பாலாவின் நான் கடவுள் - இறைவனுக்கே இல்லாத இரக்கமும் குற்ற உணர்ச்சியும்!
பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் இறைவனுக்கே இல்லாத இரக்கமும் குற்ற உணர்ச்சியும் பற்றி...
பாலாவின் ‘நான் கடவுள்’ வெளிவந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இப்போது மீண்டும் பார்க்கும் போது அதன் அழுத்தமும் தாக்கமும் எள்ளளவும் குறைந்ததாகத் தோன்றவில்லை.
“வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம், இயலாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்” - இந்த ஒருவரிதான் படத்தின் உள்ளடக்கமும் மொத்தக்கதையுமே!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் 2009-ல் இசைஞானி இளையராஜாவின் இசையில், எழுத்தாளர் ஜெயமோகனின் வசனத்தில், நடிகர் ஆர்யா, பூஜா உமாநாதன், சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியானது - நான் கடவுள்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் சுமார் 170-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு முதல்முறையாக வாய்ப்பளித்திருந்தார் பாலா. ஒரு தமிழ்ப் படத்துக்கு ஹிந்தியில் தொடக்கப் பாடல் வைக்க பாலாவால் மட்டுமே முடியும். ‘ஓம் சிவோஹம்..., பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்...’ உள்ளிட்ட பாடல்கள் பெரிய ஹிட்!
‘பஞ்சாமாம் பாவமுள்ள ஜாதகத்தில் பிறந்த தனது மகன் வீட்டிலிருந்தால், குடும்பம் அழிந்துவிடும்’ என்று ஜோதிடர் சொன்னதைக் கேட்டு மூடநம்பிக்கையால், தன் மகன் ருத்ரனை (ஆர்யா) வாரணாசியில் உள்ள காசியில் 14 ஆண்டுகளுக்கு முன் விட்டுவந்த தந்தை, தன் மகளுடன் அவனை தேடி மீண்டும் காசிக்கு வருகிறார். அங்கே தனது மகன் அகோரியாக மாறியிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ருத்ரனின் தாய்க்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றவும், கடைசி காலத்தில், “எள்ளுந்தண்ணியும் ஊற்றவாவது தனக்கு மகன் வேண்டும்” என்பதையும் உணர்ந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வருகிறார் தந்தை நமச்சிவாயம்.
“நானே கடவுள் என்பதை உணர்ந்தவன் நீ, பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களும் நமக்கு ஒன்றுதான்... அப்படிப்பட்ட உனக்கு உறவுகள் என்று எதுவும் இருக்கக்கூடாது. உன் சொந்த பந்தங்களை அறுத்து எறிந்துவிட்டு வா...” என்று ருத்ரனின் குரு அறிவுரை கூற, காசியிலிருந்து வந்தவன் திடீரென வீட்டை விட்டு வெளியேறி, மலைக் கோயிலின் குகையில் வாழ்க்கையைத் தொடர்கிறான் அகோரி ருத்ரன்.
உடல் குறைபாடுகளுடன் பிறந்த மாற்றுத்திறனாளிகள் ஆதரவின்றி தெருவில் விடப்படும் சூழலில் வேறு வழியின்றி யாசகம் பெற்றுப் பிழைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டு அல்லது யாராலும் கடத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு சமூகத்திலிருந்து விலகப்பட்டு பிறருக்காக பிச்சை எடுக்கும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர். ருத்ரன் இருக்கும் மலைக்கோயிலில் உடல்குறைபாடுடைய ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் தொழில் செய்து வருகிறார் தாண்டவன் (மொட்டை ராஜேந்திரன்).
இந்தப் படத்தில், இந்தியா சினிமாவில், ஏன்.. உலக சினிமாவில்கூட கண்டிராத வகையில் கதாபாத்திரங்களை வடிவமைத்திருந்தார் பாலா. கதாபாத்திரங்களும் அதன் பெயர்களும் முரணாக வடிவமைக்கப்பட்டிருந்தன. கோயிலுக்கு வெளியே கடவுள் வேடமிட்டு பிச்சை எடுப்பவர்களில் உயரம் குறைவாக இருப்பவர் சிவனாகவும், உடல் வலிமையில்லாதவர் அய்யனாராகவும், கால் நடக்க முடியாதவர் அனுமனாகவும், தெத்துப்பல்லுடன் இருப்பவருக்கு மீனாட்சி, கிருஷ்ணர் வேடமும், மலையேற முடியாதவருக்கு முருகன் வேடமும் கொடுத்திருந்தார். மலைக்கோயிலில் இரண்டு கையும் கால்களும் சரியாக வளர்ச்சியின்றி உடலுடன் மாங்காட்டுச் சித்தர்.
வழக்கமாக மூன்று, நான்கு சீன்கள் மட்டுமே திரையில் வரும் வெள்ளைத் தோல் கதாநாயகிகளுக்கான ஃபார்முலாவை உடைத்த பாலா, கருப்புத் தோலுடன் கண் பார்வைத்திறனற்ற பெண்ணை நாயாகியாகவும் அவருக்கு பெயர் அம்சவல்லி என்றும் வைத்திருந்தார்.
நான் கடவுள் படத்தின் திரைக்கதையில் இழை, இழையாக எத்தனை கதைகள் பேசப்பட்டாலும் இன்றுவரை படத்தில் இருக்கும் குற்ற உணர்ச்சிகளைப் பற்றி பெரிதாகப் பேசியாதாகத் தோன்றவே இல்லை. பிச்சைக்காரர்களை வைத்து பிழைக்கும் தாண்டவன், தன்னிடம் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்னைவிட நல்ல வாழ்க்கை வாழ்வதாக நினைக்கிறார். அவர்களுக்கு நினைத்த நேர்த்துக்கு உணவு, மருத்துவ செலவுகள் என அனைத்தும் நாம் தான் பார்க்கிறோம் என்று சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி சொல்கிறார் தாண்டவன்.
