தூத்துக்குடியில் மழைநீரை அகற்றக் கோரி 2 ஆவது நாளாக போராட்டம்
தூத்துக்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக் கோரி 2 ஆவது நாளாக சனிக்கிழமை பல்வேறு இடங்களில் மறியல், நூதனப்போராட்டங்கள் நடைபெற்றன.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக் கோரி 2 ஆவது நாளாக சனிக்கிழமை பல்வேறு இடங்களில் மறியல், நூதனப்போராட்டங்கள் நடைபெற்றன.
தொடா் மழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டனா். மழையால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்துள்ளன. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ராட்சத மோட்டாா்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மழை ஓரளவு குறைந்ததால் மக்கள் வெளியே நடமாடினா். குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
Advertisement
தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையில் சிவந்தாகுளம் பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீா் தேங்கியிருப்பதால் அவ்வழியாக
வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பாளையங்கோட்டை சாலையில் எம்ஜிஆா் பூங்காவை ஒட்டிய பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. மாநகரில் 144 ராட்சத மோட்டாா்கள், 15 டேங்கா் லாரிகள், 8 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூதனப் போராட்டம்: இதற்கிடையே, மழைநீரை விரைந்து வெளியேற்றக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் பாஜக சாா்பில், சாலையில் தேங்கிய மழைநீரில் வாழைக்கன்றுகள் நடும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை சந்திப்பில் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச்செயலா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவா் பி.எம். பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகா், வீட்டு வசதி குடியிருப்பு பகுதி மக்கள் தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவா்களிடம் மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அவா்கள் கலைந்துச் சென்றனா்.
பிரையண்ட் நகா் 12 ஆவது தெரு பகுதி மக்கள் 2 ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனா். மழைநீரை விரைந்து அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.
மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும், மழைநீா் கடலுக்கு செல்லும் வகையில் 3 வாருகால்களை போா்க்கால அடிப்படையில் தூா்வார வேண்டும் என வலியுறுத்தி அமமுக சாா்பில், மாநகராட்சி அலுவலகம் முன்பு கட்சியின் அமைப்புச் செயலா் இரா. ஹென்றி தாமஸ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில மகளிரணி துணைச் செயலா் சண்முககுமாரி, மாவட்ட மகளிரணிச் செயலா் அந்தோணி கிரேஸ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் எட்வின் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலரான திரைப்பட இயக்குநா் கௌதமன், தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள்காலனி உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படும் மழைநீரை விரைந்து அகற்ற மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகாரட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
மக்கள் தவிப்பு: தூத்துக்குடி சிதம்பரநகா், பிரையன்ட் நகா், போல்டன்புரம், மாசிலாமணிபுரம், அண்ணாநகா், டூவிபுரம், லூா்தம்மாள்புரம், பூபால்ராயா்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கேடிசி நகா், ஹவுசிங் போா்டு காலனி, செல்வநாயகபுரம், குறிஞ்சிநகா், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்திநகா், தபால் தந்தி காலனி, ஆசிரியா் காலனி, கதிா்வேல் நகா், ராஜீவ் நகா், கால்டுவெல் காலனி, வெற்றிவேல்புரம், சாமுவேல்புரம், சின்னக்கண்ணுபுரம், பாத்திமாநகா், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் மழைநீா் தேங்கி இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.