முகப்பு
சிறுவர்மணி

மூன்று சிலைகள்!

அரசரின் ஒற்றர்களில் ஒருவர் வயதாகிவிட்ட காரணத்தால் ஓய்வு பெறும் நிலையில் இருந்தார்.

சிறுவர்மணி

மூன்று சிலைகள்!

அரசரின் ஒற்றர்களில் ஒருவர் வயதாகிவிட்ட காரணத்தால் ஓய்வு பெறும் நிலையில் இருந்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

அரசரின் ஒற்றர்களில் ஒருவர் வயதாகிவிட்ட காரணத்தால் ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். அந்த ஒற்றனுக்கு பதில் ஒரு புதிய ஒற்றனை நியமிக்க முடிவு செய்தார் ஒரு அரசர்! மூத்த மந்திரியை கூப்பிட்டு அனுப்பினார். மந்திரியிடம், "புது ஒற்றன் ஒருவனை நியமிக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். ""அந்தப் பொறுப்பைத் தங்களிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். தாங்கள் ஒரு நேர்முகத் தேர்வு நடத்தி தகுந்த ஆளைத் தேர்ந்தெடுங்கள்.''

நாடெங்கும் அறிவிப்பு செய்யப்பட்டது. நேர்முகத் தேர்வுக்கான நாளும் குறிக்கப்பட்டது. வேலையில் சேர ஆட்களும் போட்டி போட்டுக் கொண்டு அரண்மனைக்கு வந்திருந்தனர்.

மந்திரி ஒரே மாதிரியான சிலைகள் மூன்றை வரவழைத்திருந்தார். மணிகள் கோர்க்கும் ஒரு கம்பியும் வரவழைத்தார். அந்த சிலைகளையும் அந்தக் கம்பியையும் ஓர் அறையிலுள்ள மேஜையில் வைத்தார்.

நேர்முகத் தேர்வு வந்தவர்களை நோக்கி, ""இதோ இந்த அறையில் மூன்று சிலைகள் உள்ளன. இந்த மூன்று சிலைகளில் எது மிகச் சிறந்தது என்பதைக் கணடுபிடித்துச் சொல்ல வேண்டும்...,ஒருவர்பின் ஒருவராக முயற்சி செய்யுங்கள்...,முயற்சி செய்த பிறகு தங்களால் கண்டுபிடிக்க இயலாவிட்டால் "இயலவில்லை' என்று கூறிவிடலாம். ஆனால் தவறான சிலையை யாரேனும் சிறந்தது என்று கூறினால் கடுமையான தண்டனை உண்டு'' என்றார்.

வந்திருந்தவர்களில் சிலர் தண்டனைக்கு பயந்து போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். சிலர், ""முயற்சி செய்து பார்க்கலாம்...முடியாவிட்டால் "இயலவில்லை' என்று கூறி விடலாம்...'' என்று தீர்மானித்து முயற்சி செய்து பார்க்கத் துணிந்தனர்.

ஒருவர் பின் ஓருவராக, தங்களால் "இயலவில்லை' என்று விடை பெற்றனர். கடைசியில் ராமன் என்று ஒரு இளைஞன் வந்தான். அவன் மிகவும் குள்ளமாக இருந்தான். சபையில் அவனைப் பார்த்ததும் அனைவரும் சிரித்தனர். அவன் நேராக சிலைகள் இருந்த அறைக்குச் சென்றான்.

""யாரும் சிரிக்க வேண்டாம்...,உருவத்தைக் கண்டு ஒருவனை எடைபோடுவது தவறு...''என்றார் மந்திரி. பிறகு இளைஞனை நோக்கி, ""சரி, நீ முயற்சி செய்யலாம்'' என்றும் கூறினார்.

இளைஞன் சிலைகள் இருக்கும் அறைக்குச் சென்றான். சில நிமிடங்கள் சென்றன.

""சிறந்த சிலையை நான் கண்டுபிடித்து விட்டேன்!'' என்று அறையிலிருந்து சப்தமிட்டான்.

மந்திரி அறைக்குள் சென்றார். அவன் சரியான சிலையைத்தான் தேர்ந்தெடுத்திருந்தான்!

ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த மந்திரி, ""எப்படிக் கண்டுபிடித்தாய் என்பதை சபையில் வந்து சொல்வாய்'' என்று கூறினார்.

சபைக்கு வந்த ராமன், ""சிலைகளுக்கு அருகில் இருந்த கம்பியில்தான் ஏதோ விஷயம் இருக்கிறது என்று ஊகித்தேன். கம்பியை ஒரு சிலையின் காதில் நுழைத்தேன். அது மற்றொரு காது வழியாக வெளிவந்து விட்டது. விஷயங்கள் காதில் விழுந்தால் அதை மற்றொரு காது வழியாக வெளிவிட்டு விடும். என்பதை அறிந்தேன். எனவே அது சிறந்த சிலை அல்ல என்ற முடிவுக்கு வந்தேன். பிறகு மற்றொரு சிலையின் காதில் கம்பியை நுழைத்தேன். அது வாய் வழியாக வெளி வந்துவிட்டது. இந்தச் சிலையின் குணம் சிறந்ததன்று! ரகசியத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத சிலை இது என்பதை அறிந்தேன். மூன்றாவது சிலையின் காதுகளில் கம்பியை நுழைத்தபோது அது கம்பி முழுதும் வாங்கிக் கொண்டது. ஆனால் வெளிவரவில்லை! ஒற்றனுக்கு உரிய முக்கிய குணமாக அந்த சிலையைக் கருதினேன். எனவே அந்த சிலைதான் சிறந்த சிலை என்று முடிவுக்கு வந்தேன்.''என்றான் ராமன்.

சபையில் கரவொலி எதிரொலித்தது!

ராமன் இப்போது மிகவும் நம்பிக்கையுள்ள ஒற்றனாக அரண்மனையில் பணி புரிகிறான். அவன் தேர்ந்தெடுத்த சிலையையே அரசர் ராமனுக்குப் பரிசாக அளித்தார்! இப்போதும் அந்த சிலையை அவன் குடியிருக்கும் வீட்டில் காணலாம்! அவனிடம் யாரும் ராஜாங்க ரகசியத்தை கேட்டறிய இயலவே இயலாது!

முழு கட்டுரையைப் படிக்க →