தினமணி கொண்டாட்டம்

இன்ப அதிர்ச்சி தரும் மருத்துவர்

சுதந்திரன்


புணேவில் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரசவத்திற்காக தன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்தார். பிரசவ செலவிற்கு என்று கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார். பிரசவ நாள் அன்று "சுகப் பிரசவம் நடக்காது போலிருக்கு ... சிசேரியன் செய்திடலாமா..' என்று டாக்டர், பிரசவத்திற்கு வந்திருந்த பெண்ணின் கணவனிடம் கேட்க... "இல்லைன்னாலும் சுகப்பிரசவம் நடக்க விட்டுருவீங்க...' என்று மனதிற்குள் சபித்தவாறே... "வேற வழியில்லைன்னா என்ன செய்யறது டாக்டர் ... சிசேரியனே செஞ்சிடுங்க' என்றார்.

"எவ்வளவு ஃபீஸ் தீட்டப்போறாங்களோ...யாருகிட்ட போய் மேலும் கடன் வாங்குறது' என்று கணவன் கையைப் பிசைய ஆரம்பித்தார். சில மணி நேரம் கழிந்து டாக்டர் அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தார்.
"டாக்டர், என்ன குழந்தை'. கணவன் கேட்டார்.

"உங்க வீட்டிற்கு லட்சுமி வந்திருக்கிறாள்'. டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

பெண் குழந்தை என்றதும் கணவனுக்கு தலை சுற்றியது. "சிசேரியன் பிரசவத்திற்கு அதிகம் செலவாகுமே... பத்தாத குறைக்கு பெண் குழந்தை வேறு. இன்றையிலிருந்து செலவுக்கு கணக்கு ஆரம்பம்..' தந்தைக்கு பக்கென்றது "ஃபீஸ் எவ்வளவு டாக்டர் ?' என்று கேட்டார்.

"லட்சுமி பிறந்தால் நான் ஃபீஸ் வாங்குவதே இல்லை' என்றார் டாக்டர்.

"கட்டணம் வாங்காமல் பிரசவம் பார்ப்பார்களா'. தந்தை மயங்கி விழாத குறை...!

டாக்டர் கணேஷ் ராக் புணேவில் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 2000 பெண் குழந்தைகள் இவரது மருத்துவமனையில் பிறந்துள்ளன. அந்தப் பிரசவங்களுக்காக கட்டணமாக ஒரு ரூபாய் கூட டாக்டர் கணேஷ் ராக் பெற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல... அவரது மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் குழந்தை பிறந்த வார்டை அலங்கரித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி மருத்துவமனை நிர்வாகம் கொண்டாடும்.

"அப்பா ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளி. அப்பாவுக்கு பாரம் சுமப்பதில் உதவ போய் வருவேன். அம்மாவும் சிறு வேலைகளுக்குப் போவார். குடிசை வீடு. எங்களது வறுமை நிலையைப் போக்க படிப்பு ஒன்றுதான் வழி என்று புரிந்தது. தீவிரமாகப் படித்து டாக்டரானேன். அதற்குமுன் நல்ல மல்யுத்த வீரனாக வர வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது என்று தொடங்குகிறார் டாக்டர் கணேஷ் ராக்.

""என்னதான் காலம் மாறினாலும், கருத்துகள் மாறினாலும், பெண்குழந்தை பிறந்தால் பெற்றோர்கள் உட்பட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் முகம் வாடிவிடுகிறது. அதுதான் உண்மை. புதிதாகத் திருமணம் ஆனவர்கள் கூட ஆண் குழந்தை பிறக்க என்ன என்ன சாப்பிடவேண்டும்... என்னென்ன செய்ய கூடாது என்றுதான் கேட்கிறார்கள்.

எனக்கு தங்கை கிடையாது.. எனக்கு இரண்டு தம்பிகள் மட்டுமே. பெண் குழந்தை பிறந்துவிட்டால் சுமை என்று கருதுகிறார்கள். எப்படியாவது அந்தச் சுமையை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நினைவு பெற்றோர்களின் மனதில் குடியேறிவிடுகிறது. இந்தியாவில் பெண் சிசு கொலைகளும் நடக்கின்றன. அம்மாவும் நீ மருத்துவராகி பெண் தேவதைகளைக் காப்பாற்று என்றார். அம்மா சொன்னதை நான் பின்பற்றி வருகிறேன்.

தொடக்கத்தில் எனது மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் பிரசவம் பார்த்ததற்குக் கட்டணம் வாங்கக்கூடாது என்று சொன்னபோது எல்லாரும் என்னை ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள். மருத்துவமனை செயல்பட பணம் வேண்டுமே என்று கேட்டார்கள். மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததும் அனைவருக்கும் இனிப்பு வழங்கச் சொன்னதும்... எனக்கு என்ன ஆச்சு என்று விசித்திரமாகப் பார்த்தார்கள். எனக்கு வறுமை புதிதல்ல... கொஞ்சம் பணத்துடன் வாழ எனக்குத் தெரியும்... பணத்தை மட்டும் எதிர்பார்த்து செயல்பட்டால் நான் உண்மையான மருத்துவன் அல்ல..

இதுவரை 2000 இலவச பிரசவங்கள் உங்கள் மருத்துவமனையில் நடந்திருக்கின்றன... கட்டணம் எதுவும் வாங்கவில்லை. எவ்வளவு இழந்திருக்கிறீர்கள் என்று கணக்கிட்டதுண்டா... என்பார்கள். கணக்கு போட்டால் ஒருவேளை இவ்வளவு இழப்பா என்று அதிர்ந்து போகலாம். அதனால் நான் அந்தக் கணக்கைப் போடுவதில்லை.

எனது இந்த செயல்பாடுகளுக்கு மனைவியும் மகளும் ஆதரவு தந்து வருகிறார்கள். எனக்குப் பாராட்டுக்கள் பல திசைகளிலிருந்து வந்தாலும் பெண் குழந்தையை எனது மருத்துவமனையில் பெற்றவர்கள் மனம் நிறைந்து நன்றி சொல்கிறார்களே அதுதான் எனக்கு நிறைவைத் தருகிறது என்று மகிழ வேண்டும்'' என்கிறார் டாக்டர் கணேஷ் ராக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

ஹைதராபாத்தில் கார் பதிவெண்ணுக்கு ரூ.25 லட்சம்!

குவாலிஃபையர் 1: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை! | செய்திகள்: சிலவரிகளில் | 21.05.2024

கேஜிஎஃப் தங்கத்தில் ஆபரணமா? ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT