முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

களைகட்டும் கத்திப்பாரா சதுக்கம்!

கிண்டி என்றாலே நினைவுக்கு வருவது கத்திப்பாரா மேம்பாலம்தான்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

கிண்டி என்றாலே நினைவுக்கு வருவது கத்திப்பாரா மேம்பாலம்தான். வளைவு நெளிவுகளுடன் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் சென்னை மாநகரின் குறிப்பிடத்தக்க பெரிய அடையாளம் என்பதோடு, நுழைவு வாயிலாகவும் திகழ்கிறது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய குளோவர் இலை வடிவமைப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பாலம் என்ற சிறப்பை கத்திப்பாரா மேம்பாலம் பெற்றுள்ளது. பெரிய சாலைகளுடனும், வடக்கில் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ நிலையம், தெற்கில் ஆலந்தூர் மெட்ரோ நிலையம், கிழக்கில் கிண்டி மெட்ரோ நிலையம் ஆகிய மெட்ரோ நிலையங்களுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது.

2008'ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் வாகனங்களின் இரைச்சல் சப்தம் எப்போதும் ஓய்ந்ததில்லை. இந்தச் சப்தங்களின் நடுவே, மேம்பாலத்தின் கீழ்பகுதியை பொதுமக்கள் இளைப்பாறிச் செல்லும் வகையில் பூங்கா, சிறுவர் விளையாடும் இடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நகர்ப்புற சதுக்கமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்தது.

இதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ரூ.14 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியுதவியுடன் சுமார் 4 ஏக்கர் பரப்பளவிலான இந்த இடத்தில் நகர்ப்புற சதுக்கத்துக்கான பணி முடிக்கப்பட்டு 2021'இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தற்போது இந்த நகர்ப்புற சதுக்கத்தை மெட்ரோ நிறுவனத்திடமிருந்து தனியார் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறது. சென்னையின் முக்கிய அம்சமாகத் திகழும் இந்த நகர்ப்புற சதுக்கத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் விரைவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பராமரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது:

""சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின் ஒரு மைல் கல்லாக கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம் உள்ளது. எந்த நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கும் சந்திப்பின் இடையே இளைப்பாறும் பகுதியாக இது அமைந்துள்ளதுடன், நெரிசல் மிகுந்த நகரத்தின் நடுவே இம்மாதிரியான புதிய முயற்சி எடுத்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

நவீன சென்னையின் அடையாளத்தையும், கலாசார பெருமையையும் பிரதிபலிக்கும் இந்தச் சதுக்கத்தில், கைவினைப் பொருள் அங்காடி, பல முன்னணி நிறுவனங்களின் ஹோட்டல்கள், பசுமைப் பகுதியுடன் கூடிய சிறுவர் விளையாடுவதற்கான வசதிகளும் இங்கு உள்ளன. உணவகங்களில் 24 மணி நேரமும் விரும்பிய உணவுகளை உண்ணலாம்.

இங்கு 128 கார்கள், 340 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்தங்கள், 8 பேருந்துகள் நிறுத்தும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. குளோவர் இலை வடிவமைப்பு மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ளதால், இந்த இடம் இயற்கையாகவே 4 பகுதிகளாகப் பிரித்து மேம்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, பகுதி'1 "விமான நிலைய அணுகு பகுதி' (நேரு சிலை அருகில்) இருக்கையுடன் கூடிய உணவுக் கூடங்கள், சில்லறை அங்காடிகள், பேருந்து நிறுத்தம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவை உள்ளன.

பகுதி'2 "போரூர் அணுகு பகுதி'யில் சிறார் விளையாடும் இடம், சில்லறை அங்காடிகள், பேருந்து நிறுத்தம், வாகன நிறுத்தம் ஆகியன உள்ளன.

பகுதி'3 ஈக்காட்டுத்தாங்கல் அணுகு பகுதி'யில் சில்லறை அங்காடிகள், பேருந்து நிறுத்தமும். பகுதி'4 மொத்தமாக புல்வெளியுடன் மேம்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் உள்ளன.

இதில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சோலார் விளக்குகள், புல்வெளி விளக்குகள், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம், சென்னை பெருநகர மக்கள் பெரிதும் விரும்பும் பகுதியாக அமைந்துள்ளது.

தற்போதுள்ள கட்டமைப்புடன் நடைப்பயிற்சிக்கான இடத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். வார இறுதி நாள்களில் புத்தக கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், புத்தக வாசிப்பு மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம். கலாசார நிகழ்வுகளுக்கு மட்டுமின்றி சமூக நிகழ்வுகளுக்கும் இடத்தை வாடகைக்கு நாங்கள் வழங்குகிறோம். இதன் ஒரு நாள் வாடகை ரூ.50 ஆயிரம். தன்னார்வு, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பொதுமக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகளாக இருந்தால் அவர்களுக்கு இலவசமாகத் தருகிறோம். விரைவில் மாதவரம் மற்றும் நொளம்பூர் பகுதிகளிலும் இது போன்ற நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டு, அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

படங்கள்: சு. ஆனந்த்

முழு கட்டுரையைப் படிக்க →