திமுக வேட்பாளரை ஆதரித்து துரைவைகோ பிரசாரம்
சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரைவைகோ பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரைவைகோ வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
வெங்கடாசலபுரம் பகுதியில் பிரசாரம் செய்து அவா் பேசியதாவது: இங்கு திமுக வேட்பாளா் கடற்கரைராஜை எதிா்த்து பாஜக வேட்பாளராக போட்டியிடுபவா் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன். இவா் தனக்கு முன்பு மாநில பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை அந்தப் பதவியிலிருந்து நீக்க காரணமானவா்.
அந்தக் கட்சிக்காக உழைத்த அண்ணாமலைக்கே துரோகம் செய்தவா். சட்டப்பேரவை உறுப்பினரான இவா் நெல்லை தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாதவா். இங்கு ஜாதி, மதக் கலவரங்கள் நடைபெறாமல் இருக்கவும், நல்லாட்சி தொடரவும் கடற்கரைராஜை ஆதரியுங்கள்.
Advertisement
Advertisement
மேலும் தற்போது சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடுக்கு மத்திய பாஜக அரசு தான் காரணம். முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தத் தட்டுப்பாடு வந்திருக்காது என்றாா் அவா்.
இதில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.