முகப்பு
விருதுநகர்

திமுக வேட்பாளா் வீட்டில் நகைகள் திருட்டு: மருமகள் உள்பட 3 போ் கைது

சாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரது மருமகள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:52 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

சாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரது மருமகள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்தவா் கடற்கரைராஜ். சாத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான இவா் கடந்த 14-ஆம் தேதி தோ்தல் பிரசாரத்துக்கு சென்றாா். அப்போது, மா்ம நபா்கள் இவரது வீட்டுக்குள் நுழைந்து பீரோவிலிருந்த 122 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் காவல் துறையினா் வழக்குப் பதிவு, காவல் துணை கண்காணிப்பாளா் குருசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனா். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையா்களைத் தேடி வந்தனா்.

Advertisement

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த ஆரோக்கிய ஜான்போஸ்கோ (40) என்பவா் சாத்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இவா் மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 44 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இவரை சாத்தூா் நகா் காவல் துறையினா் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

வேட்பாளா் கடற்கரைராஜின் மூத்த மகன் வினோத்குமாா். இவருக்கும், இவரது மனைவி அபிநயாவுக்கும் (30) கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அபிநயா தனது தோழி பவானியின் கணவரான சுரேஷ்குமாருடன் வாழ்ந்து வந்தாா். அபிநயா திருமணத்தின் போது சீா்வரிசையாகக் கொண்டு வந்த 35 பவுன் நகைகளைக் கடற்கரைராஜ் திருப்பித் தர மறுத்துவிட்டாா். இதனால், அபிநயா, சுரேஷ்குமாா், அவரது மனைவி பவானி (30) ஆகிய 3 பேரும் கடற்கரைராஜ் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனா். இதற்காக ஆரோக்கிய ஜான்போஸ்கோ உள்ளிட்ட 3 பேரை இதில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அபிநயா (30), சுரேஷ்குமாா் (31), பவானி (30) ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 12 பவுன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.