தினமணி கதிர்

ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி!

தினமணி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், பிளஸ் டூ தேர்ச்சி சான்றிதழ் இல்லாமல் இந்தியாவில் எந்தக் கல்லூரியிலும் இளங்கலை படிப்பிற்காகச் சேர, எத்தனை சிபாரிசு இருந்தாலும் அனுமதி கிடைக்காது.

ஆனால், பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாளவிகா ராஜ் ஜோஷிக்கு, சென்னை கணக்கியல் நிலையம் (Chennai  Mathematical  Institute) நேரடியாக முதுநிலை படிப்பிற்கு இடம் தர முன்வந்தது. கணக்கில் மாளவிகா ராஜ் ஜோஷியின் அறிவு, கணக்குப் பாடத்தில் இளங்கலை படித்தவரின் அறிவுக்குச் சமமாக இருந்ததுதான் காரணம்.

இப்போது மாளவிகா அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் மாணவி. ஸ்காலர்ஷிப்பும் உண்டு. மாளவிகாவே சொல்கிறார்:

""அம்மா சுப்ரியா. மும்பையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நான் மும்பை தாதரில் உள்ள பார்ஸீ பள்ளியில் படித்து வந்தேன். நான் படிப்பில் படு சூட்டிகை. வகுப்பில் பாடம் நடத்துவதை சட்டென்று கிரகித்துக் கொள்வேன். வகுப்பில் நான்தான் எப்போதும் ஃபர்ஸ்ட். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதுதான் அந்தத் திருப்பம் வந்தது. அம்மாதான் அந்தத் திருப்பத்தின் சூத்திரதாரி. ""மாளவிகா, நாளை முதல் நீ பள்ளிக்குப் போக வேண்டாம்... புத்தக மூட்டையைச் சுமக்க வேண்டாம். வீட்டில் இருந்து படித்தால் போதும்.. உனக்கு நீதான் ஆசிரியர்... மாணவியும் நீதான்...'' என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பாவுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அம்மாவை ஒரு புதிராகப் பார்த்தனர். ""உன் முடிவு ஆபத்தானது. மாளவிகாவின் எதிர்காலம் என்று ஒன்று இல்லாமலே போய்விடும். வீட்டிலிருந்து படித்தால், அவள் படிக்கும் படிப்பிற்கு அங்கீகாரம் எங்கிருந்து கிடைக்கும். அங்கீகாரம் இல்லையென்றால் என்ன படித்து என்ன பயன்?'' என்று எச்சரித்தனர். கண்டித்தனர். நானும் உள்ளுக்குள் பயந்து போனேன். அம்மாவுக்கு என்ன ஆச்சு.. என்று அலை பாய்ந்தேன். அம்மாவோ தன் முடிவில் உறுதியாக இருந்தார். இது நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

என் வீடே பள்ளியானது. ""மாளவிகா, உனக்கு என்ன படிக்கணுமோ அதைப் படி.. நான் குறுக்கிட மாட்டேன்... உனக்குப் பிடிச்ச பாடத்தில் அறிவை வளர்த்துக்கோ''ன்னு சொன்ன அம்மா பலவிதமான புத்தகங்களை விலைக்கு வாங்கி வீட்டை நிறைத்தார். அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற... கிடைத்த நூல்களை எல்லாம் வாசித்தேன். பல தரப்பட்ட விஷயங்கள் எனக்கு அத்துப்படியாயின. விரல் நுனியில் எல்லாவற்றிற்கும் விடை வந்து நின்றது. உறக்கத்தில் இருக்கும் என்னைத் தட்டி எழுப்பி எந்தக் கேள்வி கேட்டாலும், தடுமாறாமல் உடனே சரியான பதிலை உரக்கச் சொல்லும் திறன் என்னிடத்தில் வந்து சேர்ந்தது. ஒருவிதத்தில் நான் நடமாடும் கூகுள் ஆனேன்.

சர்வதேச அளவில் நடைபெறும் "இன்டர்நேஷனல் ஒலிம்பியாட் இன் இன்பார்மாடிக்ஸ்' போட்டிகளில் கலந்து கொண்டேன். இரண்டு முறை வெள்ளிப் பதக்கமும் ஒரு முறை வெண்கலப்பதக்கமும் எனக்குக் கிடைத்தது. இந்த போட்டியில் சர்வதேச மாணவ -மாணவிகள் பங்கேற்பார்கள். கடும் போட்டி நிறைந்த களம் அது.

இந்த அறிவுப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட நான்கு பேரில் நானும் ஒருத்தி. போட்டியில் அமர்க்களமாக மூன்று முறை பதக்கம் வாங்கியதால், என்னைப் பற்றித் தெரிந்து கொண்ட உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பல்கலைக் கழகமான அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, படிக்க உதவித் தொகை தந்து இளம் அறிவியல் பட்டப்படிப்பு வகுப்பில் மாணவியாகச் சேர்த்துக் கொண்டது.

இது அந்த நிறுவனத்தின் கல்வி அறிவு குறித்த வித்தியாசமான அணுகுமுறை மற்றும் கல்வித் தரம் நிர்ணயிக்கும் திறமைக்கு அத்தாட்சியாக நிற்கிறது. அங்கே அறிவு, திறமை இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பார்கள். கல்விச் சான்றிதழ் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் .

எனக்கு அமெரிக்காவில் உதவித் தொகையுடன் படிக்க அனுமதி கிடைத்த செய்தி கேட்டதும் அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர். நாங்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். அப்பா ராஜ் பொறியியலாளர்.. சொந்தமாகப் பிசினஸ் செய்கிறார். அம்மா என்னைக் கவனிக்க, வேலையை விட்டுவிட்டார். ""படிப்பை கஷ்டப்பட்டு படிக்கக் கூடாது. சந்தோஷமா இனிப்பு சாப்பிடுகிற மாதிரி அனுபவித்து படிக்கணு''ம்னு அம்மா சொல்வார்.

அப்பா அப்போதைக்கப்போது அம்மா எடுத்த முடிவை விமர்சிச்சுக்கிட்டு இருப்பார். இப்ப அவருக்கும் மகிழ்ச்சி. அம்மாவைப் புகழ்ந்து தள்ளுகிறாராம். ""எல்லாம் சரி... உன் பொண்ணுக்கு சர்டிபிகேட் ஒண்ணுமில்லை... பிறகெப்படி அமெரிக்காவில் படிக்க அனுமதி கிடைச்சது'' என்ற ஒரே கேள்வியைப் பலரும் கேட்க ஆரம்பிக்க ... திரும்பத் திரும்ப என் கதையை பதிலாக அம்மா போரடிக்காமல் சொல்லி வருகிறார்''என்று முடித்தார் மாளவிகா ராஜ் ஜோஷி.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT