பிரேம் நசீர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 55
பிரேம் நசீர் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
திரையுலக வரலாற்றில் உலகச் சாதனை நாயகன் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற நடிகர் பிரேம் நசீர். 1200 படங்கள், புகழ் மிக்க கதாநாயகி ஷீலாவுடன் மட்டும் 130 படங்கள், தினமும் மூன்று கால்ஷீட் கொடுத்து நடித்தவர்.
இவர் நடித்த படம் தயாரிப்பாளருக்குக் கை கொடுக்கவில்லை என்றால், அடுத்த படம் இலவசமாக நடித்துக் கொடுக்கும் பெருந்தன்மை கொண்டவர்.
இரட்டை வேடப் படங்கள் 40, மூன்று வேடப் படங்கள் 3, எர்ணாகுளம் ஜங்ஷன்' 1971, புஷ்பாஞ்சலி' 1972, அம்மோ நாராயணா' 1984. இப்படி நசீரால் ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகம் வாழ்ந்தது.
Advertisement
அப்துல் காதர் என்ற பிரேம் நசீர் 1926, ஏப்ரல் 7ஆம் தேதி சாகுல்ஹமீதுக்கும் அஸ்மா பீவிக்கும் கேரளத்தில் உள்ள செரியன் கேழு என்ற ஊரில் பிறந்தார். வழக்குரைஞராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.
கல்லூரியில் படிக்கும் போதே ஷேக்ஸ்பியரின் வெனிஸ் வணிகன் நாடகத்தில் ஹைலக் வேடத்தில் நடித்து, முதல் பரிசு பெற்றார். இதன் மூலம் 1952இல் வெளிவந்த மருமக்கள்' என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். பிரபல நடிகரான திக்குரிசி சுகுமாரன் நாயர் இவர் பெயரை பிரேம் நசீர் என்று மாற்றினார்.
1967இல் பிரபல எழுத்தாளர் வாசுதேவ நாயரின் இருட்டிண்ட ஆத்மா', வடக்கன் பாட்டு', தச்சோளி அம்பு', விலைக்கு வாங்கின வீணா', புஷ்பாஞ்சலி' போன்றவை இவரது புகழ் பெற்ற படங்கள்.
மம்முட்டியையும் மோகன்லாலையும் இணைத்து ஒரு படம் இயக்க ஆசைப்பட்டது நடக்காமல் போனது. இவர் நடித்த வெள்ளரிக்கா பட்டணம்' 1985இல் ஒரே ஒரு வாக்கில் தேசிய விருதை இழந்தது.
எம். ஜி. ஆர். இவரைச் சந்தித்த போது, ஏன் தமிழ்ப் படங்களில் நடிக்கக் கூடாது?' என்று கேட்ட கேள்விக்குப் பதிலாக, தை பிறந்தால் வழி பிறக்கும்' முதல் முரடன் முத்து' வரை பல படங்களில் நடித்தார்.
இவர் திரையில் பாடிய அமுதும் தேனும் எதற்கு', மாட்டுக்கார வேலா' போன்ற பாடல்கள் அறுபது ஆண்டுகளாகியும் அமுத மழை பொழிகிறது.
மூன்று மகள்களைப் பெற்ற இவர் மனைவியின் பெயர் ஹபீபா பீவி. ஒரே மகன்
ஷா நவாஸ் பல படங்களில் நடித்தும் புகழ் பெற முடியவில்லை. அவர் திரையுலகில் பின் தங்கியது போல் நசீரும் அரசியலில் ஆர்வம் வந்து தோல்வியுற்று ஒதுங்கிக் கொண்டார்.
இவரை நான் ஒளிப்பதிவு மேதை, என் முதல் பட இயக்குநர் வின்சென்ட், துலாபாரம்' என்ற படத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தோப்பில் பாசியுடன் திருவனந்தபுரத்தில் 1972இல் சந்தித்தேன்.
என் பிரபல நாடகம் அச்சாணி'யில் இவர்தான் ஹீரோவாக நடித்தார். தங்கையாக, அப்போது தமிழுக்கு வராத சுஜாதா நடித்தார். நாடகத்தில் தம்பியாக நடித்த சிவகுமார் நடித்த பாத்திரத்தில் அங்கே நடிகர் வின்சென்ட் நடித்தார். அந்த கதாபாத்திரம் நாடகத்தில் துரதிர்ஷ்டக்காரனாக சாக வேண்டுமா, அவனும் பிழைத்து தங்கை வீட்டை விட்டுப் போனது போல் போகட்டும், பின்னால் மனம் திருந்தி வரட்டும் என்று தோப்பில் பாசி கூறினார்.
நசீர் என் அபிப்பிராயத்தைக் கேட்டார். நான் நாடகத்தின் அருமையான காட்சி அது. மக்கள் கண் கலங்கினார்கள்' என்று கூறினேன்.
சிறிது நேரம் யோசித்த நசீர், நாடகம் இன்று நாளை சென்னையில் நடக்கிறதா?' என்று கேட்டார்.
இன்று சென்னையில் நடக்கிறது' என்று கூறினேன்.
உடனே சென்னைக்கு ஒரு தயாரிப்பாளரிடம் பேசி, அன்றே நாடகத்தைப் பார்க்க வைத்து, குறிப்பிட்ட அந்தக் காட்சியைப் பற்றி விசாரித்து, மக்கள் ரசித்த நாடகக் காட்சியை மாற்ற வேண்டாம்' என்று கூறி, எனக்குக் கைகொடுத்தார்.
அச்சாணி' படம் கேரள அரசு விருது பெற்ற போது எனக்கு அரசாங்கத்தின் அழைப்பு வந்தது. நான் திருவனந்தபுரம் போக முடியாத சூழ்நிலையில், அந்த வாய்ப்பை இழந்தேன்.
கேரள அரசு விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றவர். நித்ய ஹரித நாயகன் என்று அழைக்கப்பட்டவர் உடல் நலம் குன்றி 1989, ஜனவரி 16இல் நீங்காத நித்திரை கொண்டார். இவரது உடல் சொந்த ஊரில் ஜுமா மஜித்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
(தொடரும்)