முகப்பு
தமிழ்மணி

நெடுநல்வாடைத் தலைவி - ஒரு புதிய நோக்கு

நெடுநல்வாடைத் தலைவியான கோப்பெருந்தேவியை மையமாகக் கொண்டே நக்கீரரால் நெடுநல்வாடை கட்டமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 மார்ச், 2026 at 3:04 PM
பகிர்:

நெடுநல்வாடைத் தலைவியான கோப்பெருந்தேவியை மையமாகக் கொண்டே நக்கீரரால் நெடுநல்வாடை கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தலைவியைச் சுற்றியே நிகழ்வுகளும் காட்சிகளும் அந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

திறனாய்வு நோக்கில் அடிக்கருத்துக் கோட்பாட்டு அடிப்படையில் இதை அறியலாம். அடிக்கருத்து என்பது புனைவுக்கூறுகளில் தலைமைப் பண்புடைய ஒன்றைப் பற்றியோ அல்லது ஒருவரைப் பற்றியோ இலக்கியப் பாடுபொருளின் அடிப்படையில் மையக் கருத்தைக் கொண்டு அமைவதாகும்.

நெடுநல்வாடை குளிர்காலமான வாடைக் காலத்தை முன்னிறுத்தும் பாடலாகும். பருவத்தை முன்னிறுத்திப் பாடிய நீண்ட பாடல் சங்க இலக்கியத்தில் இது ஒன்றே. பாசறையில் இருக்கும் தலைவனின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தலைவி குறித்த பாடல். வாடைக்காலம் தலைவன்-தலைவி உடனுறையும் காலம்.

தலைவியின் ஆற்றப் பொறாத பிரிவாற்றாமை ஒரு புறம்; பாசறையில் உள்ள தலைவன் போர் முடித்து வரவேண்டும் என்ற எண்ணம் மறுபுறம். இந்த இரண்டையும் உளப்படுத்தி 'நெடுநல்வாடை' என்று நக்கீரர் தலைப்பிட்டு உள்ளமை அருமையானது. தலைவியின் எண்ணத்தை நெடு என்ற சொல்லாலும், கருதியது முடிக்கும் தலைவன் போர் மேற் சென்று வாகை சூடவேண்டும் என்ற எண்ணம் நல் என்ற சொல்லாலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதை மாற்றியும் பொருள் காண வாய்ப்புத் தருவதாய் நூலின் தலைப்பு அமைந்துள்ளது. போர் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் அது நீள்கிறது. தலைவன் எப்போது வருவான் என்று நினைக்கும் தலைவியின் எண்ணமும் நீள்கிறது. நெடு என்ற சொல் இதற்கு இடம் தருகிறது, தலைவன் முன்பே பல போர்களில் வெற்றி பெற்றவன். இப்போது நடக்கும் போரிலும் வாகை சூடும் எண்ணம் அவனுக்கு நல்

வாடையாகும். தலைவன் போர்முடித்து இன்னே வருவான் என்ற உறுதியான கருத்தில் தலைவி இருப்பதால் அவளுக்கும் இது நல்வாடை ஆகுமல்லவா? இப்படி நூலின் தலைப்பிலேயே ஒரு பொருட் பொருத்தத்தைப் பொதிய வைத்திருப்பது நக்கீரரின் கவிநுட்பம்!

கணவனுக்காகக் காத்திருத்தல் என்ற மையப்பொருளை தலைவியைக் கொண்டே எதிர்மறைக் காட்சிகளால் கவிஞர் காட்டுகிறார். அதற்கேற்பவே குளிர்கால வருணனை, உயிரினங்களைக் குளிர் வருத்துதல், தாவரங்கள் பின்னிப்பிணைந்து பூத்திருத்தல், மீன்களைக் கவரக் கொக்குக் காத்திருத்தல், மிகுபெயல் பெய்த மேகம் சில துளிப் பெயக் கற்றல், நெற்பயிர், கமுகு ஆகியன திரட்சிச் செழித்திருத்தல், மனையுறைப் புறாக்கள் எதிரெதிராகக் கால்கடுப்ப நிற்றல், அரண்மனையின் புறவெளியில் கேட்கும் ஒலிகள் முதலியன தலைவியோடு ஏதேனும் ஒருவகையில் தொடர்புபடுத்திக் காணச் செய்வனவாய் உள்ளன. நிகழ்வுகள் முன்னும் பின்னுமாய்ச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இவை அடிக்கருத்துக் கோட்பாட்டுக்குரிய புனைவுக் கூறுகளாக விளங்குவன.

காட்சிகள் வெவ்வேறு சூழலில் முரண்காட்சிகளாகவும், இணைவுக் காட்சிகளாகவும் அமைந்து மூலக்கருத்தை உணர்த்துவதாய் உள்ளன. இயற்கைக் காட்சிகள் வெவ்வேறான தளங்களில் நின்று அடிக்கருத்துக்குரிய பின்னணியில் இயங்குவதாய் உள்ளன. நெடுநல்வாடையில் தலைவியே முன்னிறுத்தப்படுகிறாள். அவளைச் சுற்றியே நிகழ்வுகள் வளைய வருகின்றன.

