தகவல் கேட்போம்..!
'ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் சாமானிய மக்களைப் பார்த்து அச்சப்படச் செய்யும் ஓர் ஆயுதமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளது.
'ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் சாமானிய மக்களைப் பார்த்து அச்சப்படச் செய்யும் ஓர் ஆயுதமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தச் சட்டத்தின் கீழ் பொது அதிகார அமைப்புகளிடம் தகவல் பெற உரிமை உள்ளது என்பதை அறிந்து, அதுதொடர்பான புத்தகங்களை வாங்கிப் படித்தும், இணையதளம் வழி தேடியும், தகவல் உரிமைச் சட்டம் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறேன்' என்கிறார் நாற்பத்து ஐந்து வயதான அ.அருள்சங்கர்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட களியக்காவிளையை அடுத்த பரக்குன்று பகுதியைச் சேர்ந்த இவர் வாடகை வாகனத் தொழில் செய்து வருவதுடன், பள்ளி வேன் ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார். தொழில் பயிற்சிப் பள்ளியில் மோட்டார் மெக்கானிக் படித்துள்ள இவருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
அவரிடம் பேசியபோது:
Advertisement
Advertisement
'தொடக்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு, சாலை பழுது உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு புகார் மனுக்கள் மூலம் எடுத்துச் சென்றதுடன், கிராம சபை கூட்டத்திலும் முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அலுவலர்கள் பலர் கிண்டல் செய்யும் தொனியில் பேசி அவமானப்படுத்தியது உண்டு. இதற்கு மாற்றுவழி தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது தெரிந்தது.
பிரச்னைகளுக்குத் தீர்வு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை 2005- இல் மத்திய அரசு அமல்படுத்தியது. இச்சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகள் மூலம் சாதாரண பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இருந்து, அரசிடமிருந்து பல கோடி ரூபாய்க்கான திட்டங்கள் வரை கொண்டு வந்து செயல்படுத்த முடியும்.
2020- ஆம் ஆண்டில் கால்நடை துறை சார்பில் கால்நடை வளர்ப்போருக்கு, குடும்பத்துக்கு 4 ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது குமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பயனாளிகள் தேர்வில், பட்டியலில் பெயர் இருந்தும் 20 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்
படவில்லை. பல பயனாளிகள் பெயர் இரண்டு முதல் மூன்று முறை பதிவிடப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு ஒரு முறை மட்டுமே ஆடுகள் வழங்கப்பட்டதும், இந்த விவகாரத்தில் அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பயனாளிகள் முறையிட்டும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதையடுத்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
இதேபோன்று மலையடி ஊராட்சிக்கு உள்பட்ட ஓர் ஏழைப் பெண்ணின் குடும்பத்துக்கு ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் இணைப்பு வழங்குவதில் 15 ஆண்டுகள் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், தகவல் உரிமைச் சட்டம் மூலம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டது. இதேபோன்று பொதுப் பாதை ஆக்கிரமிப்பு, மின்வாரிய குறைபாடு, சாலை, தெருவிளக்குப் பழுது உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகள் உள்ளிட்ட பல விவகாரங்களை வெளிக்கொண்டு வந்து, 80 சதவீத பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
ஐந்நூறு மனுக்கள்:
இதுவரை சுமார் 500 மனுக்களுக்கு மேல் எழுதி தகவல் பெற்றுள்ளேன். இதில் பெரும்பாலானவை உள்ளாட்சி நிர்வாகம், மின்சார வாரியம் சம்பந்தப்பட்ட மனுக்களாகும். இதில் 75-க்கும் மேற்பட்ட மனுக்கள் 2- ஆவது மேல்முறையீடு செய்து பெற்றுள்ளேன். இதுதவிர சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல் தராமல் நீண்ட காலதாமதம் செய்த வகையில், அம் மனுக்கள் மீது 2 -ஆவது தடவைக்கு மேல், மேல்முறையீடு செய்யப்பட்ட வகையில் 25 முறைக்கு மேல் சென்னையில் மாநில தகவல் ஆணையர் முன் பொதுதகவல் அலுவலரும், எதிர்தரப்பில் நானும் ஆஜராகி இம் மனுக்களுக்கு தீர்வு பெற்றது உண்டு.
தகவல் உரிமைச் சட்ட மனு மூலம் ஊராட்சி அலுவலகங்களில் கள ஆய்வு செய்து, ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியும் மேற்கொண்டுள்ளேன். தற்போது என்னைச் சார்ந்த நண்பர்கள் பலரும் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலராக மாறி வருவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் அவசியத்தை பொதுமக்கள் அனைவரும் உணரவேண்டும். விழிப்புணர்வும் மேலும் அதிகரிக்க வேண்டும்' என்கிறார் அ.அருள்சங்கர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.