புதியதாகக் கடத்தி வரப்படும் மாற்றுத்திறனாளி சிறுவனின் வளைந்த கால்களைப் பார்த்து, “நல்ல வேல ஆண்டவன் நமக்கு வேலை இல்லாம பண்ணிட்டான்” என்று சொல்லும் காட்சிகள் எல்லாம் குற்ற உணர்ச்சியின்மையின் உச்சம்.
பெற்ற தன் மகனை காசியில் கொண்டுபோய் விட்டு வந்த தந்தை, கடைசியில் தனக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு மகன் வேண்டுமே என்று அழைத்து வரச் சென்றாரே தவிர, இவ்வளவுநாள் தேடவில்லை என்று அவருக்கான குற்ற உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளவே இல்லை. அதேபோன்று, பூப்பெய்திய தங்கையைப் பார்க்க வீட்டுக்கு வர வேண்டும் என மலைக்கோயிலுக்குச் சென்று கண்ணீர் விடும் ருத்ரனின் தாய், வீட்டுக்கு வாப்பா... பத்து மாசம் சுமந்து பெத்ததுக்காகவாவது இரக்கம் காட்டக்கூடாதா எனக் கேட்க, “ஐந்திரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையை காலிரண்டு, கையிரண்டு, கண்ணிரண்டு ஆனதே, உடம்பாவது ஏதேடி, உயிராவது எதேடி” என்று அவரை புறந்தள்ளுவார் ருத்ரன்.
பிச்சை எடுப்பதற்கு புதிய ‘உருப்படிகள்’ வேண்டுமென்று திடீரென அறிமுகமாகிறார் மலையாளி நாயர் ஒருவர். இவர், கேரளத்தில் பிச்சை எடுப்பவர்களை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். தாண்டவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து மலைக்கோயில் பிச்சை எடுப்பவர்களை எந்தக் குற்ற உணர்வுமின்றி வாங்கிச் செல்கிறார். அவர் வாங்கிச் செல்லும்போதே, கண் பார்வையற்ற கதாநாயகி மீதும் தன் பார்வையை வைத்துவிடுகிறார்.
முகம் சிதைந்த யாரும் பார்க்கக்கூட விரும்பாத செல்வந்தர் ஒருவர் தனது வாழ்க்கைத்துணையாக பார்வையற்ற பெண் வேண்டுமென்று, மலையாளி நாயரும் தாண்டவனிடம் வருகிறார். ரூ. 10 லட்சத்துக்கு விலை பேசப்படும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களிடமிருந்து தப்பிக்கும் அம்சவல்லி, மலை மேடுகளிலெல்லாம் ஓடுகிறாள்.
உயிருள்ள மனிதக் கடவுளாகக் கருதப்படும் மாங்காட்டுச் சித்தர், மாதா, அல்லா என அனைத்துக் கடவுளையும் அழைத்துப் பார்க்கிறாள் அம்சவல்லி. அவளுக்கு யாரும் உதவவில்லை. அவ்வளவு காலம் வாய் கட்டப்பட்டதுபோலிருந்த மாங்காட்டுச் சித்தர், “நான் சாமியில்லை; மேல ஒருத்தன் இருக்கான் ஈஸ்வரஹா மானுஷ்ய ரூபே”-னு அவன்தான் மனித உருவிலான சாமியென, என்னால் உன்னைக் காப்பாற்ற முடியாது என்ற குற்ற உணர்வுடன் ருத்ரனிடம் உதவி கிடைக்கும் என்று கூறுகிறார்.
இறுதியில், “வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம், இயலாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்... மே பிரம்மா... மே ஈஸ்வர்.. அஹம்பிரம்மாஸ்மி!” என்று அம்சவல்லியின் கழுத்தை அறுத்துக் கொன்று அவளுக்கு வரமளிக்கிறார் ருத்ரன்.
“அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை, ஆதியின் வல்வினை சூழ்ந்ததா? அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வதில் எவ்விடத்தில்” என்று பாடுவோருக்கு இரக்கம் காட்டாத இறைவன் கோயிலுக்குள் எவ்வளவு கொட்டி கும்பிட்டாலும் என்ன செய்யப் போகிறான், இறைவனின் படைப்பில் அனைவரும் சமம். ஆனால், குற்ற உணர்வுகளும் இரக்கமுமின்றி இருக்கிறான் இறைவன் என்பதையும் திரைமொழியில் உணரவைக்கிறார் பாலா.
குறைபாடுகள் இருந்தாலும், ஆதரவற்றிருந்தாலும் அவர்களுக்கான உலகில் அங்கேயும் மக்கள் வாழ்கிறார்கள், சிரிக்கிறார்கள், காதலிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், திருமணம் செய்கிறார், குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், கோயிலுக்கு வெளியில் கடவுள் வேடமிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கடவுளாகப் பார்த்துப் பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்களை வாழ இயலாதவர்கள்; அவர்கள் மரணத்தை வரமாகப் பெற வேண்டும் என்று இயக்குநர் பாலா நினைக்கிறாரா? என்றே குற்ற உணர்வைத் தோன்ற வைக்கிறது - நான் கடவுள்!
கலைப்படங்களால் தனக்கென தனி இடத்தை இன்றளவும் தக்கவைத்திருக்கும் பாலா, தொடர் தோல்விகளால் துவண்டு வருகிறார். அவருடைய இடத்தை அவர் மட்டுமே நிரப்ப முடியும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
ஜூலை 11 - பாலா பிறந்தநாள்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.