முகப்பு
தினமணி கதிர்

ஓரேர் ஒரு மாட்டு உழவர்

'மாடாய் உழைக்கிறார்' என்ற வழக்காறு உண்டு. உண்மையில் மாடாக உழுதவர் உண்டு.

Updated On : 5 ஜூலை 2026, 4:06 am IST
பகிர்:

சுஜாதா மாலி

'மாடாய் உழைக்கிறார்' என்ற வழக்காறு உண்டு. உண்மையில் மாடாக உழுதவர் உண்டு. அதிலும், உழுகிற ஏரில் ஒற்றை மாட்டைப் பூட்டிக் கொண்டு மற்றுமோர் மாடாகத் தம்மையே இருத்திக் கொண்டு உழுதவர்தான் ஸ்ரீமத் அட்சயலிங்கத் தம்பிரான் சுவாமிகள்.

மயிலாடுதுறையை அடுத்த திருப்புள்ளிருக்கு அருகேயுள்ள வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோயிலுக்காக மாடாக உழுதவர் அட்சயலிங்க முனிவரனார். இவர், 'ஓரேர் ஒரு மாட்டு உழவர்', 'அட்டமா சித்திவல்ல அட்சயலிங்கசாமி' என்ற பட்டங்களால் போற்றப்படுகிறார்.

Advertisement

Advertisement

கோயில்களுக்கு இன்று இருப்பது போன்ற நிலங்கள் முற்காலத்தில் இல்லை. உழு கருவிகள், சாதனங்கள் போன்றவைகளும் குறைவு. அப்படிப்பட்ட நிலையே வைத்தீஸ்வரன் கோயிலிலும் நிலவியது. தருமபுரம் ஆதீனத்தின் பரிபாலனத்துக்குரிய இந்தக் கோயிலில் 1840-களில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர் ஸ்ரீமத் அட்சயலிங்கத் தம்பிரான் சுவாமிகள். இருந்தது ஒரேயொரு உழவு ஏர். ஒரேயொரு காளை மாடு.

கைவசம் இருந்த ஏரில் மாட்டைப் பூட்டிய சுவாமிகள், இன்னொரு மாட்டுக்குப் பதில் தாமே தமது கழுத்தை நுகத்தடியிற் கொடுத்திழுத்து நிலத்தை உழுது கொண்டிருந்திருக்கிறார். இதை அந்த வழியே சென்ற அரசர் பார்த்தார்.

உள்ளம் கலங்கிய அரசர், உடனே ஏராளமான விளை நிலங்களையும், பொருள் செல்வத்தையும் கோயிலுக்கு அளித்தார். இந்த வரலாறு அடங்கிய 1847-ஆம் ஆண்டு பட்டயம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மதுரையைச் சேர்ந்த வண்ணக்கன் புலவர் என்பவர் 1133 செய்யுள்களை உடைய வேளூர் தலபுராணத்தை இயற்றினார். இந்த நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுளில், 'திகழ் சிவஞான தேசிகன் அருளால் தெளிந்துளம் சகலசாத்திரமும் புகழ்பெற உணர்ந்தோன் அட்சயலிங்கப் புண்ணிய முனிவரன்' என்கிற வரிகள் அட்சயத்தம்பிரான் சுவாமிகள் குறித்து இடம்பெற்றுள்ளது.

'ஒற்றை ஏரை வைத்து உழவன் படும் பாட்டைப் பாடிய சங்கப் புலவர் (குறுந்தொகை) ஓரேர் உழவனார் என்ற பெயரால் நிலைக்கப் பெற்றதைப் போல, அட்சயலிங்கத் தம்பிரான் சுவாமிகளும் உழுதமையால் ஓரேர் ஒரு மாட்டு உழவர் ஆனார்' என ஊரன் அடிகள் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments