உலோச்சனார் காட்டும் 'அழுங்கல் ஊரும் அறனில் அன்னையும்'
பழந்தமிழர் அகவாழ்விலும், புறவாழ்விலும் அறத்தைப் பின்பற்றியதற்குச் சங்க இலக்கியங்களே சான்றாகும். அகவாழ்வில் தலைவன்- தலைவி களவொழுக்கத்திலும் அறம் போற்றப்பட்டது.
முனைவர் கா. ஆபத்துக்காத்த பிள்ளை
பழந்தமிழர் அகவாழ்விலும், புறவாழ்விலும் அறத்தைப் பின்பற்றியதற்குச் சங்க இலக்கியங்களே சான்றாகும். அகவாழ்வில் தலைவன்- தலைவி களவொழுக்கத்திலும் அறம் போற்றப்பட்டது. அடுப்பாரும் கொடுப்பாருமின்றி தலைவன்- தலைவியர் எதிர்பாராது சந்தித்து காதல் கொண்டு நடக்கும் திருமணம் தொல்காப்பியர் காலத்திலே (சூத்திரம் 1038) சிறப்பாகக் கூறப்படுகிறது.
பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தவர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் எனும் எண்வகை திருமணத்தில் காந்தர்வ மணம் மட்டுமே காதலை அடிப்படையாகக் கொண்டது. எனினும் ஊராரும், பெற்றோரும் அந்தக் காலத்திலே தலைவன்- தலைவி காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கும் சங்கப் பாடல்களில் சான்றுகள் உண்டு. அவ்வாறு ஏற்றுக்கொள்ளாமை அறத்துக்கு எதிராகும் என்பதைச் சங்கப் புலவர்களும் தங்கள் பாடல்களில் பதிவு செய்கின்றனர்.
Advertisement
Advertisement
உலோச்சனார் எனும் புலவரின் தோழி கூற்றாக அமையும் நற்றிணை 63-ஆவது பாடலைச் சான்றாகக் கூறலாம்.
நெய்தல்திணையில் 'அலர் அச்சத்தால் தோழி சிறைப்புறமாக செறிப்பறிவுறீஇயது' எனும் துறையின் கீழ் இப்பாடல் அமைகிறது.
'உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமண லாங்கண்
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவுநாறு விளங்கிணர் அவிழ்ந்து
உடன் கமழும்
அழுங்க லூரோ அறனின் றதனால்
அறனில் அன்னை யருங்கடிப் படுப்பப்
பசலை யாகி விளிவது கொல்லோ
புள்ளுற வொசிந்த பூமயங் கள்ளற்
கழிச்சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி
திரைதரு புணரியிற் கழுஉம்
மலிதிரைச் சேர்ப்பனொ டமைந்த நம் தொடர்பே
(நற்றிணை - 63)
இந்தப் பாடலின் பொருளாவது 'வலிமைமிக்க கடலிடத்தே சென்று துணிவுடன் பெரிய வலையை விரித்து, மிக வருந்திப் பிடித்த மீன்களில் தேவைக்கு அதிகமான மீன்களை மணற்பாங்கான தங்கள் சேரியில் காயவைத்து உணக்குவர். அதன் புலவுநாற்றம் சேரிமுழுக்க பரவி நிற்கிறது. அந்த நாற்றத்தைப் போக்கும் வகையில் அங்கு வளர்ந்திருக்கும் புன்னைமர பூங்கொத்துகளிலிருந்து நறுமணம் வீசுகிறது.
அந்தப் பகுதியில் வாழும் தலைவியைக் காண குதிரைமீது வரும் தலைவனைக் கண்டு, துயர்தரும் ஆரவாரமிக்க இவ்வூர் (அழுங்கலூர்) மக்கள், அறம் மறந்து தலைவி மீது அலர் (பழி) தூற்றுகின்றனர். அதனால் தாயும் அறமற்றவளாய் பழிக்கு அஞ்சி தலைவியை இற்செறிக்கின்றாள் (வீட்டுக் காவல்). இவ்வாறு தலைவி இற்செறிக்கப்பட்டதால் வீட்டில் தனிமைப்பட்டு கிடக்கிறாள். தலைவனைக் காணமுடியாததால் உடல்வாடி, பசலை படர்ந்து, அழகிழந்து, இரங்கத்தக்க நிலையில் காட்சியளிக்கிறாள்.
தலைவன் குதிரையில் தலைவியைக் காண வருகிறான். அவன் வரும் வழி, பறவைகள் வந்து அமர்ந்ததால் புன்னை மரக் கிளைகளிலிருந்து உதிர்ந்த பூக்களும், சேறும் கலந்த உப்பங்கழியாகும். உப்பங்கழிச்சேறு விரைந்து வரும் தலைவனது குதிரைமீது படுகிறது. உடனே அச்சேறு கடல் அலைகளால் கழுவப்படுகிறது. இற்செறித்தலால் தலைவி நோயுற்று இறக்கவும் கூடும், அதனால் நெய்தல் தலைவனுடன் நாம் கொண்ட தொடர்பு அற்றுப் போய்விடுமோ என அஞ்சுகிறேன். 'உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்' எனத் தலைவன் கேட்கும்படியாக தலைவிக்குக் கூறுவதுபோல் தோழி, தலைவனுக்கு உணர்த்துவதாக இப்பாடல் அமைகிறது.
