முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்று அனுமானிப்பதற்கு கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொண்டேன்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:40 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:37 PM

தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்று அனுமானிப்பதற்கு கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொண்டேன். ஆசிரியர் உரையை எழுதிவிட்டு அதற்குத் தகுந்த குறளைத் தேர்ந்தெடுக்கப் பெட்டியை துழாவியபோது நான் திருக்குறள் எடுத்து வரத் தவறிவிட்டது தெரிந்தது. விடுதியில் திருக்குறள் இருக்கிறதா என்று கேட்டால், எதிர்பார்த்ததுபோல 'இல்லை' என்கிற பதில்தான் வந்தது.

இதற்கு முன்பே ஓரிருமுறை இது குறித்து நான் எழுதி இருக்கிறேன். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, அங்கே எல்லாம் விடுதி அறைகளில் விவிலியம்(பைபிள்) வைக்கப்பட்டிருக்கும். இஸ்லாமிய நாடுகளாக இருந்தால் அரபி

மொழியிலான 'திருக்குர்ஆன்' இருக்கும். தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்லலாம் என்கிற குறிப்புடன் அவை அறைகளில் வைக்கப்படுகின்றன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

Advertisement

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்கிறார்கள். நான் அதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இப்படித்தான் நாம் நீண்டகாலம் போராடி தமிழுக்குச்

செம்மொழி அந்தஸ்துப் பெற்றோம். என்னவாயிற்று? அரை டஜனுக்கும் அதிகமான மொழிகள், நம்மை முன்னுதாரணம் காட்டி இப்போது செம்மொழி அந்தஸ்துப் பெற்று விட்டன. அதனால், தமிழுக்குத் தனித்த மரியாதை கிடைக்காமல் போய் விட்டது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தால், இந்தியாவில் உள்ள ஏனைய மொழிகளும் அந்தக் கோரிக்கையை முன்வைத்துக் களமிறங்கும். அறிவிக்கப்படாமலேயே உலகளாவிய அங்கீகாரம் பெற்ற திருக்குறள், எத்தனையோ நூல்களில் ஒன்றாக தேசிய நூல்கள் பட்டியலில் இடம் பெற்றால் என்ன? பெறாமல் போனால்தான் என்ன?

மற்றவர்கள் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை. நாம் திருக்குறளுக்கு என்ன அங்கீகாரம் தருகிறோம், என்ன மரியாதை கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

கடந்த 28 ஆண்டுகளாக பூவை பி. தயாபரன் தலைமையில் மதுரை திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை திருக்குறள் திருவிழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி 29-ஆவது ஆண்டு விழா சேலம் கொங்கணாபுரம் கொடைமாட்சி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

இது போன்ற பல தன்னார்வ அமைப்புகள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திறனாய்வுப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வருகின்றன. பல திருக்குறள் அமைப்புகள் வாரம்தோறும் வகுப்புகள் நடத்துவது, இலவசமாக திருக்குறள் கையடக்கப் பதிப்புகளை வழங்குவது என்று செயல்படுகின்றன.

அவையெல்லாம் ஒருபுறம் நடக்காமல் இல்லை. ஆனால், தமிழின் பெயரால் அரசியல் நடத்தும், வாக்குகள் கேட்டு அதிகாரத்தில் அமரும் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் திருக்குறளைப் பரப்புவதற்கு என்ன செய்தார்கள்? ஊராட்சிகளில் தொடங்கித் தலைமைச் செயலகம் வரையில் அதிகாரத்தில் இருப்பவர்களின் பங்களிப்பென்ன?

குறைந்தபட்சம், ஒவ்வொரு விடுதியும் அறைகளில் இலவசமாக 'திருக்குறள்' வைக்கப்பட வேண்டும் என்று சட்டமியற்றாவிட்டாலும், வலியுறுத்தவாவது செய்யலாமே, ஏன் செய்வதில்லை? விடுதி நடத்துபவர்களும், உள்ளூர் தமிழார்வலர்களும், எல்லா அறைகளிலும் இலவசமாக 'திருக்குறள்' கையடக்கப் பிரதியை வைப்பது குறித்து சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!

Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:39 PM

இதற்கு முன்னால் ஒருமுறை, எனது நீண்டகால நண்பர் கவிஞர் குடந்தை கீதப்பிரியன் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'சமணமும்

தமிழும்' நூலை எனக்கு அன்பளிப்பாகத் தந்ததைக் குறிப்பிட்டு, முழுமையாகப் படித்த பிறகு அது குறித்துப் பதிவு செய்வதாக எழுதியிருந்தேன்.

தமிழுக்கு சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டுக்கு நிகராக வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பது சீனி. வேங்கடசாமியின் கருத்து. 'சமண ஊர்களின் ஜாபிதா' என்னும் கையெழுத்து ஏட்டுச் சுவடி ஒன்று உண்டு. அது கி.பி. 1816-இல் எழுதப்பட்டது. அந்த நூலில், அப்போது தமிழகத்தில் இருந்த சமண ஊர்களும், சமணக் கோயில்கள் எத்தனை என்பதும் கூறப்பட்டுள்ளது.

சமணம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது என்பது மட்டுல்லாமல், ஆங்காங்கே காணப்படும் கல்வெட்டுச் சாசனங்களும், அழிந்தும் அழியாமலும் காணப்படும் சமணர் கோயில்களும், காடுமேடுகளில் ஆங்காங்கே காணப்படும் சமணர் கோயில்களும், காடு மேடுகளில் ஆங்காங்கே காணப்படும் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் சான்று பகர்கின்றன.

அன்னதானம், அபயதானம் (அடைக்கலம்), ஒüடத தானம் (மருத்துவ சிகிச்சை), சாஸ்திர தானம் (கல்வியளித்தல்) என்று நான்கு தானங்களை செய்வதைச் சமணம் தனது பேரறமாகக் கொள்கிறது. 'நவபதார்த்தம்'

என்பது சமண சமய தத்துவம். அதில் ஒன்பது பொருள்கள் சுட்டப்படுகின்றன. ஜீவன் (உயிர்), அஜீவன் (உயிரற்றவை), புண்யம் (புண்ணியம்), பாவம் (பாவம்), ஆஸ்ரவம் (ஊற்று), ஸம்வரை (செறிப்பு), நிர்ஜரை (உதிர்ப்பு), பந்தம் (கட்டு), மோக்ஷம் (வீடுபேறு).

சமணம் என்றால் என்ன என்று தொடங்கி, சமணத்தின் அத்தனை கூறுகளையும் விளக்கி, சமணத்துக்கும் தமிழுக்குமான இணை பிரிக்க முடியாத பிணைப்பை விளக்கும் இந்த நூலை நாட்டுடைமையாக்கியதற்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 6:39 PM

இந்தக் கவிதைக்கும் மேற்காசிய ஹோர்முஸ் நீரிணையை சொந்தம் கொண்டாடும் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

சக்திமான் அசோகனின் 'வெட்கப்படும் நெற்கதிர்' என்கிற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது இந்தக்

கவிதை வரிகள்-பட்டா சிட்டா ஏதுமில்லை

பாத்யதைக் கொண்டாடுகின்றன

தெரு நாய்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.