முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தினமணியும் நானும்: தினமணியால் பல பிரச்னைகளுக்கு தீர்வு

எனக்கு78 வயதாகின்றது. நான் கலாம் பிறந்த ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்து தற்போது கடலூர் மாநகரில் நிரந்தரமாகத் தங்கியுள்ளேன். 

Updated On : 17 மே 2020, 7:27 pm IST
பகிர்:


எனக்கு78 வயதாகின்றது. நான் கலாம் பிறந்த ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்து தற்போது கடலூர் மாநகரில் நிரந்தரமாகத் தங்கியுள்ளேன். 

பள்ளி மாணவனாக இருந்த போதே ராமேஸ்வரம் மேலத் தெருவில் இருந்த எனது உறவினர்அமரர் பரமேஸ்வரன் மற்றும் இராம சுப்பு(அய்யர்) தினமணி, கல்கி,விகடன் முகவராக இருந்தபோது (1953-1960)அவருக்கு உதவியாக தினமணி "பேப்பர் பாயாக' இருந்து அங்கேயே பல வீடுகளுக்கு பேப்பர் போட்டிருக்கிறேன்.

இலக்கிய ஆர்வமுடன் கடந்த 1983-இல் பணியில் இருக்கும் போதே அன்றைய தென்னாற்காடு மாவட்ட அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக மறைந்த எழுத்தாளர்கள் விக்கிரமன் வாசவன் ஆகியோர் நல்லாசியுடன் கடந்த38-ஆண்டுகளாக பல்வேறு இலக்கிய பணிகள் செய்து கொண்டு கவிஞராக எழுத்தாளராக இருக்கிறேன்,

Advertisement

Advertisement

சென்னையில்  வாசவனுடன்  பத்திரிகை உலக ஜாம்பவான் ஏ.என்.சிவராமனை தினமணி அலுவலகத்தில்  நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். இலக்கிய நிகழ்ச்சிகளை விரிவாக படத்துடன் வெளியிட்டு எங்களை ஊக்குவித்து எங்களுக்கும் பெருமை சேர்த்து வருவதில் தினமணியின் பங்கு மகத்தானது.

குறிப்பாக நாங்கள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அமரகவி பாரதியார் அன்று(1918) சிறை வாசம் செய்த அந்த அறையை நினைவு நூலகமாக கடந்த (2008-இல்)அரசு அனுமதியுடன் எங்கள் பாரதி இலக்கிய மன்றத்தின் மூலம் மாற்றினோம். இந்த அருமையான செய்தியை சென்னை தினமணியில் ஆச்சர்யமூட்டும் வகையில் எட்டு காலத்தில் வண்ணத்தில் செய்தியாக வெளியிட்டு, எங்களது பணிகளை தமிழகம்  அறியச் செய்தது. 

இப்போது விழுப்புரம் தினமணி வந்ததால் எங்கள் இலக்கிய பணிகள் இன்னும் சிறப்பாக வெளிவருகின்றன. அமரகவி பாரதியார் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் தவறாமல் எங்கள் பாரதியார் இலக்கிய மன்றத்தின் மூலம் சிறப்புடன் நடந்து வருவதை தினமணி அருமையான வகையில் வெளியிட்டு வருகின்றது. 

குறிப்பாக கடலூர் இலக்கிய அன்பர்கள் சத்தியமூர்த்தி, வளவதுரையன் ராஜமாணிக்கம், மன்றவாணன் ஆகியோர்களின் கடிதங்களை படைப்புகளை தொடர்ந்து தினமணியில்அவ்வப்போது வெளியிட்டு எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள்.  சுருக்கமாகச் சொன்னால் பேப்பர் போடும் பையனாக இருந்த, என்னை எழுதுவதில் ஆர்வத்தை உண்டாக்கியது தினமணியின் ஆராய்ச்சி மணிதான்! 

காரணம்? பல  மக்கள் பிரச்னைகளை படம்  அடுத்து அன்றைய காலகட்டத்தில்  என்னை எழுதத்தூண்டியதோடு  எழுத்தாளன் ஆக்கியதும்  தினமணி தான்!

ஆராய்ச்சி மணி மூலம் கடலூர் மாநகரில் பல பிரச்னைகள் தீர்வு காணப்பட்டன. குறிப்பாக கடலூர் மாநகரில் ஆட்சியாளர் அலுவலகத்தின் அருகே இருக்கும் பூங்காவில்அப்போது மணிக்கூண்டு கடிகாரம் ஒடவில்லை! அங்கு இருந்த ரேடியோவும்பாடவில்லை!அதைக்கண்டு வேதனை அடைந்த நான் அதை  படமெடுத்து, "ஒடாத கடிகாரம் பாடாத ரேடியோ!' என்ற பொருத்தமான தலைப்பில் தினமணி ஆராய்ச்சி மணியில் வெளிவந்தது!

உடனே அன்றைய ஆட்சியாளர் மற்றும் நகரத் தந்தையின் கவனத்திற்கு சென்று உரிய பலன் உடனடியாகக் கிடைத்தது.

அப்போதைய தினமணி கதிர் தமிழ்மணியில் எனது படைப்புகளை வெளியாகின.  எனவே கடந்த 35ஆண்டுகளுக்கு மேலாக தினமணியோடு தொடர்ந்து வாசகனாகவும் படைப்பாளனாகவும் இருந்து வருகிறேன்.  தினமணியின் இனிய தமிழ் பணிகளை நேசிக்கிறேன்.

-கவிஞர் கடல் நாகராஜன், தலைவர்
மாவட்ட  பாரதி இலக்கிய மன்றம், கடலூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.