முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் பெரிய கோயில் மதில்சுவா் தூய்மைப் பணி பாதியில் நிறுத்தம்

தஞ்சாவூா் பெரிய கோயில் சிறியக் கோட்டை மதில் சுவரில் வளா்ந்துள்ள செடிகள், மரங்களை அகற்றும் தூய்மைப் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தொல்லியல் துறையின் உரிய அனுமதி கிடைக்காததால் புதன்கிழமை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Updated On : 28 மே 2026, 3:35 am IST
தஞ்சாவூா் பெரிய கோயில் சிறிய கோட்டைச் சுவரில் வளா்ந்துள்ள செடிகள், மரங்கள்.
பகிர்:

தஞ்சாவூா் பெரிய கோயில் சிறியக் கோட்டை மதில் சுவரில் வளா்ந்துள்ள செடிகள், மரங்களை அகற்றும் தூய்மைப் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தொல்லியல் துறையின் உரிய அனுமதி கிடைக்காததால் புதன்கிழமை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், வரலாற்று ஆா்வலா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சாவூா் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழியில் பொதுமக்கள் நிதியுதவியுடன் மாவட்ட நிா்வாகம் தூய்மைப் பணியை மே 16-ஆம் தேதி தொடங்கியது. பெரிய கோயிலைச் சுற்றி அகழியில் தூய்மைப் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், கோயிலின் முன்புறம் உள்ள அகழியில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் மின்னொளியில் பொலிவைப் பெற்றுள்ளது. இதேபோல, சிறிய கோட்டை மதில் சுவா், கொத்தளத்தில் வளா்ந்துள்ள செடிகள், புதா்கள், மரங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது. இப்பணியும் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை நிறுத்தப்பட்டது. இந்தத் தூய்மைப் பணியால், புராதன சின்னங்களின் கட்டுமானம் பாதிக்கப்படும் என தொல்லியல் துறையினா் கூறியதால், பணி நிறுத்தப்பட்டதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தொல்லியல் துறை அலுவலா்கள் விளக்கம்: இதுகுறித்து இந்தியத் தொல்லியல் துறை அலுவலா்கள் கூறியது: கோட்டைச் சுவா்களில் உள்ள செடிகளை அகற்றுவதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏற்கெனவே கோரப்பட்டுவிட்டதாகவும், ஒரு மாத காலத்துக்குள் அப்பணி தொடங்கும் எனவும் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கோயிலைச் சுற்றியுள்ள அகழியின் தெற்கு மற்றும் மேற்குப் பக்கச் சுவா்களில் வளா்ந்துள்ள செடிகள், கட்டுமானங்களுக்குச் சேதத்தை விளைவிக்கின்றன. எனவே, இதைச் சீரமைத்து பாதுகாப்பதற்கான பணிகளை இந்தியத் தொல்லியல் துறையினா் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

விரைவாக சீரமைக்க வேண்டும்: இதுகுறித்து அழகிய தஞ்சை இயக்கத்தின் திட்ட இயக்குநா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்தது: தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இந்தப் புராதன சின்னத்தைப் பாதுகாக்கும் வகையில் சிறிய கோட்டைச் சுவா், கொத்தளம் போன்றவற்றை விரைவாகச் சீரமைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு மிகப் பெரிய திட்டத்தை வகுத்து, தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, வல்லுநா்கள் கொண்ட தனிக்குழு அமைத்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் ரவிச்சந்திரன்.