'அழுங்கல் ஊரோ அறனின்று அதனால் அறனில் அன்னை அருங்கடி கடுப்ப' என்ற வரிகள் சிந்தனைக்குரியதாகும். ஊரும் அறமற்றது, ஊர் அறமற்றதனால் தாயும் அறமற்றவளானாள் என்பது அதன் பொருள். என்ன அறமற்று போனது ஊர்?, அன்னையும் ஏன் அறமற்றுப் போனாள்?, என்ற கேள்விகள் எழுகின்றன. ஹிந்து தர்ம சாத்திரங்களில் கூறப்படும் எண்வகை திருமணங்களில் ஒன்று காந்தர்வ திருமணம்.
தலைவனும் தலைவியும் எதிர்பாராது சந்தித்து இதய மாறிப்புக்கு கொள்ளும் காதல் திருமணமே காந்தர்வ திருமணம். வேத காலத்திலிருந்தே இது நடைமுறையில் இருந்த திருமணமுறையாகும். சங்க காலத்தில் இந்தத் திருமணம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த நெய்தல் நில மக்கள் தலைவனை தலைவி சந்திப்பதையும் காதல் கொள்வதையும் பழியாகக் கருதி அலர் தூற்றுகின்றனர். இது அறத்துக்கு (பழைய நடைமுறை ஒழுக்கத்துக்கு) மாறுபட்டதல்லவா? என நினைக்கிறாள் தோழி.
இதனால், தாயும் அறமற்றவளாகி அவர்களைச் சந்திக்க விடாது தலைவியை இற்செறிப்பதால் அன்னையும் அறமற்றவளானாள் எனும் பொருளில் 'அழுங்கல் ஊரே, அறனின்று அதனால் அறனில் அன்னை அருங்கடிப் படுப்ப' எனக் கூறுகிறாள். கருத்தொருமித்த தலைவனும் தலைவியும் காதல் கொண்டு கடிமணம் செய்வது இன்றும் இழுக்காகவே கருதப்படக் காணலாம். ஆனால், அது அறத்துக்கு விரோதமானதல்ல என்று வாதிடும் வகையில் புலவர் தோழியைக் காட்டுவது எக்காலத்துக்கும் பொருந்துவதாய் காதல் திருமணத்தை அங்கீகரிப்பது போல் அமையக் காணலாம். தோழி, தன் கருத்துக்கு இயைந்துவர, தலைவனை ஆறுதல்படுத்துவதுபோல் அவனைக் குறைகூறாது உன் காதலும் அறத்துக்கு உட்பட்டதே என்ற குறிப்பும் உணர்த்தப்பட காணலாம்.
புலவர் உலோச்சனார் இப்பாடலில் தம் கவித்துவத்தை உள்ளுறைவுவமை, இறைச்சிப் பொருள் ஆகிய உத்திகள் மூலம் உணர்த்தி கற்போரைச் சிந்திக்கும் வகையில் அமைப்பதும் சிறப்பு. 'உப்பங் கழிச்சேற்றில் விரைந்து பாயும் தலைவனது குதிரை மீது பட்ட சேறு கடல் அலைகளால் கழுவப்படுகிறது. வெளிப்படையாகக் கூறும் இக்காட்சியில் மற்றொரு பொருள், பாடலை கூர்ந்து நோக்கும்போது புலப்படக் காணலாம். குதிரைமீது பட்ட சேறு, தலைவன்- தலைவி மீது ஏற்படும் அலரை (பழிச்சொல்) குறிப்பதாகவும், அச்சேறு கடல் நீரால் கழுவப்படுவதுபோல் தலைவியை நீ மணப்பதால் அலர் நீங்கும் என்பதைக் குறிப்பாக உணர்த்துவதால் உள்ளுறை உவமமாயிற்று.
குதிரைமீது பட்ட சேறு தலைவி மீது எழுந்த அலர் என உவமைப் பொருளும் உய்த்துணர் பொருளும் ஒத்து முடிந்ததால் உள்ளுறை உவமமாயிற்று. மாந்தரின் மன உணர்வுகளை இயற்கை புனைந்துரை மூலம் உவமைப்படுத்துவது சிறப்பாகும்.
புதுமணற்பரப்பில் பரதவர் மீனை உணக்கும் போது எழும் புலால் நாற்றம் அக்கடற்கரையில் வளர்ந்திருக்கும் புன்னைமர மலர்களின் நறுமணத்தால் போக்கப்படுகிறது. இப்புனைவு இறைச்சிப் பொருளாக மற்றொரு குறிப்புப் பொருளை உணர்த்தக் காணலாம்.