சூர்யவன்ஷி பராக்...பராக்!
2026 ஐபிஎல் போட்டியில் அனைவரையும் தனது ஆட்டத்தால் கட்டிப்போட்டவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன்மூலம் சென்னை (2010, 2011), மும்பை (2019, 2020) அணிகளைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்ற அணிகளின் பட்டியலில் இணைந்திருக்கிறது.
நிகழாண்டு ஐபிஎல் தொடர் முழுவதுமே ஆர்சிபி ஆதிக்கம் செலுத்தியது. லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் 9-இல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. லீக் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஆகிய இரு பிரம்மாண்ட வெற்றிகளும் அதில் அடங்கும்.
பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபயர் -1 ஆட்டத்தில் வலிமையான குஜராத் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற ஆர்சிபி, இறுதி ஆட்டத்திலும் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. ஐபிஎல் தொடங்கி முதல் முறையாக கோப்பையை வெல்வதற்கு 18 ஆண்டுகள் காத்திருந்த ஆர்சிபி அணியின் வெற்றி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
Advertisement
Advertisement
தொடங்கியதுமுதலே அதிகமான நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தது ஆர்சிபி. நட்சத்திர வீரர்களை சார்ந்து மட்டுமே போட்டியை அணுகிய தன்மையும் அதன் ஆரம்பகட்டத் தோல்விகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
2025-ஆம் ஆண்டு புதிய உத்தியுடன் களமிறங்கியது ஆர்சிபி. நட்சத்திர வீரர்களை மட்டுமே நம்பியிருப்பதைத் தவிர்த்து ஏலத்தின்போது புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்தது. அதன்படி புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, டிம் டேவிட், ஃபில் சால்ட், தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா உள்ளிட்டோரைச் சேர்த்தது பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் அணியை வலுப்படுத்தியது. அத்துடன் ரஜத் பட்டிதாரை கேப்டனாக்கியதும், விராட் கோலியின் தொடர்ச்சியான ரன் வேட்டையும் 2025 சீசனில் ஆர்சிபிக்கு பெரிதும் கைகொடுத்தது. இதன் விளைவாக இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் கோப்பையைக் கைப்பற்றியது.
நிகழாண்டு தனிநபர் விருதுப் பட்டியலில் இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி தவிர ஆர்சிபி அணியிலிருந்து வேறு எந்த வீரரும் இடம்பெறவில்லை. ஆனால், அந்த அணியின் கூட்டு முயற்சி வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது.
விராட் கோலி 675 ரன்கள் குவித்து பல ஆட்டங்களில் வெற்றிக்குக் காரணமானார். தேவ்தத் படிக்கல் 464 ரன்கள் அடித்தார். டிம் டேவிட் 305 ரன்கள் சேர்த்தார். அதில் சென்னை அணிக்கு எதிராக 25 பந்துகளில் 70 ரன்கள் குவித்ததும் அடங்கும்.
பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார் 28 விக்கெட்டுகள், ரசிக் சலாம் 19 விக்கெட்டுகள் என சிறந்த பங்களிப்பை வழங்கினர். இறுதி ஆட்டத்தில் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியும் இந்தத் தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தத் தொடரில் 700 ரன்களைக் கடந்த மூன்று வீரர்களில் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் (732), சாய் சுதர்சன் (722) அடங்குவர். லீக் சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த அந்த அணி குவாலிஃபயர் -1இல் ஆர்சிபி அணியிடம் தோற்றாலும், குவாலிஃபயர் -2இல் ராஜஸ்தான் ராயல்ûஸ வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
அந்த அணியின் ககிசோ ரபாடா 29 விக்கெட்டுகளுடன் பர்பிள் தொப்பியைக் கைப்பற்றினார். 75 பவுண்டரிகளுடன் அதிக பவுண்டரி அடித்த சாதனையைப் படைத்தார் சாய் சுதர்சன். அதிக டாட் பந்துகளை (172) வீசியவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரரானார் குஜராத் அணியின் முகமது சிராஜ்.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணிக்கு நிகழாண்டு ஐபிஎல் சீசன் பெரும் பின்னடைவாக அமைந்தது. லீக் சுற்றில் 4 வெற்றி, 10 தோல்விகளுடன் 9-ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது. பந்துவீச்சில் அசத்தும் ஜஸ்பிரித் பும்ராவும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இந்த முறை சோபிக்கவில்லை. ரோஹித் சர்மா காயம் காரணமாக ஐந்து ஆட்டங்களில் விளையாடாத நிலையில் ஏமாற்றம் கண்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நிகழாண்டிலும் மீண்டு வர முடியவில்லை. 6 வெற்றி, 8 தோல்விகளுடன் லீக் சுற்றில் 8-ஆவது இடத்தைப் பிடித்தது. லீக் சுற்றில் அதன் "பரம எதிரியாக' கருதப்படும் மும்பையை முந்தியது ஒன்றுதான் ஆறுதல். மஹேந்திர சிங் தோனி ஓர் ஆட்டத்தில்கூட விளையாடாதது சென்னை ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.
2026 ஐபிஎல் போட்டியில் அனைவரையும் தனது ஆட்டத்தால் கட்டிப்போட்டவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி. 15 வயதேயான இந்தச் சிறுவன் 776 ரன்களுடன் அதிக ரன்களுக்கான ஆரஞ்ச் தொப்பி, சிறந்த வளரும் வீரர், சூப்பர் ஸ்டிரைக்கர், அதிக சிக்ஸர்கள் (72), மதிப்பு மிகுந்த வீரர் ஆகிய ஐந்து விருதுகளை வென்றார். ஒரே தொடரில் மதிப்பு மிகுந்த வீரர், சிறந்த வளரும் வீரர் என்ற இரு விருதையும் பெற்ற முதல் வீரர் சூர்யவன்ஷிதான்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்த சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து கிரிக்கெட் உலகமே மிரண்டது. ஆர்சிபியின் தொடர் வெற்றி, குஜராத்தின் போராட்டம், சூர்யவன்ஷியின் அதிரடி எனக் கலவையான நினைவுகளுடன் நிறைவு பெற்றிருக்கிறது ஐபிஎல் 2026.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை.
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.
திருக்குறள் (எண் 594) அதிகாரம்: ஊக்கம் உடைமை