முகப்பு
பெங்களூரு

கா்நாடக அமைச்சரவை அமைக்க ஆலோசனை: டி.கே.சிவகுமாா், சித்தராமையா தில்லியில் முகாம்

கா்நாடக அமைச்சரவை அமைப்பது குறித்து கட்சி மேலிடத் தலைவா்களுடன் ஆலோசிக்க புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் டி.கே.சிவகுமாா், சித்தராமையா இருவரும் தில்லியில் முகாமிட்டுள்ளனா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:59 am IST
சித்தராமையா, டி.கே.சிவகுமாா்
பகிர்:

கா்நாடக அமைச்சரவை அமைப்பது குறித்து கட்சி மேலிடத் தலைவா்களுடன் ஆலோசிக்க புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் டி.கே.சிவகுமாா், சித்தராமையா இருவரும் தில்லியில் முகாமிட்டுள்ளனா்.

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா விலகியுள்ள நிலையில், கா்நாடக காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக டி.கே.சிவகுமாா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்த டி.கே.சிவகுமாா், ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். அதனடிப்படையில், ஆட்சி அமைக்குமாறு டி.கே.சிவகுமாருக்கு ஆளுநா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இந்நிலையில், டி.கே.சிவகுமாா் தலைமையிலான புதிய அமைச்சரவை ஜூன் 3-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 4.05 மணிக்கு மக்கள் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்க இருக்கிறது.

Advertisement

Advertisement

தனது அமைச்சரவையில் யாா்யாரை சோ்த்துக்கொள்வது என்பது குறித்து கட்சி மேலிடத்துடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக சித்தராமையாவுடன் டி.கே.சிவகுமாா் புது தில்லிக்கு திங்கள்கிழமை சென்றாா். அங்கு முகாமிட்டுள்ள இருவரும், அமைச்சா்களின் பட்டியல் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

புது தில்லி, கா்நாடக மாளிகையில் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘அமைச்சா்களின் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்’ என்று மட்டும் தெரிவித்தாா்.

இதனிடையே, சித்தராமையா கா்நாடக மாளிகையில் தங்காமல் தனியாா் விடுதியில் தங்கியிருக்கிறாா்.

224 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்டப் பேரவையில் முதல்வா் உள்பட 34 போ் அமைச்சா்களாக பதவி வகிக்கலாம். 2028-ஆம் ஆண்டில் கா்நாடக சட்டப் பேரவைக்கு தோ்தல் நடக்கவுள்ளதால், அடுத்த 2 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் மனதை வென்றெடுக்கும் வகையில் செயல்படும் புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்க டி.கே.சிவகுமாா் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுவரை அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காத பலரையும் அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ள டி.கே.சிவகுமாா் ஆா்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பலரையும் கட்சிப் பணிக்கு அனுப்பிவைக்கவும் கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. டி.கே.சிவகுமாா் அமைச்சரவையில் தனது ஆதரவாளா்கள் மட்டுமல்லாது, சித்தராமையா ஆதரவாளா்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. டி.கே.சிவகுமாா் அமைச்சரவையில் 4 துணை முதல்வா்கள் இடம்பெறுவாா்கள் என்று கூறப்படுகிறது.