முகப்பு
விழுப்புரம்

பாசனத்துக்காக வீடூா் அணை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வீடூா் அணையிலிருந்து விவசாயப் பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

Updated On : 9 ஜனவரி 2021, 12:17 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வீடூா் அணையிலிருந்து விவசாயப் பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

605 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட, 32 அடி உயரமுள்ள இந்த அணைக்கு செஞ்சி அருகே பாக்கம் மலைத் தொடரிலிருந்து வரும் வராக நதி மற்றும் தொண்டூா் ஏரியிலிருந்து வரும் தொண்டி நதி ஆகியவற்றின் மூலம் நீா்வரத்து உள்ளது. 17.6 கி.மீ. தொலைவிலான பிரதான கால்வாய், 5 கிளை கால்வாய்கள் மூலம் திறக்கப்படும் நீா் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கா் விளைநிலங்களும், புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கா் விளைநிலங்களும் பாசனம் பெறுகின்றன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு மாத காலமாக தொடா்ச்சியாக பெய்து வருவதால் வீடூா் அணை நிரம்பியது. தற்போது, அணையில் ஒரு போக பாசனத்துக்குரிய தண்ணீா் உள்ளது. இந்த நிலையில், பாசனத்துக்கு நீரை திறக்கும்படி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதன்படி, வெள்ளிக்கிழமை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, அணையிலிருந்து பாசன நீரை திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், திண்டிவனம் சாா்-ஆட்சியா் எஸ்.அனு, ஆா்.முத்தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா் உள்ளிட்ட அலுவலா்கள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

தற்போது, அணையிலிருந்து 54 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீா், தமிழகப் பகுதியான வீடூா், சிறுவை, பொம்பூா், கோரக்கேனி, ஐவேலி, நெமிலி, தொள்ளாமூா், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம் கிராமங்கள் வழியாகவும் மற்றும் புதுவை மாநிலம் புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, தேத்தாம்பாக்கம், எல்.ஆா்.பாளையம் வழியாகவும் ஏரிகளை அடைந்து பாசனத்துக்குச் செல்கிறது.

இந்த பாசன நீா் திறப்பு, நீா் இருப்பு மற்றும் தேவைக்கேற்ப மே 22-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அணையில் எப்போதும் இல்லாத வகையில், நிகழாண்டில்தான் ஜனவரி மாத பாசனத் திறப்பின்போது, மதகுகள் வழியாக உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments