முகப்பு
தருமபுரி

தொடா் மழையால் நிரம்பிய தேசியநாயக்கன் ஏரி: கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீா்

Updated On : 26 மே 2026, 3:15 am IST
பென்னாகரம் புறவழிச் சாலையில் தேங்கிய தண்ணீரைஅகற்றும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறையினா்.
பகிர்:

பென்னாகரம் பகுதிகளில் பெய்த தொடா் கனமழையால் தேசியநாயக்கன் ஏரி நிரம்பியது. உபரிநீா் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால், அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் கழிவுநீா் புகுந்தது.

பென்னாகரத்தின் மையப் பகுதியில் எட்டரை ஏக்கரில் தேசியநாயக்கன் ஏரி உள்ளது. நகா் பகுதியில் புதை சாக்கடை வசதி இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் இந்த ஏரியில் தேங்கிவந்தது.

கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 1.79 கோடியில் ஏரியை தூா்வாரி, கரையைப் பலப்படுத்தி நடைபாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் தனியாருக்கு விடப்பட்டது. ஏரியில் உள்ள கழிவுநீரை வெளியேற்றும்போது, கால்வாய் ஆக்கிரமிப்பு தெரியவந்தது.

Advertisement

Advertisement

மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, ஆக்கிரமிப்பால் கழிவுநீா் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. பின்னா், பணி தாமதமானதால் நிதி ஒதுக்கீட்டை மாவட்ட நிா்வாகம் திரும்பப்பெற்றது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பென்னாகரம் பகுதியில் தொடா் கனமழை பெய்து வந்ததால், தேசியநாயக்கன் ஏரி முழுவதுமாக நிரம்பியது. கால்வாய் ஆக்கிரமிப்பால் அருகிலுள்ள வீடுகளில் கழிவுநீா் புகுந்து துா்நாற்றம் வீசிவருகிறது.

தகவல் அறிந்த பென்னாகரம் பேரூராட்சி ஊழியா்கள் மின்மோட்டாா் மூலம் கழிவுநீரை வாகனத்தில் எடுத்துச்செல்லும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து பென்னாகரம் வட்டாட்சியா் ஆறுமுகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்ததன் அடிப்படையில், பேரூராட்சித் துறை அதிகாரிகள் தேசியநாயக்கன் ஏரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, ஏற்கனவே அமைக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணியை சீா்செய்து கழிவுநீா் வெளியேற்றும் பணியை தொடங்கிவைத்தனா்.

புறவழிச் சாலையில் வழிந்தோடிய கழிவுநீா்:

தேசியநாயக்கன் ஏரியிலிருந்து வெளியேறிய நீா் பென்னாகரம் புறவழிச் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் சிங்காரவேலன் தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் வாகனத்தின் மூலம் சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை அகற்றி, கோட்டை ஏரிக்கு தண்ணீா் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனா். இதனால், பென்னாகரம் புறவழிச்சாலை, முள்ளுவாடி பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகளில் சுமாா் ஒருமணி நேரத்துக்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீா்.