தினமணி கதிர்

மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்!

DIN

"தான் உண்டு; தனது வேலை உண்டு' என பள்ளிக்குச் சென்று வரும் சில ஆசிரியர்கள் மத்தியில், கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம், திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் பழனிக்குமார், பள்ளி நேரத்தையும் தாண்டி பல பயனுள்ள விஷயங்களை மாணவர்களுக்கு செய்து வருகிறார்.
 மதுரையிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவரின் ஓவியத் திறமையைப் பாராட்டி, அவருக்கு மணியார்டர் மூலம் ரூபாய் 10 ஊக்கத் தொகை அனுப்புவதற்காக கிருஷ்ணாபுரம் அஞ்சல் அலுவலகத்தில் நின்றிருந்த பழனிக்குமாரைச் சந்தித்து பேசிய பொழுது, அவர் கூறியது:
 " நான் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக எங்கள் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வந்தேன். இதைப் பார்த்த முகநூல் நண்பர்கள் எங்கள் பள்ளிக்கு தேவையான ஸ்மார்ட் கிளாஸ், யோகா போன்ற தற்காப்புப் பயிற்சிக்கான உபகரணங்கள், வண்ணங்கள் தீட்டப்பட்ட வகுப்பறை, வட்ட வடிவிலான மேஜை இருக்கைகள், இலவச யோகாசன ஆடைகள், காலணி என வழங்கியுள்ளனர். மேலும், முகநூல் நண்பர்கள் பலர் ஏழை மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான வசதிகளையும் செய்து தருகின்றனர்.
 முகநூல் நண்பர்கள் நம் பள்ளி மாணவர்களுக்கு உதவிகளைச் செய்து வருவது போல், நாமும் மற்ற பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தேன். அப்போது தோன்றியதுதான் ஊக்கத் தொகை அனுப்பும் திட்டம். பத்து ரூபாய் என்பது சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால் அது கிடைக்கும்போது மாணவர்களுடைய மனதில் ஏற்படும் மகிழ்ச்சி முக்கியம். பிற மாணவர்கள் மத்தியில் அவர்களுடைய திறமை அங்கீகரிக்கப்பட்டது தரும் உற்சாகம் முக்கியம்.
 பொதுவாக தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த ஊக்கப் பரிசினை அனுப்பி வருகிறேன். அதுவும் மணியார்டர் மூலம்தான் இந்த ஊக்கப்பரிசை அனுப்பி வருகிறேன். தமிழகத்திலுள்ள ஏராளமான பள்ளிகள் தங்கள் முகநூலில் தங்கள் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன. நான் தினமும் அத்தகைய பதிவுகளைப் பார்வையிடுகிறேன். பின்னர் அந்த பள்ளியைத் தொடர்பு கொண்டு அந்த மாணவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பெற்று நானே நேரடியாக அஞ்சல் அலுவலகம் சென்று அந்த மாணவனுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10 - ஐ அனுப்பி வருகிறேன். தினமும் இதை இடைவிடாது செய்து வருகிறேன்.
 அந்த ஊக்கத் தொகையைப் பெற்ற மாணவர்களின் படங்களை அந்தந்த பள்ளிகள் தங்களது முகநூலில் பதிவிடும் பொழுது அந்த மாணவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இதைப் பார்க்கும் பிற மாணவர்களுக்கு தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இத்தகைய ஊக்கத் தொகை திட்டம் ஏற்படுத்தி வருவதாக பல பள்ளிகளின் ஆசிரியர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். தனது பெற்றோர், தனது பள்ளி ஆசிரியர்கள் தரும் பரிசுகளை விட, யாரோ ஒருவர் தனது திறமையைப் பாராட்டி பரிசு வழங்கியுள்ளாரே என நினைக்கும் மாணவர்கள் தங்களின் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள்'' என்றார்.
 கடந்த 3 வருடங்களாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த எல்கேஜி, முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 3,000 மாணவர்களுக்கு இது போல் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு "கனிந்த இதயங்கள்' என்ற முகநூல் பக்கத்தைச் சேர்ந்வர்களும், ரவிசொக்கலிங்கம் என்பவரும் உதவியாக இருந்து வருவதாகவும் பழனிக்குமார் மேலும் கூறினார்.
 - வி.குமாரமுருகன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT