பி. எஸ். வீரப்பா - நான் சந்தித்த பிரபலங்கள் - 48
பி. எஸ். வீரப்பா பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
'ஹா... ஹா... ஹா...' - இந்த இடி மின்னல் சிரிப்புக்குரிய வில்லன் நடிகர் பி. எஸ். வீரப்பா. 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் வைஜெயந்தியும் பத்மினியும் 'சாதுர்யம் பேசாதடி ... எ ன் சலங்கைக்குப் பதில் சொல்லடி...' என்றதும், 'சபாஷ்... சரியான போட்டி' என்பார்.
இந்தக் குரலை எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க முடியுமா? 'மணந்தால் மகாதேவி... இல்லையேல் மரணதேவி' என்பதையும், 'அத்தான்... இந்த ஒற்றை வார்த்தையைக் கேட்டு கருணாகரன் செத்தான்' என்பதையும் கேட்டு ரசிக்காதவர்கள் யார்?
இவர் 1911, அக்டோபர் 9 -இல் காங்கேயம் அருகிலுள்ள கிராமத்தில் பிறந்து, பொள்ளாச்சியில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். தகப்பனார் பெயர் சின்னப்பா, தாயார் பாப்பம்மாள், மனைவி வீரலட்சுமி, இரண்டு பெண்கள், ஒரு மகன். அதில் ஒரு மகள் காலமாகி விட்ட நிலையில், இவர் மகன் ஹரிஹரன் இவருக்குப் பின் பல படங்களைத் தயாரித்து நஷ்டப்பட்டு மரணமடைந்தார்.
பி. எஸ். வீரப்பா ஆரம்ப காலத்தில் மில்லில் வேலை பார்த்து, நாடகங்களில் நடித்தார். 1939-ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் சுற்றித் திரிந்தபோது கே. பி. சுந்தராம்பாள் இவரைத் தன் வீட்டுக்கு வரச் சொல்லி, ஒரு சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்து , அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் ஆர். டங்கனிடம் அறிமுகம் செய்து, தான் நடித்த 'மணிமேகலை' படத்தில் நடிக்க வைத்தார்.
எம். ஜி. ஆருக்கும் இவருக்கும் 1951-இல் எடுத்த 'நாம்' படத்தின் மூலம் நட்பு ஏற்பட்டு, எம். ஜி. ஆர். படம் என்றால் பி. எஸ். வீரப்பா இருப்பார் என்ற நிலைமை ஏற்பட்டு வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. இவர் 'பிள்ளைக்கனியமுது', 'ஆலயமணி', 'ஆனந்த ஜோதி', 'திசை மாறிய பறவை', 'மேகத்துக்கும் தாகமுண்டு' என்ற தமிழ்ப் படங்களுடன் சில ஹிந்தி படங்களையும் தயாரித்தார்.
இவர் 'ஆலயமணி'யை 'ஆத்மி' என்று திலீப்குமாரை வைத்து எடுத்த போது வாஹிணி ஸ்டூடியோவில் நான் ஏ. பீம்சிங் இயக்கத்தில் கிளாப் அடித்தேன். இதையடுத்து ஜெய்சங்கர், காஞ்சனா நடித்த 'பொண்ணு மாப்ளே' படத்தில் எஸ். ராமநாதனுக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன்.
இந்தப் படத்தில் வில்லனாக ஓ.ஏ.கே. தேவரை நடிக்க வைக்கலாம் என்று பேசிய போது, நான் பி.எஸ். வீரப்பாவிடம், 'நீங்கள் ஏன் வில்லனாக நடிக்கக் கூடாது?' என்று கேட்டேன்.
