முகப்பு
தினமணி கதிர்

எம். எஸ். சுப்புலட்சுமி - நான் சந்தித்த பிரபலங்கள் - 57

எம். எஸ். சுப்புலட்சுமி பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

Updated On : 10 மே 2026, 4:02 am IST
பகிர்:

திருப்பதி முதல் திசை தோறும் ஒலிக்கும் சுப்ரபாதம், கல்கி எழுதிய காற்றினிலே வரும் கீதம்... இப்படி எத்தனையோ பாடல்களை இனிமையான குரலில் பாடிப் பரவசப்படுத்தியவர் எம். எஸ். சுப்புலட்சுமி.

புகழ் மிக்க இசைப் பாரம்பர்யத்தில் வீணை சண்முக வடிவுக்கும், பிரபல வழக்குரைஞர் சுப்பிரமணிய அய்யருக்கும் குஞ்சம்மா என்ற எம். எஸ். சுப்புலட்சுமி 1916, செப்டம்பர் 16-இல் பிறந்தார்.

சிறு வயதிலேயே தந்தை, சகோதரியை இழந்தார். தன் தாயையே குருவாகப் போற்றி ஆடல், பாடல், இசை என்று பத்தாவது வயதிலேயே பிரபல கிராம போன் கம்பெனிக்கு இசைத்தட்டில் குரல் தந்து, இன்னிசைக் குயிலானார்.

Advertisement

Advertisement

இவரது குரலைக் கேட்டு காந்தி, நேரு, சரோஜினி நாயுடு, மவுண்ட் பேட்டன் என்று புகழ் மிக்க பலர் பூத்தூவி வாழ்த்தினார்கள். 'குறை ஒன்றும் இல்லை' என்று ராஜாஜி எழுதிய பாடலைப் பாடி புகழ் அடைந்தவர். ராஜாஜி, டி.கே.சி., ராஜா சர் அண்ணாமலை செட்டியார் துவங்கிய தமிழிசைச் சங்கத்துக்குத் தூணாக இருந்த இவர் கச்சேரி செய்து வந்த பொருளை எல்லாம் தர்மகாரியங்களுக்கு வாரி வழங்கினார்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் முற்போக்கு எழுத்தாளர் முன்ஷி பிரேம் சந்த் எழுதிய நாவலை அம்புஜம்மாள் ஆனந்த விகடனில் தொடர் கதையாக எழுத, அதை தமிழ்த் திரை உலகின் தந்தை கே. சுப்பிரமணியம் 'சேவாசதனம்' என்ற பெயரில் படமாக இயக்க, அதில் முதல் தடவையாக ஒரு புதுமைப் பெண்ணாக நடித்து 1938-இல் புரட்சியை ஏற்படுத்தினார். அடுத்தது எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் 1940-இல் 'சகுந்தலை' படத்தில் நடித்தார். இதை எம்.எஸ்.ஸூக்கு துணையாக இருந்த கல்கி சதாசிவம் தயாரித்ததுடன், எம்.எஸ். சுப்புலட்சுமியின் கணவரானார்.

அடுத்தது நடிகை லட்சுமியின் தந்தை புகழ் பெற்ற இயக்குநர் ஒய்.வி.ராவ் இயக்கத்தில் ஆண் வேடத்தில் நாரதராக 1941-இல் 'சாவித்திரி' என்ற படத்தில் நடித்து, அதில் சம்பாதித்த பணத்தை எல்லாம் சுதந்திரப் போராட்டக் காலத்தில், பொருளாதாரம் பிரச்னையில் இருந்த கணவர் சதாசிவத்தின் 'கல்கி' பத்திரிகையின் வளர்ச்சிக்குத் தந்தார்.

கடைசிப் படமாக கல்கி எழுதிய 'மீரா' படத்தில் நடித்தார். 1947-இல் ஹிந்தியிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்த ஜவாஹர்லால் நேரு, 'எம். எஸ். இசைராணி... நான் சாதாரணப் பிரதமர்' என்றார்.

பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கின. ஆசியாவின் நோபல் பரிசுடன், பத்மவிபூஷண், பத்மபூஷண் இவற்றுடன் இந்திய அரசு 1998-இல் பாரத ரத்னா பட்டம் வழங்கி கௌரவித்தது.

இசைக் கலைஞர்களில், அதுவும் ஆரம்பக் காலத் திரையுலகின் அடையாளமாக இருந்த இவருக்காக நான் எழுதி வைத்திருந்த நாடகம் 'இசைக் கோயில்'. அதை இவரிடம் கொடுத்து ஆசி பெற்று நாடகத்திற்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள இவர் வீடு தேடி நுங்கம்பாக்கத்துக்குப் போனேன்.

என்னை வரவேற்பார்களா? என்னைத் தெரியுமா? என்ற அச்சத்தில்தான் போனேன். இவர் வீட்டு வாசலில் நுழைந்த சில விநாடிகளில் 'காரைக்குடி உள்ளே வா' என்ற ஓர் ஆண் குரல்.

ஆச்சரியத்துடன் உள்ளே போனேன். என்னை 'உள்ளே வா' என்றவர் சதாசிவம். அவரிடம் நான் என்னை ஊர்ச் சொல்லி கூப்பிட்டதற்கு நன்றி சொன்னேன். 'ராஜாஜியுடன் நீ அவரைத் தேடி வந்த போது நானும் இருந்தேன். அவர் கதையை திரைப்படமாக்கிய பங்கில் நீ முக்கியமானவன் இல்லையா!' என்று சொன்னார். உள்ளே இருந்து எம். எஸ். ஒரு டம்ளர் மோர் கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். இந்த ஆடம்பர, விளம்பர உலகில் இப்படி ஓர் எளிமையா... அவருக்கு எழுந்து நின்று கும்பிட்டு என் மரியாதையைக் காணிக்கையாக்கி விட்டு விவரத்தைச் சொன்னேன்.

என் கதையைச் சொல்லச் சொல்லி எம். எஸ். கேட்டார். பாராட்டினார். ஆனால், 'பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை' என்றார். நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன். அடுத்த நாளே கல்கியிலிருந்து ஓரங்க நாடகம் ஒன்றை அனுப்பிவைக்கவும் என்று தகவல் வந்தது. 'கை காட்டி மரம்' என்ற நாடகத்தை அனுப்பினேன். என் புகைப்படத்துடன் 'கல்கி'யில் வெளிவந்தது. அதன் பிறகு 'சாகாவரம்' என்ற சிறுகதையை காந்தி ஜெயந்தி நினைவாக வெளியிட்டு சன்மானம் 750 ரூபாய் அனுப்பினார்கள்.

சிலகாலத்துக்குப் பிறகு கல்கி தோட்டம், வீடு எல்லாவற்றையும் விற்கவேண்டிய நிலையில், கோட்டூர்புரத்தில் வாடகைக்கு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட என் மனம் நொறுங்கிப் போனது. எம்.ஜி.ஆர். வலியச் சென்று அரசு வீடு தருவதாகச் சொல்லியும் அவர்கள் ஏற்கவில்லை.

அப்படி குருவாகவும் கணவராகவும் இருந்த சதா

சிவம் 1997, நவம்பர் 21-இல் காலமானார். இசைக்குயில் எம். எஸ். பாடுவதை நிறுத்தி பறந்த குயிலாக 2004, டிசம்பர் 11-இல் வானில் கலந்தார்.

(தொடரும்)

எம். எஸ். சுப்புலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments