முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்

ஒரு விழாவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, கவியோகி சுத்தானந்த பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On : 5 ஜூலை 2026, 4:02 am IST
பகிர்:

ஒரு விழாவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, கவியோகி சுத்தானந்த பாரதி ஆகியோர் பங்கேற்றனர். கவிமணி பேசும்போது, 'எனக்கும் சுத்தானந்த பாரதிக்கும் அவ்வளவு நெருக்கமான நட்பு இருப்பதைக் கண்டு சிலர் வியப்படையலாம். பொதுவாக, எங்கள் இருவருக்கும் பல காரியங்களில் நிறைய பொருத்தம் உண்டு. உதாரணமாக, எங்கள் ஊர்களைத்தான் பாருங்களேன். எனக்கு புத்தேரி. அவருக்கு புதுச்சேரி' என்றார்.

இதற்கு அடுத்ததாக சுத்தானந்த பாரதியார் பேசும்போது, 'கவிமணி கூறும்போது தனக்கு புத்தேரி என்றும், எனக்கு புதுச்சேரி என்றும் குறிப்பிட்டார். உங்களுக்கெல்லாம் ஒன்று நன்றாகத் தெரியும். சேரி செழிக்க வேண்டுமானால், ஏரி அவசியம் அல்லவா? இந்தப் புதுச்சேரியின் செழுமைக்கு அந்தப் புத்தேரியே காரணம்' என்றார். இதைக் கேட்டதும் கூட்டத்தினர் சிரித்து மகிழ்ந்தனர்.

-முக்கிமலை நஞ்சன்

Advertisement

Advertisement

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார் ரவீந்திரநாத் தாகூர். ஐம்பதுக்கும் அதிகமானோர் வீட்டில் இருப்பார்கள். வீட்டில் யாருக்காவது பிறந்த நாள் என்றால், விதவிதமான கொண்டாட்டங்கள்தான் இடம்பெறும். அதில் ஒன்று. ஒவ்வொரு பிள்ளை பெயரிலும் ஒரு நோட்டு இருக்கும். அதில் அந்த நபரைப் பற்றி குடும்பத்தினர் தங்களது விமர்சனங்களை இஷ்டம்போல் எழுதுவதுண்டு.

ரவீந்திரநாத் பிறந்த நாளன்று அவருடைய பாட்டி, 'ரவியைப் பற்றி சொல்ல உருப்படியாக எதுவுமில்லை. அவன் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது. மருத்துவராக, பொறியாளராக, பெரிய ஆளாக வருவான் என்று தோன்றவில்லை. மற்ற பிள்ளைகள்போன்று அவன் புத்திசாலியாக இல்லையே என வருத்தமாக இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.

மற்ற பிள்ளைகள் பிற்காலத்தில் இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், ரவீந்திரநாத் தாகூர், தேசியக் கீதத்தை அளித்தார். உலகப் புகழ் பெற்றவராக உருவாகி, நோபல் பரிசையும் பெற்றார்.

திரையுலகில் பல இளம் நட்சத்திரங்கள் திரைத்துறையில் நடிப்பதோடு மருத்துவப் படிப்பையும் வெற்றிகரமாக முடிக்கின்றனர். சாய் பல்லவி, மீனாட்சி சௌத்ரி, அதிதி சங்கர், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் மருத்துவம் படித்துவிட்டு, திரைத்துறையில் நுழைந்தனர். இதேபோல், தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவைத் தொடர்ந்து, த்ரிஷ்யம் 3 நடிகை ஷ்ரத்தா கோகுலும் மருத்துவம் படித்துள்ளார்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

சென்னைப் பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இங்கு முதலில் தொடங்கப்பட்ட பி.ஏ. பட்டப் படிப்பில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. பின்னர், 1871-இல் பி.எல். பட்டம் பெற்றார். கும்பகோணத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய அவர், 1884-இல் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் பணியாற்றி, 1890-இல் ஓய்வு பெற்றார்.

'நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?' என்று தன்னைப் பார்க்க வந்த உ.வே.சாமிநாத ஐயரிடம் கேட்டார் கும்பகோணம் நீதிமன்றத் தலைவர் சேலம் ராமசாமி முதலியார்.

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கம்பராமாயணம், பிரபந்தங்கள், அந்தாதிகள், கலம்பகங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் பாடம் கேட்டதாக உ.வே.சா. கூறினார்.

அதைக் கேட்ட முதலியார், 'இவைகளெல்லாம் பிற்காலத்து நூல்கள். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான பழைய நூல்களைப் படித்து இருக்கிறீர்களா?' என்று கேட்டவாறே சிந்தாமணி, ஏட்டுச் சுவடியை உ.வே.சா.விடம் அளித்தார். இதைப் படித்து விளக்கம் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

உ.வே.சா.வின் ஏடு தேடும் பயணத்தைத் தூண்டிவிட்ட ஏட்டுச் சுவடி அது. 1887-இல் சீவகசிந்தாமணி இவரது பதிப்புப் பணியின் முதல் அரும்பாக இருந்தது.

(தமிழ் வளர்த்த பெருமக்கள் நூலில் இருந்து...)

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments