முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தஞ்சை: காந்தி - இர்வின் பாலம்

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் குறுக்கே ஓடும் கல்லணைக் கால்வாய் மீதுள்ள இர்வின் பாலம், நூற்றாண்டை நோக்கிச் செல்கிறது.

Updated On : 7 மார்ச், 2026 at 10:44 PM
காந்தி - இர்வின் பாலம்
பகிர்:

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் குறுக்கே ஓடும் கல்லணைக் கால்வாய் மீதுள்ள இர்வின் பாலம், நூற்றாண்டை நோக்கிச் செல்கிறது. 'ஆற்றுப்பாலம்' என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்தப் பாலத்துக்கு 'காந்தி - இர்வின் பாலம்' என்றே பெயர். இந்தப் பாலத்தின் சிறப்புகள் குறித்து பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் கூறியது:

'தஞ்சாவூர் மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த தெற்குப் பகுதியில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி நீர்ப் பாசனம் கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, கல்லணையிலிருந்து 'கல்லணைக் கால்வாய்' என்கிற புது ஆறு 1925- ஆம் ஆண்டில் வெட்டப்பட்டு, 1934- ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் ஆகிய வட்டங்கள் வழியாக பாயும் இந்தக் கல்லணைக் கால்வாய் மூலம் ஏறத்தாழ 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

முதலில் இந்தக் கால்வாய் வல்லம், மருங்குளம் வழியாகக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது. தஞ்சாவூர் மக்களின் வேண்டுகோளின்பேரில், பெரிய கோயிலின் கோட்டை சுவரை ஒட்டி பாயும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

இதன் மூலம், தஞ்சாவூர் நகருக்கும் வெண்ணாறு, வடவாறுடன் மூன்றாவது ஆறாக 'புது ஆறு' என்கிற கல்லணைக் கால்வாய் கிடைத்திருக்கிறது. அப்போது, காந்திஜி சாலையில் குறுக்கே ஓடும் இந்தப் புது ஆற்றின் மீது பாலம் கட்டப்பட்டது.

இந்தப் பாலத்துக்கு 'தேசத் தந்தை மகாத்மா காந்தி'யின் பெயரையும், அப்போதைய இந்தியாவின் ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாகவும் இருந்த 'இர்வின்' பெயரையும் சேர்த்து 'காந்தி - இர்வின் பாலம்' என பெயரிடப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் காந்தி - இர்வின் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் மூலம் 90 ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சுதந்திரப் போராளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் திருப்பி அளிக்கப்பட்டன. உப்பு வரியும் நீக்கப்பட்டது. இந்தியர்கள் உப்பைத் தயாரிக்க இருந்த கெடுபிடி நீங்கியது உள்பட பல்வேறு நன்மைகள் கிடைத்தன. அக்காலத்தில் இந்த ஒப்பந்தமே மிகப் பெரிய உடன்படிக்கையாகக் கருதப்பட்டது.

தஞ்சாவூருக்கு 1929 -ஆம் ஆண்டில் இர்வின் வந்து சென்றார். இதன் நினைவாக பல்வேறு இடங்களில் காந்தி - இர்வின் பெயர் சூட்டப்பட்டது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள சாலைக்கும்கூட 'காந்தி - இர்வின் சாலை' என்ற பெயர் சூட்டப்பட்டதுடன் கவின்கலை கல்லூரி அருகே அமைந்துள்ள பாலமும் இவர்களது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

புது ஆறு திட்டம் 1934- ஆம் ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை நினைவுகூரும் விதமாக, அது பற்றிய விவரங்களை இர்வின் பாலத்துக்கு அருகே நீதிமன்றச் சாலையில் 'திறந்த புத்தக வடிவிலான கல்வெட்டில்' ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிக்கப்பட்டிருந்தது.

மிகப் பழைமையான இந்தப் பாலம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தாலும், காலப்போக்கில் பழுதடைந்துவிட்டது. குறுகலாக இருந்த இந்தப் பாலம் போக்குவரத்து நெரிசலால் திணறிய நிலையில், 2022- ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டு, போவதற்கும், வருவதற்கும் என தனித்

தனியாக அருகருகே ரூ. 3 கோடி மதிப்பில் புதிதாக இரு பாலங்கள் கட்டப்பட்டன. புதிதாகக் கட்டப்பட்டாலும், இந்த இர்வின் பாலம் தற்போது 97 ஆண்டுகளைக் கடந்து நூற்றாண்டை நோக்கிச் செல்கிறது'' என்கிறார் கோ.விஜயராமலிங்கம்.

முழு கட்டுரையைப் படிக்க →