பேல் பூரி
மகிழ்ச்சி வேண்டுமென்றால் பணம் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் நிம்மதி என்பது மனம் சார்ந்தது.
கண்டது
(திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'குறிக்காரன்துரை புதூர்'
-கு.பாலசுப்பிரமணி, திண்டுக்கல்.
(சிதம்பரத்தில் ஸ்டூடியோ ஒன்றில் எழுதப்பட்டிருந்தது)
'மகிழ்ச்சி வேண்டுமென்றால் பணம் சார்ந்ததாக இருக்கலாம்.
ஆனால் நிம்மதி என்பது மனம் சார்ந்தது..'
-ஜி.செல்வமுத்துகுமார், சிதம்பரம்.
(புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள ஊரின் பெயர்)
'ஒற்றைக்கண்ணூர்'
-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
கேட்டது
(சிதம்பரம் மெஸ் ஒன்றின் உரிமையாளரும், வாடிக்கையாளரும்...)
'ஹலோ... சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காம போறீங்களே?'
'வீட்டுமுறை உணவகமுன்னு போர்டு வைச்சிருந்தீங்களா.? அதான் வீடுன்னு நினைச்சிட்டேன்...'
-அ.ப.ஜெயபால், சிதம்பரம்.
(திருச்சி மருத்துவமனை ஒன்றில் தம்பதிகள்)
'இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ திரவ ஆகாரம்தான் சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்கிறாரு..?'
'சரி சரி.. கூழ் மோர் தவிர்த்து.. மசாலா பால், லஸ்ஸி, மாதுளை ஜூஸ்..ன்னு கொடு. வேண்டாமுன்னா சொல்லப்போறேன்..'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(சென்னை கோவிலம்பாக்கம் பூங்காவில் இரு நண்பர்கள் பேசியது)
'வெறும் சமைக்கறதும், பாத்திரம் தேய்க்கறதும் என் மனைவிக்கு காணாதாம். வாரம் ஒரு தடவை..'
'என்ன மாப் போடச் சொல்றாங்களா?'
'இல்லை.. தலைக்கு பேன் பார்க்க சொல்றா?'
-ப.சோமசுந்தரம், சென்னை-129.
யோசிக்கிறாங்கப்பா!
இன்றைய (அ)லட்சியம்
நாளைய (ஏ)மாற்றம்
-ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.
மைக்ரோ கதை
'அம்மா... என்னோட முதல் சம்பளம்.'
' அப்பாக்கிட்ட கொடுடா?'
'அவருகிட்ட கொடுக்க எனக்கு விருப்பம் இல்லையேம்மா?'
' சப் கலெக்டர் வேலை கிடைத்தவுடனே உனக்கு அப்பா பெரிசா தெரியலையோ?'
'இவ்ளோ உயர்ந்ததற்கு காரணமே அப்பாதானே!'
' அப்ப, சம்பளத்தை அப்பாக்கிட்ட கொடுக்க வேண்டியதுதானே... அவரு எவ்வளவு சந்தோஷப்படுவாரு?'
'கடன் வாங்கி கஷ்டப்பட்டு என்னையைப் படிக்க வச்சாரு,? நானும் படிப்புச் செலவுக்கு அடிக்கடி எதையாவது வாங்கிக்கிட்டே இருந்தேன்.'
'தெரியுதுல்ல,அப்பன்னா அப்பாக்கிட்ட சம்பளத்தை கொடுக்க வேண்டியது தானே..'
'ஒவ்வொரு முறையும் நான் அவருகிட்டருந்து வாங்கும்போது அப்பா கை மேல இருக்கும். என்னோட கை கீழே இருக்கும்.இப்ப முதன் முதலா வாங்குன சம்பளத்தை கொடுக்கும் போது அவரு கை கீழே போயிரும். என்னோட கை மேலே போயிரும்மா,அதனால தான் அப்பாக்கிட்ட கொடுக்க விருப்பமில்லைன்னு சொன்னேம்மா?'
மகன் தழுதழுத்த குரலில் சொன்ன வார்த்தைகள் பெற்றோரின் இதயங்களுக்குள் இறங்கி இதமாய் வருடிக் கொடுத்தன.
-சி.வ.சு.ஜெகஜோதி, ராமநாதபுரம்.
எஸ்.எம்.எஸ்.
வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
-ச.அரசமதி, தேனி.
அப்படீங்களா!
கைப்பேசியை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுவதும், கைப்பேசி உடையும் வரையில் வைத்திருப்பதும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் வழிவகையை மேற்கொள்வர். அப்படியே நீண்ட காலம் கைப்பேசியை வைத்திருந்தாலும், அதில் உள்ள செயலிகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சாப்ட்வேர் அப்டேட் தரவில்லை என்றால் பயன்படுத்த முடியாது. தொலைபேசி சேவையை மட்டும் நாம் அந்த கைப்பேசியில் பயன்படுத்தலாம்.
இந்த நிலையில், ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா, ஹவாய், எல்.ஜி., லெனோவா, சோனி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த 35 மாடல் போன்களில் இந்தாண்டு இறுதிவரை மட்டுமே வாட்ஸ் ஆஃப் செயல்படும் என்றும், அதன்பிறகு வேலை செய்யாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ்.-12 அல்லது அதற்கு முந்தைய வெர்சன்கள் கொண்ட ஐபோன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு-5 அல்லது அதற்கு முந்தைய வெர்சன்கள் கொண்ட ஆன்ட்ராய்டு போன்களில் இந்தாண்டு இறுதிவரை மட்டுமே வாட்ஸ் ஆஃப் பயன்படுத்த முடியும். அதன்பிறகு இந்த போன்களில் வாட்ஸ் ஆஃப் செயலி செயல்படாது.
ஆப்பிள் போன்களில் - ஐபோன் 5,6,6எஸ், 6 எஸ் பிளஸ், எஸ் இ முதல் தலைமுறை ஆகியவற்றில் வாட்ஸ்ஆப் செயல்படாது. சாம்சங் - கேலக்ஸி ஏஸ் பிளஸ், கேலக்ஸி கோர், கேலக்ஸி எக்ஸ்பிரஸ் 2, கேலக்ஸி நோட் 2, எஸ் 3 மினி, எஸ்4 ஆக்டிவ், எஸ்4 ஜூம். மோட்டோரோலா - மோட்டோ ஜி, எக்ஸ். ஹவாய் - அசண்ட் பி6எஸ், ஜி25, சி100, ஜிஎஸ்ஐ, ஒய்625. எல்.ஜி - ஆப்டிமஸ் 4எக்ஸ்ஹெச்டி, ஜி, ஜி புரோ, எஸ்7. லெனோவா - 46600, ஏ858டி, பி70, எஸ்890.
சோனி - எக்ஸ்பிரியா இசட்1, இ3 ஆகிய கைப்பேசிகளில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ் ஆஃப் வேலை செய்யாது.
-அ.சர்ப்ராஸ்