முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பசுமைச் சோலையில் பரமஹம்சர்: கோவை அருகே ஒரு கோயில்!

கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட பெரிய நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வளாகத்தில் எழுப்பப்பட்டுள்ளது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கோயில்.

Updated On : 5 ஜூலை 2026, 4:00 am IST
பகிர்:

பொ.ஜெயச்சந்திரன்

கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட பெரிய நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வளாகத்தில் எழுப்பப்பட்டுள்ளது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கோயில். வளாகம் அடர்த்தியான மரங்கள் நிறைந்து காட்சியளிக்கிறது. தூய்மையாகப் பராமரிக்கப்படும் வளாகமும், சுற்றுப்புறமும் கண்ணுக்குத் தெரிகிற எல்லை வரையில் பசுமையைப் போர்த்தியுள்ளது.

கல்வியையும், ஆன்மிகத்தையும், பண்பாட்டுச் செறிவோடு பயிற்றுவிக்கும் இந்த இடமானது மக்களை வெகுவாக ஈர்த்து வைத்திருக்கிறது. பசுமையான இடத்துக்குப் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று விலகி, வந்திருந்து தியானம் செய்யும்போது மனதுக்குப் பேரமைதியையும் நிம்மதியையும் ஒருவித நிறைவையும் அளிக்கிறது. இந்தத் தலம் குறித்து இலக்கியச் சொற்பொழிவாளரும், தமிழ்ப் பேராசிரியருமான ச.குருஞானாம்பிகா கூறியது:

Advertisement

Advertisement

'நவீன காலத்தில் மகானாக அவதரித்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ஹிந்து சமயத்தின் மார்க்கங்களையும் பின்பற்றி, கடவுளைக் கண்டவர். பிற சமயங்கள் கூறும் வழிகளைப் பின்பற்றி அனுபூதியில் உணர்ந்தவர். இந்த அனுபவத்தை அவர் மிகவும் சுருக்கமாக, 'எத்தனை மதமோ அத்தனை வழிகள்' என்று விளக்கி இருக்கிறார். அனைத்து மதத்தவர்களுக்குமான இந்தக் கோயிலில் எவரும் வந்து வழிபாடு செய்யலாம். தியானத்தில் அமரலாம். மன அமைதியோடு வீடு திரும்பலாம்.

பகவான் கிருஷ்ணர் பாகவதத்தில் தமது பக்தர் உத்தவரிடம் கோயில்கள் குறித்து, 'ஒருவன் என்னுடைய உருவச் சிலையை ஓரிடத்தில் நிலை நிறுத்த வேண்டும். அந்தச் சிலையை உள்ளடக்கி உறுதியான கோயில் எழுப்ப வேண்டும். சுற்றிலும் அழகான பூந்தோட்டம் அமைக்க வேண்டும். நாள்தோறும் வழிபாடு செய்ய வேண்டும்.

அவ்வப்போது பெரிய விழாக்களை நடத்தவும், பணமாகவோ, நிலமாகவோ, கிராமங்களாகவோ, நாட்டின் பகுதிகளாகவோ, கடைகளாகவோ சொத்துகளைச் சேர்க்க வேண்டும். இதை எவன் செய்கிறானோ அவன் மிகுந்த பலனைப் பெறுவான் (பாகவதம் 11 ஆம் ஸ்கந்தம்)' என்றார். இதன்படி, அவர் சொன்ன சொல் மாறாது உருவாக்கப்பட்டிருப்பதே இந்தக் கோயிலாகும்.

2024-ஆம் ஆண்டில் கோயில் உருவாக்கிய நாள் தொடங்கி இன்று வரை அனைத்து நிகழ்வுகளுமே இறைவனின் முழு அனுகிரகத்தோடு நடைபெறுகிறது. அடிக்கல் நாட்டிய நாளானது ஏகாதசித் திருநாளும், சுவாமி சிவானந்தர் ஜெயந்தி, அன்னை சாரதையின் பிறந்தநாளாகிய மூன்று முக்கிய நாள்களும் இணையப் பெற்ற சிறப்புடையது.

ஹிந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு நட்சத்திரம் உண்டு. அந்த தெய்வத்துக்கான கோயில் நிறுவப்படும் நாளன்று, அதே நட்சத்திரம் அமைவது என்பது மிகவும் அரிதானது. ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சருக்காக அமைக்கப்பட்ட கோயில் பரமஹம்சரின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திர நாளன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் கோபுரத்தினைச் சுற்றிலும் 26 கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடவுளைக் குறிக்கும் 26-ஆம் எண் பிரம்மத்துவத்தைக் குறிக்கிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலும் இது குறித்த குறிப்புகள் உள்ளன.

சிலையானது வடக்கேயிருந்து இங்கே வந்தடைந்த நாளானது, புரி ஜெகன்நாதர் கோயில் உற்சவம் நடைபெற்ற நாளாகும். 108 திவ்ய தேசங்களிலிருந்தும் பொருள் கொண்டு வந்து சிலை வைக்கும் முன்னர் பீட பிரதிஷ்டை செய்யப்பட்டது. பரமஹம்சர் ஒரு காளி உபாசகர் என்பதால், கோயில் மேற்குத் திசை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது.

கோயிலின் அமைப்பானது தென்னகக் கோயில் வடிவத்தில் முன்புறத் தோற்றமும், வட இந்திய கோயில் அமைப்பில் பின்புறக் கோபுரமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலிருந்து பார்க்கும்போது, நான்கு சிறிய கோபுரங்களும், நடுவில் ஒரு பெரிய கோபுரமும், திரிசூலமும் தெரியும். சிவ பஞ்சாயதன பூஜையைக் குறிக்கிறது.

நடுவில் சிவன் இருக்க, அவரைச் சுற்றிலும் விஷ்ணு, விநாயகர், சக்தி, சூரியன் என ஐந்து தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. தூண்கள் அனைத்தும் கொல்கத்தாவில் உள்ள சுவாமி விவேகானந்தரால் உருவாக்கப்பட்ட பேலூர் மடத்தின் பாணியைத் தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோயிலைச் சுற்றிலும் ஏராளமான சிற்பங்கள் ஆன்மிக வாழ்க்கையின் தாத்பரியங்களை உள்ளடக்கிச் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஜன்னலிலும் இறைவனின் இசைக் கருவிகள், ஆயுதங்கள், குறியீடுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் செதுக்கப்பட்டு, கலைநயத்துடன் காட்சி அளிக்கின்றன. பரமஹம்சர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கருவறைப் பகுதி கதவுகளில் சுவாமி விவேகானந்தர் எடுத்துரைத்த பலமான சிங்கமும், மென்மையான ஆடும் இணைந்த உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மற்ற இடங்களில் பரமஹம்சரின் திருவுருவம் தாங்கிய படத்தின் வழியாக தரிசனம் கிடைக்கப் பெறும் நிலையில், இங்கு பளிங்குக் கல்லால் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் அழகிய சிலையின் வழியே தரிசனம் கிடைக்கிறது.

தெய்வத்தை மகிழ்வித்து அவரது அருளைப் பெறுவதும் வழிபடுபவரும் வழிபடும் தெய்வமும் ஆன்ம நிலையில் ஒன்றுபடுவதும் என தினமும் மாலையில் ஆரத்தியும், பஜனையும் நடைபெறும். தீபம், நீர், துணி, மலர், சாமரம் ஆகியவற்றால் நடைபெறுகிற ஆரத்தியின் நோக்கமே தெய்வத்தின் திருவடிகளில் பூரணமாக நம்மை அர்ப்பணிப்பதாகும்.

சிறப்பு நாள்களில் சொற்பொழிவுகளோடு கோயில் முழுவதும் ஒளிவெள்ளமாகக் காட்சியளிக்கும். பரமஹம்சரின் சக்திக்குக் காரணமான அவருடைய தவம், தூய்மை, துறவு, ஞானம், அன்பு ஆகிய அனைத்திலும் குருதேவரின் துணையாக அவரது அந்த சக்தியாக விளங்கியவர் ஸ்ரீ அன்னை சாரதா தேவியார். இங்கு பரமஹம்சரின் திருவுருவச்சிலைக்கு அருகே அன்னை சாரதா தேவியும், சுவாமி விவேகானந்தரும் ஆசி வழங்குவதைக் காணலாம். கோயிலுக்குள் நுழையும்போதே மன அமைதியும் சாந்தமும் கிடைப்பதை ஆத்மார்த்தமாக உணரமுடியும்'' என்கிறார் ச.குருஞானாம்பிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments