பிரார்த்தனை!
குரு ஒருவர் தன் சீடர்களுடன் மாலை வேளையில் ஒரு கிராமத்திற்கு போனார். போர்த்திக்கொள்ள போர்வையும், உணவும் தருமாறு வீடு வீடாகக் கேட்டார்.
குரு ஒருவர் தன் சீடர்களுடன் மாலை வேளையில் ஒரு கிராமத்திற்கு போனார். போர்த்திக்கொள்ள போர்வையும், உணவும் தருமாறு வீடு வீடாகக் கேட்டார். ஆனால் யாருமே உதவி செய்யவில்லை. எனவே குருவும் சீடர்களும் கடுங்குளிரில் பசியோடு தவித்தனர்!
மறுநாள் அந்தக் கிராமத்தை விட்டுக் கிளம்பும்போது குரு அந்த கிராம மக்களுக்காக, ""ஆண்டவரே! இந்த கிராம மக்கள் இப்படியே இங்கேயே நலமுடன் இருக்க அருள் புரியுமாறு வேண்டுகிறேன்'' என்று பிரார்த்தித்தார்!
இதைப் பார்த்த அவரது சீடர்கள் மனிதாபிமானமே இல்லாத மக்களுக்காக இப்படிப் பிரார்த்தனை செய்கிறாரே என்று வருந்தினர் ஆனால் குருவிடம் கேட்கத் தயங்கினர்.
பின்னர் மற்றொரு கிராமத்தை அடைந்தனர். அங்கும் கடுங்குளிர்! பசி வயிற்றைக் கிள்ளியது. ""இந்த ஊரில் என்ன கதியோ''என்று சீடர்கள் நினைத்துக் கொண்டனர்
ஆனால் அங்கு நிலைமை தலைகீழாக இருந்தது! அம்மக்கள் ஒன்று கூடி குருவையும் சீடர்களையும் அன்புடன் உபசரித்து உணவு, போர்த்திக் கொள்ள போர்வை என வழங்கி அசத்தினர். சீடர்களுக்கு மிகவும் சந்தோஷம்!
மறுநாள் அவர்கள் கிராமத்தைவிட்டுப் புறப்படுவதற்குத் தயாராயினர். குரு அந்த மக்களுக்காக,""ஆண்டவரே! இந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தை விட்டு மூலைக்கொரு திசையாகப் பிரிந்துபோய் வாழ அருள்புரியமாறு வேண்டுகிறேன்''என்று பிரார்த்தித்தார்.
இதைக் கேட்டதும் அவரது சீடர்கள் திகைத்தனர். அதிர்ச்சியோடு கோபமாக, ""குருவே இது நியாயமா? ஈவிரக்கமில்லாத மக்களைச் சேர்ந்து வாழுமாறும், இரக்கமுள்ள இம் மக்களைப் பிரிந்து வாழுமாறும் முன்னுக்குப் பின் முரணாகப் பிரார்த்திக்கிறீர்களே'' என்று கேட்கத் துடித்தனர். ஆனால் கேட்கவில்லை.
சீடர்களின் எண்ணத்தை உணர்ந்த குரு,""என் பிரார்த்தனை உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அதிலுள்ள உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இரக்கமற்ற கிராமத்து மக்கள் வேறு இடத்திற்குச் சென்றால், அங்குள்ள மக்களையும் இவர்களைப்போல மாற்றி விடுவார்கள். எனவேதான் அவர்கள் இந்த ஊரை விட்டு வெளியேறக்கூடாது எனப் பிரார்த்தித்தேன். இந்தக் கிராமத்து மக்களோ மனிதநேயமிக்கவர்கள். இவர்கள் வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தால் அங்குள்ள மக்களும் இவர்களைப்போல நல்லவர்களாக மாறுவார்கள் என்பதாலேயே இவ்வாறு பிரார்த்தனை செய்தேன்'' என்றார்.