FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

கே. ஏ. தங்கவேலு - நான் சந்தித்த பிரபலங்கள் - 59

கே. ஏ. தங்கவேலு பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

Updated On : 24 மே 2026, 4:03 am IST
பகிர்:

அருணாசலம், கருமாம்மாள் தம்பதியருக்கு 1917, ஜனவரி 15-இல் காரைக்காலில் பிறந்தார் கே. ஏ. தங்கவேலு. இளம் வயதிலேயே தாயை இழந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தால் வறுமைக்குத் தள்ளப்பட்டு நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் சம்பளத்தில் நாடகங்களில் நடித்தார். அப்போது கலைவாணர் 'பொடியா' என்று அழைத்தால், யாருக்கும் தெரியாமல் அவருக்கு மூக்குப் பொடி கொடுப்பார்.

1951-இல் 'மணமகள்' படத்தில் அறிமுகமானார். 'சிங்காரி' படத்தில் 'டணால்' என்று அடிக்கடி சொல்லி, 'டணால் தங்கவேலு'வாகப் பிரபலமானார். பானுமதி, பத்மினி, சௌகார் ஜானகி ஆகியோருக்கு ஹீரோவாக நடித்தார்.

ஐம்பதாண்டு காலத் திரையுலக வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, புகழ் பெற்றார்.

Advertisement

Advertisement

'நான் கண்ட சொர்க்கம்', 'ரம்பையின் காதல்', 'கல்யாணப் பரிசு', 'அடுத்த வீட்டுப்பெண்', 'மனமுள்ள மறுதாரம்', 'தெய்வப்பிறவி', 'திருடாதே', 'அமரதீபம்', 'தில்லானா மோகனாம்பாள்' போன்ற படங்களில் நகைச்சுவை வசனங்கள் மூலம் கலைவாணரைப் போலவே கருத்துகளையும் சொன்னார்.

ஒரு படத்தில் 'உருப்படமாட்டே' என்று எழுதியதைச் சொல்ல முடியாது என்றார். அதற்குப் பதில் 'உன்னைத் தூக்கி வெயில்ல போட' என்று மாற்றிக் கொண்டார். அபசகுணமான வார்த்தைகளைப் பேசவே மாட்டார்.

அதைத் தொடர்ந்து 'ஹோல் டான்', 'உண்மையைச் சொல்லவிட மாட்டேங்குறானே', 'அங்கேதானே உதைக்குது' இப்படி ஏதாவது ஒன்றைச் சொன்னார்.

1952-இல் சிவாஜிக்கு அப்பாவாக 'பணம்' படத்தில் நடித்தார். நவராத்திரி விழாவில், தன் வீட்டில் பந்தல் போட்டு ஒவ்வொரு நாளும் திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், சிதம்பரம் ஜெயராமன் ஆகியோரின் கச்சேரி வைத்துக் கொண்டாடினார்.

நான் இவரை 1973-இல் 'ராதா' படத்தில் சந்தித்தேன். இந்தப் படத்துக்கு நான் எழுதிய வசனத்தை இவரிடம் படித்தேன். கொலுவுக்கு இவரும் சுகுமாரி அம்மாவும் வந்து சில குடும்பங்களை அழைப்பது போன்ற காட்சி. நான் படித்து முடித்ததும், 'தம்பி, உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சா?' என்று கேட்டார்.

'இல்லை' என்றேன்.

'அதுதான் தப்பா எழுதி இருக்கீங்க?' என்றார்.

'என்ன தப்பு?' என்று கேட்டேன்.

'கொலுவுக்கு அழைக்க பெண்கள்தான் போவார்கள். சுகுமாரியுடன் சேர்ந்து என்னை ஏன் போகச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.

'சரி, நான் நீங்கள் இல்லாமல் மாற்றி எழுதிவிடுகிறேன்' என்று சொன்னேன்.

'இருங்க அவசரப்படாதீங்க... எங்கிட்ட ரெண்டு நாள் கால்ஷீட் வாங்கியிருக்காங்க. அதுல ஒரு சீன் இல்லாமல் போயிடும். நான் நடிக்கிறேன்' என்றார்.

காட்சியில் 'பொட்டு வச்சுக்குங்க' என்று எழுதினேன். 'அப்படிச் சொல்ற பழக்கமில்லை... குங்குமம் எடுத்துக்குங்க' என்று மாற்றச் சொன்னார். இவர் சொன்னபடியே மாற்றினேன்.

நான் 1977-இல் 'அச்சாணி' படத்தை இயக்கி தயாரித்தபோது இவரை மனோரமாவின் மாமனராக நடிக்கச் சொல்லி போனில் பேசினேன். வீட்டுக்கு வரச் சொன்னார்.

பாண்டிபஜாரில் தனி பங்களாவில் ஹாலில் கலைவாணரின் புகைப்படம் இருந்தது.

அவரை கும்பிட்டுவிட்டு 'மாடிக்கு வாங்க' என்று கூப்பிட்டார். போனேன். கதை விவரத்தைச் சொன்னேன். அவர் உடனே நடிக்கச் சம்மதித்தார்.

'ஒரு வேளை படம் முடிந்ததும் நான் நடித்த காட்சிகளை வெட்டி விட்டால் கதை புரியுமா?' என்று கேட்டார்.

'புரியாது' என்று சொன்னேன். 'அப்படியானால் அட்வான்ஸ் கொடுங்கள்' என்றார். 500 ரூபாய் கொடுத்தேன்.

'இதை நீங்களே வச்சுக்குங்க. எனக்குக் கலைவாணர் 2500 ரூபாய் அந்தக் காலத்திலேயே கொடுத்தார். அதை எப்போ தர முடியுமோ தாங்க. உங்கள் கால்ஷீட்டுக்கு நடிக்க வர்றேன்' என்று கூறியபடி பிரசாத் ஸ்டூடியோவுக்கு மேக்கப்புடன் வந்து, 'தம்பி நான் சொன்னபடியே வந்துட்டேன்' என்றார். நானும் அவரிடம் 2500 ரூபாய் கொடுத்தேன்.

அன்று எடுக்க வேண்டிய காட்சி. அவர் 'ஹோட்டலில் சாப்பிட்டவன் வாந்தி எடுத்து செத்து விட்டான்' என்று பொய் கூறிப் பயமுறுத்தி சுருளிராஜன் இவரிடம் பணம் பறிப்பார். அங்கே இருந்த கொள்ளிப் பானை, மூங்கில் எல்லாவற்றையும் பார்த்தவர், உடனே 'இதையெல்லாம் தூக்கி அந்தப் பக்கம் தூரமா எறிங்க' என்று சொன்னார்.

'நீங்கள் எல்லாம் வாழ வேண்டிய பிள்ளைகள், அபசகுணமா எதுக்கு ஆரம்பிக்குறீங்க?' என்றார்.

மனோரமா சுருளியுடன் உட்கார்ந்து பேசிய காட்சியை மாற்றிக் கொண்டார். ராஜாமணி, எம். சரோஜா என்ற இரு மனைவிகளின் கணவராக வாழ்ந்தார். 1994, செப்டம்பர் 28-இல் இவர் தனது 77-ஆவது வயதில் காலமானார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments