FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

அமிதாப்பச்சன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 60

அமிதாப்பச்சன் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

Updated On : 31 மே 2026, 11:35 am IST
அமிதாப்பச்சன்
பகிர்:

புகழின் உச்சியில் இன்றும் இருக்கும் முதல் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். 1942, அக்டோபர் 11 -இல் ஹிந்திக் கவிஞரான ஹரிவன்ஷ்ராய் பச்சனுக்கும் சீக்கியப் பெண்ணான நாடக நடிகை தேஜி பச்சனுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை அலகாபாத்திலும் , இளங்கலையை கொல்கத்தாவிலும் படித்தார்.

ஒரு கப்பல் கம்பெனியில் சரக்குத் தரகராக இருந்து, நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால் அதை விட்டு முதலில் சாதாரண வேடங்களில் நடித்துப் பிறகு 'ஷோலே', 'குட்டி', 'கபீகபீ', 'தேரே மேரே சப்னே' போன்ற நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

ராஜிவ்காந்தியின் நண்பராக இருந்து நாடாளுமன்ற உறுப்பினரானார். அப்போதிருந்த உத்தரபிரதேச முதலமைச்சரைத் தோற்கடித்தார். பொருளாதார வீழ்ச்சியைச் சரிகட்ட தொலைக்காட்சியில் குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Advertisement

Advertisement

பல படங்களைத் தயாரித்தவர், நடிகை ஜெயா பாதூரியை வங்காள முறைப்படி 1973, ஜூன் 3-இல் திருமணம் புரிந்தார். இவர்களது மகன் அபிஷேக் பச்சன், மகள் சுவேதா, மருமகள் உலக அழகி ஐஸ்வர்யராய் வம்ச வாழைகளானார்கள்.

காரைக்குடி நாராயணன்.

1966-இல், என்னை வெள்ளி விழா இயக்குநர் பீம்சிங்கிடம், அவரின் இணை இயக்குநராக இருந்த எஸ். ராமநாதன் அறிமுகம் செய்து வைத்து, உதவி இயக்குநராக்கினார். 'சாது மிரண்டால்' நாகேஷ் நடித்த படம். 'சாது அவுர் சைத்தான்' என்ற பெயரில் பீம்சிங் இயக்கி, வட இந்தியாவைக் கலக்கியது. அதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் நடித்த 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி'யை ஹிந்தியில் எஸ். ராமநாதன் இயக்க முடிவானது.

அந்த நேரம் சாதாரண நிலையில் இருந்த அமிதாப்பச்சனை காமெடி நடிகர் மகமூது சிபாரிசில் ஹீரோவாக நடிக்க வைத்து, எஸ். ராமநாதனும் அமிதாப்பச்சனும் ஒருவருக்கொருவர் தினமும் போனிலாவது பேசும் அளவுக்கு நண்பர்கள் ஆனார்கள்.

எஸ். ராமநாதன் அந்தக் காலத்தில் தினம் ஏதாவது ஒரு விமானத்தில் எங்கேயாவது பறந்துகொண்டிருப்பார். அமிதாப்பச்சன் 'கூலி' படத்தின் படப்படப்பில் பலத்த அடிபட்டு பெங்களூரில் இருந்த போது, அவர் கூடவே இருந்து அவர் காப்பாற்றப்பட்ட பின், நம்பியார் சாமியுடன் இருமுடிகட்டி சபரிமலை சென்றார்.

அமிதாப்பச்சன் எஸ். ராமநாதனை 'சர்ஜி' என்றுதான் அழைப்பார். 'பொண்ணு மாப்ளே', 'இரு துருவம்' படங்களை இயக்கிய எஸ். ராமநாதன் பங்களாவுக்கு நான் போகும் போதெல்லாம் எனக்கு காபி, டீ கொடுப்பது பிரவின், சிவா என்ற இருவரும்தான். அந்த பிரவின்தான் இன்றும் அமிதாப்பச்சனின் நிழலாக இருக்கிறார். அமிதாப் போகும் சார்ட்டட் பிளைட்டில் அவரும் கூடவே இருப்பது தெரிந்து ஆச்சரியப்பட்டேன்.

நான், 'அந்தாகானூன்' என்ற படத்தில் ரஜினியை அறிமுகம் செய்த டி.ராமாராவ் இயக்கிய ஹிந்திப் படம் 'கோவிந்தா'. மதுபாலா, ஷில்பா ஷெட்டி நடித்தது. இதன் கதை, திரைக்கதையை எழுதினேன். படத்தின் பெயர் 'ஹக்கடி'.

என்னை டி. ராமாராவ்விடம் நூற்றுக்கணக்கான பல மொழி படங்களை எழுதியவரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான காலம் சென்ற எம்.டி.சுந்தர்தான் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நேரம் வாஹினி ஸ்டூடியோவில் என்னைப் பார்த்த எஸ். ராமநாதன், அவர் இயக்கி அமிதாப் நடித்துக் கொண்டிருந்த 'ஜமாநாத்' படத்தில் மதிய இடைவேளையின் போது என்னை அங்கு வரச்சொல்லிவிட்டுப் போனார்.

நான் அங்கு போகும் வழியில் இயக்குநர் சேது மாதவனை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அமிதாப்புடன் இருக்கும் பிரவின் ஓடி வந்து, உங்களுக்காக மேக்கப் ரூமில் சாப்பிடாமல் ராமநாதன் சாரும் அமிதாப்ஜியும் காத்திருக்கிறார்கள் என்றதும், அங்கே ஓடினேன். காலதாமதத்துக்கு மன்னிப்பு கேட்டேன்.

அமிதாப்பிடம் ராமநாதன், '' எங்கள் பீம்சிங் யூனிட்டில் உதவியாளராகப் பணிபுரிந்த பல பேர்களில் இவன் மட்டுமே நாடகம், பாடல், கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, சினிமா, சீரியல் என்று எல்லாவற்றிலும் கால் பதித்துப் பேர் வாங்கியவன். நீங்கள் நடித்து நான் இயக்கி வெற்றி கண்ட'பாம்பே டூ கோவா' படத்தில் திரைக்கதைக்கு கூடவே இருந்து உதவியவன்'' என்று சொன்ன போது, நான் சிறகுகள் இல்லாமல் வானத்தில் பறந்தேன்.

அமிதாப் எனக்கு கைக்கொடுத்து அங்கே இருந்த இனிப்பை எடுத்து எனக்குத் தந்து வாழ்த்தினார். இப்படி ஒரு கலைஞனை புகழ் பெற்ற கலைஞர்கள் பாராட்டிய காலம் இப்போது இல்லாமலே போய்விட்டது. இவர் மூன்று தேசிய விருது, 12 தடவை பிலிம் பேர் விருது, 1984-இல் பத்மஸ்ரீ, 2001-இல் பத்மபூஷண், 2015-இல் பத்மவிபூஷண் என்று புகழ் பெற்றவராக வாழ்ந்து வருகிறார்.

(நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments