முகப்பு
தினமணி கதிர்

பேல்பூரி

உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள உன்னால் மட்டும்தான் முடியும்!

Updated On : 12 ஏப்ரல், 2026 at 4:08 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 8:30 PM

கண்டது

(சென்னை வேளச்சேரியில் கார் ஒன்றில் கண்ட வாசகம்)

'உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள உன்னால் மட்டும்தான் முடியும்!'

Advertisement

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(செங்கல்பட்டில் வேனின் பின்புறம் எழுதியிருந்த வாசகம்)

'சிலவற்றைக் கடந்து போ... பலவற்றை மறந்து போ!'

-க.அருச்சுனன், செங்கல்பட்டு.

(சென்னை மேற்கு மாம்பலத்தில் நின்றிருந்த ஆட்டோவின் பின்புறம் எழுதியிருந்த வாசகம் )

'மணப்பெண் தேவை.'

- க. பூமலை, நமசிவாயபுரம்.

கேட்டது

(திருச்சி ஜங்சனில் இருவர்)

'ரெண்டு பை நிறைய கஷ்டப்பட்டு செஞ்ச வீட்டுத் தின்பண்டங்கள் இருக்கு... பையை வச்சிட்டு குறட்டை விட்டுத் தூங்கிடாதே!'

'நீ செஞ்ச தின்பண்டவாசனைக்கு யாரும் பையை நெருங்கக்கூட மாட்டாங்க...நீ நிம்மதியா வீட்டுக்குப் போய்த் தூங்கு!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(சென்னை போரூர் கடை வீதியில் இரு பெண்கள் )

'என்ன தேடிட்டு இருக்கே?'

'டி.வி.யில ஒரு புடவை வாங்கினால் இரண்டு புடவை இலவசம்னு விளம்பரம் பார்த்தேன்டி... அந்தக் கடை எங்கேன்னு தேடுறேன்!'

-கே.எஸ்., செங்கல்பட்டு.

(விழுப்புரத்தில் திரையரங்கம் ஒன்றில் கணவனும் மனைவியும்...)

'சினிமா பார்க்கிற செலவு அதிகமாயிட்டே போகுதுங்க... அதை பாதியா குறைக்கணும்!'

'எப்படிக் குறைக்கலாம்?'

'இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன். நீங்க வீட்டிலேயே இருந்து, சமையல் வேலையைப் பாருங்க... படத்தோட கதையை நான் வந்து சொல்றேன்!'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

யோசிக்கிறாங்கப்பா!

முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு.

முடியாது என்று நினைத்தால் பல காரணங்கள் உண்டு.

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

மைக்ரோ கதை

கணவன், மனைவி இருவரும் ஒருநாள் மருத்துவரைக் காணச்சென்றார்கள்.

மனைவி மருத்துவரிடம், 'எனக்கு ஒன்றுமில்லை. என் கணவருக்குத்தான் உடல்நலம் சரியில்லை!' என்றார்.

மருத்துவர் கணவரைப் பரிசோதித்துவிட்டு, 'உங்கள் கணவருக்கு முழுமையான ஓய்வு தேவை. வீடு அமைதியாக இருக்க வேண்டும். தூக்க மாத்திரை கொடுக்கிறேன்.' என்றார்.

'அதை நான் எப்போது என் கணவருக்குக் கொடுக்க வேண்டும்?' என்று மனைவி கேட்டார்.

'அவருக்குக் கொடுக்கவேண்டாம். நீங்கள் சாப்பிட்டால் போதும்!' மருத்துவர் அமைதியாகச் சொன்னார்.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

எஸ்.எம்.எஸ்.

உன் உடல் அதிரச் சிரி.

அடுத்தவன் மனம் வலிக்கச் சிரிக்காதே!

-சிவம், திருவள்ளூர்.

அப்படீங்களா!

கைப்பேசி எண்ணுக்கு இணையாக அனைவரும் ஜி. மெயிலை பயன்படுத்துகின்றனர். கைப்பேசி எண்ணையும்கூட பலர் மாற்றியிருப்பார்கள். ஆனால் , ஜி.மெயில் முகவரியில் சேமிப்புக்கான இடம் நிரம்பி வழிந்தாலும், அதை யாரும் மாற்றுவதில்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜி. மெயில் சேவையில் தற்போது முகவரியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

ஜி. மெயில் முகவரியை மாற்றும்போது அதில் உள்ள மெயில்கள் அப்படியே அழியாமல் பாதுகாக்கப்படும்.

பழைய ஜி.மெயில் புதிய முகவரிக்கு மாற்று முகவரியாக பழைய முகவரி அப்படியே செயல்படும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த சேவையை பயனாளர்கள் பயன்படுத்த முடியும்.

இதற்காக கூகுள் செட்டிங்ஸில் சென்று 'பர்சனல் இன்போ - இமெயில் - கூகுள் அக்கவுண்ட் இ-மெயில் ஆப்சன் - சேஞ்ச் கூகுள் அக்கவுண்ட் இ. மெயில்' என்பதை தேர்வு செய்து புதிய முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

தற்போதைக்கு இந்தச் சேவை அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது. பிற நாடுகளிலும் இந்தச் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.