அவர் பல சமாதானங்களைச் சொன்னார். பி. எஸ். வீரப்பாதான் வில்லன் என்று கண்டுபிடிக்க முடியாமல், முகத்தில் மாஸ்க் போட்டு விடலாம் என்ற யோசனையை ஏற்றுக் கொண்டு நடித்தார். அப்போது ஒரு நாள் என் ஆரூயிர் நண்பர் (இன்று என்னுடன் இல்லை) சிதம்பரம் என்பவர் என்னைத் தேடி ஆபீசுக்கு வந்தார். அவருடன் மதியம் எழும்பூரில் இருந்த வேகா ரெஸ்ட்டாரண்ட் போகலாம் என்று நினைத்து, பி.எஸ். வீரப்பாவிடம் சென்று 50 ரூபாய் கேட்டேன். அவர் உடனே 'கிருஷ்ணா' என்று புரொடக்ஷன் மேனேஜரைக் கூப்பிட்டார். நான் விவரத்தைச் சொன்னேன்.
அவர் உடனே 'எப்படி நீங்கள் அவரிடம் பணம் கேட்கலாம். நீங்கள் என்ன டைரக்டரா, ஹீரோவா?' என்று சத்தம் போட்டார். இந்த விவரம் தெரிந்த டைரக்டர் எஸ். ராமநாதன், மும்பையிலிருந்து வந்ததும் என்னைக் கோபித்தார்.
'50 ரூபாய் சாப்பாட்டுக்குக் கேட்டது தப்பு என்று சொல்லும் வேலை பார்த்து வாழ வேண்டுமா?' என்று என் மனசாட்சி என்னைக் கேட்டது. நான் யாருக்கும் சொல்லாமல் 'பொண்ணு மாப்ளே' படத்தில் பணிபுரியாமல் பாதியிலேயே நின்று விட்டேன்.
பி.எஸ். வீரப்பா 'ஆலயமணி'யை ஹிந்தியில் எடுத்து தோல்வியாக, அதன் பின் அதில் நடித்த திலீப்குமார், அவர் நடித்த வெற்றிப் படமான 'கங்கா ஜமுனா'வை தமிழில் எடுக்க பி.எஸ். வீரப்பாவுக்கு உரிமை தந்தார். அதுதான் சிவாஜி, பத்மினி நடித்த 'இரு துருவம்'. அதில் சில காட்சிகளை எழுத வேண்டிய வசனகர்த்தாவான ராமு என்பவர் எழுதியது சிவாஜிக்குப் பிடிக்காததால் என்னைக் கூப்பிட்டு சில காட்சிகளை எழுதச் சொன்னார். நான் எழுதியதை சிவாஜியிடம் படித்துக் காட்டிப் பாராட்டு வாங்கினேன். அப்போது என்னை எஸ். ராமநாதன் 'என் அசிஸ்ட்டெண்ட்' என்றார். ஒளிப்பதிவாளர் வின்சென்ட் என்னை 'என் மலையாள கதாசிரியர்' என்றார்.
பி.எஸ். வீரப்பா தட்டிக் கொடுத்து 1000 ரூபாய் கொடுக்கச் சொன்னார். எனக்கு உங்கள் கம்பெனியில் கதை, வசனம் எழுதும் வாய்ப்பு தரும் போது இந்த 1000 ரூபாயைக் கொடுங்கள் என்று கூறி, அதை வாங்காமல் போனேன்.
அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு ஒரு மணியார்டர் வந்தது. அதில் பழைய பாக்கி 50-ம் சேர்த்து 1050 ரூபாய் பி.எஸ். வி. பிக்சர்ஸ் என்று வந்தது. அதையும் திருப்பி அனுப்பி விட நினைத்தேன். ஆனால், என் தேவைகள் என் தன்மானத்தை தரையில் போட்டு மிதித்தது. அதை என் மாதச்செலவுக்கு வைத்துக் கொண்டேன்.
வில்லனாக நடித்திருந்தாலும் வாழ்வில் நல்லவனாக வாழ்ந்த பி.எஸ். வீரப்பா கலைமாமணி விருது, ராஜீவ்காந்தி விருது பெற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். 1998, நவம்பர் 9-இல் இவரது அதிரும் சிரிப்புப் புயலை உதிரிப்பூக்களாக்கி மறைந்தார்.
(தொடரும்)