக்க பல்வேறு நாடுகளின் முன்னணி நிதி நிறுவனங்களுக்குள் போட்டா போட்டி. இப்போது இன்னும் கவனமாக இருக்கவேண்டும் என்று லீ உணர்ந்தார். சந்தேக நிழல் படிந்த நிறுவனங்கள், எந்த வல்லரசு நாடுகளைச் சேர்ந்தவர்களாக, எத்தனை பிரம்மாண்டப் பணபலம் கொண்டவர்களாக இருந்தாலும், நோ அட்மிஷன். உதாரணமாக, Bank of Credit and Commerce International என்னும் பாகிஸ்தானியரை உரிமையாளராகக் கொண்ட வங்கி சிங்கப்பூரில் கிளை தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்கள். லீ மறுத்துவிட்டார். இங்கிலாந்துப் பிரதமர் ஹரால்ட் வில்சன் (Harold Wilson) சிபாரிசுக் கடிதத்தோடு வந்தார்கள். தன் நேர்மைக் கொள்கையை வளைப்பவரல்ல லீ. மறுபடியும் அனுமதி மறுப்பு.

இதேபோல், சிங்கப்பூரைத் தாயகமாகக்கொண்ட சீன பிசினஸ்மேன் ஒருவரின் National Bank Brunei - க்கும், ப்ரூனே சுல்தானின் சகோதரர் சிபாரிசு செய்தபிறகும், லீ அனுமதி தரவில்லை. நாட்டை ஆள்பவர்களல்ல, ஆகாய மண்டலத்து ஆண்டவரே வந்தாலும், லீயின் சத்தியச் செங்கோல் வளையவில்லை. Bank of Credit and Commerce International, National Bank Brunei ஆகிய இரு வங்கிகளும் சில வருடங்களிலேயே திவாலாயின. வாடிக்கையாளர்களின் கோடிக் கணக்கான பணம் கோவிந்தா. லீயின் கணக்கும், முடிவும் எத்தனை சரியானவை, நேர்மையானவை என்பதற்குக் காலம் தந்த தீர்ப்பு.

சிங்கப்பூர் நிதி ஆணையம், வங்கிகளைத் தாண்டி, பங்குச் சந்தையிலும், நேர்மையை நிலைநாட்டியது. பல மலேஷிய இடைத் தரகர்கள் பங்குச் சந்தையைச் சூதாட்டக்களமாக்கிக் கொண்டிருந்தார்கள். பங்கு விலைகளை ஏற்றினார்கள், இறக்கினார்கள், சிறு அப்பாவி முதலீட்டாளர்களின் சேமிப்புப் பணத்தைச் சூறையாடினார்கள். ஆணையம் சட்டத்தில் கடுமையான ஷரத்துக்கள் கொண்டு வந்தது. ஏமாற்றுக்காரர்களின் லைசென்ஸ்களைப் பறித்தது. சிறையில் தள்ளியது. பலர் திருந்தினார்கள், சிலர் நாட்டை விட்டே ஓடிப் போனார்கள். மொத்தத்தில் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை மொத்தமாகக் களை எடுக்கப்பட்டுவிட்டது.

1997 வரை, சிங்கப்பூரில் கிளைகள் திறக்கும் அந்நிய வங்கிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. பல பன்னாட்டு நிதி மேதைகள், வங்கித் துறை வல்லுநர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி லீ நுழைவுக் கதவுகளை விரிவாகத் திறந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு இந்த வங்கிகள் இன்னும் ஆரோக்கிய நீரூற்றினார்கள். உலக நிதி மையமாகப் பல பரிமாணங்களில், சீரும் செழிப்புமாகச் சிங்கப்பூர் வளர்ந்து வருகிறது.

சிங்கப்பூரியர்கள் சேமிப்பில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) 47 சதவிகிதம் சேமிக்கிறார்கள்*. அரசும் இதற்கு உந்து சக்தியாக இருக்கிறது. 1955 முதலே, தொழிலாளர்களுக்காக, வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Central Provident Fund) தொடங்கினார்கள். அனைத்துக் குடிமக்கள் மட்டுமல்லாது, சிங்கப்பூரில் வேலை பார்க்கும் அனைவரும் இதன் அங்கத்தினர்கள். தொழிலாளி சாதாரணமாக, தன் ஊதியத்தில் 20 சதவிகிதத்தை இதன் மூலம் சேமிக்கிறார்: நிறுவனங்கள் 17 சதவிகிதம் தருகிறார்கள். அதாவது, மொத்தம் 37 சதவிகிதம் சேமிப்பு. ஓய்வு ஊதியம், வீடு வாங்கக் கடன், மருத்துவச் செலவுக்குக் கடன் எனப் பல வகைகளில் இந்தச் சேமிப்பு உதவுகிறது.

அந்நியச் செலாவணியை நிர்வகிக்க, அரசு, 1981 - இல், சிங்கப்பூர் அரசு முதலீட்டுக் கழகம் (Govt. of Singapore Investment Corporation) தொடங்கியது. இன்று ஜி.ஐ.சி. பிரைவேட் லிமிடெட் G. I. C. Private Limited என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரேசில், சீனா, இந்தியா (மும்பை), இங்கிலாந்து, ஜப்பான், கொரியா என ஏழு நாடுகளில் கிளைகள். உலகளவில் பங்குகள், நிதிச் சந்தைகள், நிலையான வருவாய் தரும் டெப்பாசிட்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்கிறது.

தொழில் முனைவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுவதில் எந்த நாடு சிறந்தது என்னும் அடிப்படையில், உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும், நாடுகளைப் பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியலின் பெயர் Ease of doing Business Indx. இதற்காகப் பத்து அம்சங்களைக் கணக்கிடுகிறார்கள். அவை:

1. தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகளின் எளிமை, ஆகும் காலம், செலவு, குறைந்தபட்ச முதலீடு.

2. அலுவலக / தொழிற்சாலைக் கட்டடம் கட்டுவதற்கான விதிமுறைகளின் எளிமை, ஆகும் காலம், செலவு.

3. மின்சார சப்ளை - புதிய கட்டத்துக்கு மின்சாரம் கிடைக்கத் தேவையான விதிமுறைகளின் எளிமை, ஆகும் காலம், செலவு.

4. தொழிற்சாலையைப் பதிவு செய்தல் - விதிமுறைகளின் எளிமை, ஆகும் காலம், செலவு.

5. பிசினஸ் கடன் வாங்குதல் - கடன் பெறும் உரிமைகள், வசதிகள், ஆகும் காலம்.

6. முதலீட்டாளர் பாதுகாப்பு.

7. வரிமுறை, வரி விகிதம்.

8. ஏற்றுமதிச் சட்டங்கள்.

9. கான்ட்ராக்ட்கள் போடுவதற்கான விதிகள், எடுக்கும் காலம், செலவு.

10. கம்பெனி திவாலானால், எதிர்கொள்ளவேண்டிய விதிமுறைகள்.

இந்தப் பட்டியலை உலக வங்கி 2006 - இல் தொடங்கினார்கள். அன்று முதல் இன்றுவரை தவறாமல் முதல் இடம் பிடித்திருக்கும் நாடு சிங்கப்பூர்! இதை நிஜமாக்கியவர்கள் லீ, அவருடைய பொருளாதார ஆலோசகர் ஆல்ஃபிரட் வின்ஸெமியஸ்.

_____________________________________________________________________________

*இந்தியாவில் இது 32 சதவிகிதம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.