காத்திருத்தலும் விருப்பம் நிறைவேறுதலுமான அடிக்கருத்தை இவற்றின் அடிப்படையில் காணமுடியும். தலைவன் பிரிவு குறித்த சிறு வருத்தமும் செவிலிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதை எண்ணிய தலைவி, தன் கடைக்கண்ணில் சிறிதாக வெளிப்பட்ட கண்ணீரைப் பிறர் அறியாவாறு விரல் நுனியால் துடைத்தெறிகிறாள்.

இதை இயற்கைச் சூழலில் காண்பதற்கு ஏதுவாய் நூலின் தொடக்கத்தே, மழை சிலவே பெய்ய மரக்கிளையில் மழைத்துளி ஒட்டிக்கொண்டிருக்கிறது (குருஉத்துளி தூங்க). இது தலைவி கண்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் கண்ணீர்த் துளியோடு இணைத்துக் காண வாய்ப்புண்டு.

பள்ளியறையில் தலைவியும், பாசறையில் தலைவனும் இருப்பது ஒருவகையில் எதிர்முரண். அங்கொருவர் இங்கொருவரான வாடைக்காலம் அது. மனையுறைப் புறாக்கள் அவ்வாடைக் காலத்தே மாறிமாறி எதிரும் புதிருமாய்க் கால்கடுப்ப நிற்கின்றன (மதனப்பள்ளி மாறுவன இருப்ப). இதைப் பள்ளியறையில் இருக்கும் தலைவிக்கும் பாசறையில் இருக்கும் தலைவனுக்கும் உட்படுத்தலாம்.

கொக்கின் இலக்கு மீனைக் கவர்வதில் காத்திருக்கும் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. (செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவர) இது தலைவி வேறொன்றில் கவனம் செலுத்தினாளில்லை. (செவிலியர் கதை சொல்லியும் அதில் கவனம் செலுத்தவில்லை) மீனைக் கவர்வதிலே இருக்கும் கொக்கை ஒத்தது அவளது நினைவு. தலைவனுக்கும் இது பொருந்தும்; வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதிலேயே அவன் இலக்கு இருப்பதை இதனுடன் ஒப்பக் கூறலாம்.

அரண்மனை முன்றிலில் மயில் அகவி நிற்றல் (கலிமயில்அகவும் வயிர்மருள் இன்னிசை, நளி மலைச்சிலம்பும் கோயில்) தலைவியின் அகவயமான எண்ண ஓட்டத்தை அவற்றின் ஒலி எதிரொலிப்பதாய் உணரலாம்.

இந்த நூலில் சில இடங்களில் தீயின் ஆட்சி தொடர்ந்து இடம்பெறுகிறது. குளிர்காலமாதலால் தீயின்(நெருப்பின்) துய்ப்பு இயல்பானது. கோவலர் குளிர்காய்தல், மாட மாளிகையில் இருப்போர் சந்தன விறகின் புகையை எதிர்கொள்ளல், இரவில் அரண்மனையில் தீச்சுடர் ஏற்றப்படுதல், பாசறையில் தலைவனுக்கு வழிகாட்டும் பாண்டில் விளக்கு ஆகிய இடங்களில் தீ இடம் பெறுகிறது.

இது தலைவியின் மன நிலையைக் குறிப்பாகச் சுட்டுவதற்கு இடமளிக்கும் வகையில் அமைகிறது, அகத்தெழும் காதலுக்கு தீ இங்குக் குறியீடாகவும், காட்சிப் படிமமாகவும் கொள்வதற்கு இடம் தருகிறது. அகத்தே எழும் காதலுக்கும் பிரிவுக்கும் உரிய நிலையில் தீயின் ஆட்சி அமைந்துள்ளது. காதலின் பிரிவு வெம்மையானது. அந்த வெம்மை மன உணர்ச்சியின் எழுச்சியாகும். வாடைக்காற்று வீசும் போதெல்லாம் இந்தத் தீ, கொழுந்துவிட்டு எரிகிறது. பிரிவு என்னும் பெருந்தீயைப் பொறுத்துக் கொள்ள எண்ணியே தலைவி கண்களில் கண்ணீரைக் கரந்து அடக்குகிறாள்.

தலைவனுக்காகக் காத்திருத்தல் என்ற அடிக்கருத்தைத் தலைவியிடம் காணுவதற்கேற்பவே நிகழ்ச்சிகள் உருவாக்கம் பெற்றுள்ளன. நூலின் மூலக்கருத்துக்குக் காட்சிகளும், குறியீடுகளும், ஒலிகளும் இன்ன பிறவும் வலிமை சேர்ப்பதாக உள்ளதற்கு அடிக்கருத்துக் கோட்பாடு துணைபுரிவதாய் உள்ளது என்பதை அறியலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →