முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 2,821 இல்லத்தரசிகள் தற்கொலை!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2,821 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 12:40 pm IST
தற்கொலை - தினமணி
பகிர்:

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2,821 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ’இந்தியாவில் விபத்து மற்றும் தற்கொலையால் ஏற்படும் மரணங்கள்’ என்ற பெயரில் 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டு தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 7 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துகொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 2024-ம் ஆண்டில் மட்டும் 2,821 இல்லத்தரசிகள் தற்கொலை செய்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3,000-க்கும் அதிகமாக இருந்துள்ளது. குடும்பம் சார்ந்த அழுத்தங்கள் மற்றும் கடுமையான மன உளைச்சலே இதற்கு காரணம் என மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

இந்தியா முழுவதும் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களில் 48.9% பேர் (45,245 பேரில் 22,113 இல்லத்தரசிகள்) இல்லத்தரசிகளாக இருப்பதாகவும், மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 13% ஆக இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுக்க குடும்பப் பிரச்னைகளால் ஏற்படும் தற்கொலைகள் 33.5% என்றும், அதுவே தமிழகத்தில் அதிகபட்சமாக 38.8% என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, உடல்நலக் கோளாறு காரணமாக 18% பேர் தற்கொலை செய்வதாகவும், அது தமிழ்நாட்டில் 29.3% ஆக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சினேகா என்கிற தற்கொலை தடுப்பு அமைப்பை நடத்தும் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார், இல்லத்தரசிகள் செய்யும் வேலைக்குத் தகுந்த அங்கீகாரம்ன் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்று குறிப்பிடுகிறார். “தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலான பெண்கள் படித்தவர்கள். ஆனாலும், பொருளாதார ரீதியாக மற்றவரை சார்ந்திருப்பவர்களாகவும், உணர்வு ரீதியாக ஆதரவற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

ஒரு இல்லத்தரசியின் பணி வேலைக்கு செல்லும் பெண்களை விட அதிகமானதாக இருந்தாலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அவர்கள் சாதாரண இல்லத்தரசிகளாகவே குடும்பம் மற்றும் சமூகத்தால் பார்க்கப்படுகின்றனர். நிறைவேறாத லட்சியங்களின் சுமை, தனிமை மற்றும் அதனை வெளிப்படுத்த முடியாமல் குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கவேண்டியதன் அழுத்தம் என அனைத்தும் அவர்களது மனநிலையை மோசமாக பாதிக்கின்றன” என்று கூறினார்.

சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஆர் ஸ்ரீதரன் இதுபற்றிப் பேசுகையில், “இல்லத்தரசிகளுக்கு மன உளைச்சலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. குடும்பத்திற்குள் உண்டாகும் முரண்பாடுகளை உள்வாங்கி இணக்கத்தைப் பேண வேண்டும் என அவர்கள் மீது எதிர்பார்ப்பு இருப்பதால் நாள்பட்ட அவர்களுக்கு நாள்பட்ட உளவியல் அழுத்தம் ஏற்படுகிறது.

பல பெண்கள் தங்களின் சுயமரியாதை மற்றும் அடையாளத்தின் மீது படிப்படியான சரிவை சந்திக்கின்றனர். இதனுடன் உடல்நலக் கோளாறு, நிதி நெருக்கடி, திருமண வாழ்வில் உண்டாகும் கருத்து வேறுபாடுகள் போன்றவை சேரும்போது அவர்கள் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கின்றனர்” என்றார்.

மனநல நிறுவனத்தின் இயக்குநரான மருத்துவர் மலையப்பன் பேசுகையில், “உணர்வு ரீதியான பிரச்னைகளையும், மன அதிர்ச்சிகளையும் கையாளும் வழிமுறைகளை மக்களுக்கு கற்பிக்கவேண்டும். மக்கள் ஆர்ம்ப நிலையிலேயே இந்தப் பிரச்னைகளைக் கண்டறிந்து உதவிகளைப் பெற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

வாழ்க்கைத் திறன்களையும், மன அழுத்தத்தைக் கையாளுவதையும் கற்றுத் தருவதன் மூலம் தற்கொலை விகிதத்தைக் கணிசமாக குறைக்க முடியும். இதன்மூலம், தனிநபர்கள் உணர்வுகளைக் கையாளவும், மன அதிர்ச்சிகளை சரிசெய்யவும் ஆரோக்கியமான வழிமுறைகளை வளர்த்துக் கொள்ள முடியும்” என்றார்.

விழிப்புணர்வு திட்டங்கள் பற்றிப் பேசிய மருத்துவர் லட்சுமி, “இல்லத்தரசிகளை இலக்காக கொண்ட மனநல விழிப்புணர்வு திட்டங்கள் நமக்கு கண்டிப்பாக தேவை. குடும்பங்கள் அவர்களை மதித்து, அவர்களின் பங்களிப்புக்கான அங்கீகாரம் கொடுத்து, தங்களின் சுயமரியாதை மற்றும் ஆற்றலை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

summary

2,821 housewives committed suicide in Tamil Nadu in a single year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.