இளைஞர்மணி

பங்குச் சந்தை, நிர்வாகத் துறையில் வேலைவாய்ப்பு!

DIN

இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) கீழ் இயங்கும், தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தின் (NISM) The School of Securities Education (SSE) பங்குச் சந்தை தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஒரு முழுமையான கோர்ஸாக, பங்குச் சந்தையில் முதுநிலை பட்டய மேலாண்மை (Post Graduate Diploma in Management - Securities Markets) என்ற கோர்ஸை உருவாக்கியுள்ளது. 
முழுநேர 2 ஆண்டுகள் கொண்ட இந்த கோர்ஸ், பங்குச் சந்தையில் பேரார்வம் கொண்டவர்களுக்கும், இந்தத் துறையில் முழுமையான அறிவைப் பெறவும், நீண்டகால வேலைவாய்ப்பைப் பெறவும் விரும்புவோருக்கும் பயன்மிக்கதாகும். இந்த கோர்ஸ் புதிதாக பட்டம் முடித்து வருவோர், ஏற்கெனவே இந்தத் துறையில் அனுபவம் உள்ள, மேலும் திறம்பட பணியாற்ற விரும்புவோர் என அனைவருக்கும் ஏற்றது.
வணிகம் மற்றும் கணக்கியல், நிர்வாகம், பொருளாதாரம், சட்டம், கணிதம், புள்ளியியல், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பட்டதாரிகள் பங்குச் சந்தைத் துறையில் இணைந்து நடைமுறை நுண்ணறிவுடன், தங்களுடைய பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்திக்கொள்ள PGDM (SM) கோர்ஸ் உறுதுணையாக இருக்கும். 
6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பங்குச் சந்தை துறையில் பயிற்சி பெற்றவர்கள் நல்ல தொழில்முறையாளராகப் பரிணமிக்க முடியும்.
பங்குச் சந்தை, கடன் சந்தை, நாணயம் மற்றும் நாணய வட்டி சந்தை, பண்டமாற்று சந்தைகள், நாணயச் சந்தை, பொருட்கள் சந்தை போன்ற பணி வாய்ப்புகள் PGDM (SM) கோர்ஸ் முடித்தவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக, இந்த 2 ஆண்டு படிப்பில், 1.பொருளாதாரம் மற்றும் நிதி பொருளாதாரம், 2. கணக்கு மற்றும் அறிக்கை, 3. அளவு முறைகள் மற்றும் கணிப்பீடு, 4. சட்டம் மற்றும் இணக்கம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவை பங்குச் சந்தை துறையில் இலகுவான மற்றும் கடுமையான செயல்பாடுகளுக்கு இடையே நம்மை நடுநிலையோடு செயல்பட வைக்கக்கூடியதாக இருக்கும்.
இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தால் ஏற்படுத்தப்பட்ட NISM அமைப்பு தன்னுடைய மாணவர்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும் அளவுக்கு தேசிய, சர்வதேச நிறுவனங்களுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளது. வங்கிகள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள், தரகு அமைப்புகள், பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் ஆகியவை NISM நடத்தும் வளாக நேர்காணலில் ஆர்வமுடன் பங்கேற்று மாணவர்களுக்கு பணி வாய்ப்புகளை அளிக்கின்றன.
யுஜிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அதற்கு இணையான அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் நுண்கலை (Fine Arts) தவிர்த்து, மற்ற எந்தத் துறையில் பட்டம் பெற்றவர்களும் PGDM (SM) கோர்ஸில் சேரலாம். இதில் சேர வயதுவரம்பு இல்லையென்றாலும், 28 வயதுக்குள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பணி அனுபவம் தேவையில்லை. எனினும், 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு சேர்க்கை நடைமுறையில் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. புதிதாக பட்டம் முடித்தவர்கள் CAT, GMAT, XAT அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிற போட்டித் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும். 
விண்ணப்பங்களை 2018, மார்ச் 31-ம் தேதிக்குள் http://www.nism.ac.in என்ற இணையம் வழியாக அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்கள் 10, பிளஸ் 2, இளநிலை பட்டம், முதுநிலை பட்ட மதிப்பெண்கள், பணி அனுபவம் ஆகியவற்றைப் பொருத்தும், போட்டித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சுருக்கப்படும். 
இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டியும் (Essay Writing) அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடைபெறும். விண்ணப்பப் பட்டியல் சுருக்கம் (50), கட்டுரை (10), நேர்முகத் தேர்வு (40) என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் இடப்பட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 
2018, ஏப்ரல் 7 முதல் மே 6-ம் தேதி வரை பல்வேறு மையங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும். முதல் தகுதிப் பட்டியல் மே 12-ம் தேதியும், 2 ஆவது தகுதிப்பட்டியல் ஜூன் 4-ம் தேதியும் வெளியிடப்படும். முதல் பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஜூன் 2 ஆம் தேதிக்குள்ளும், 2ஆவது பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஜூன் 26-ஆம் தேதிக்குள்ளும் பணம் செலுத்த வேண்டும். 
பணம் செலுத்திய மாணவர்கள் ஜூலை 2 ஆம் தேதி NISM மும்பை வளாகத்தில் இருக்க வேண்டும். ஜூலை 3-ம் தேதி முதல் கோர்ஸ் தொடங்கும். 
கோர்ஸுக்கான மொத்த கட்டணம் ரூ. 10.5 லட்சம் மற்றும் வரிகள். கல்விக் கட்டணம் ரூ. 4 லட்சம், உணவு, உறைவிடக் கட்டணம் ரூ. 1.25 லட்சம் என ரூ. 5.25 லட்சம் வீதம் 2 தவணையாக செலுத்தலாம். கல்விக்கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. 
- இரா.மகாதேவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT