நபிகள் நாயகம் காட்டிய வழி!
முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை வானவர் ஜிப்ரயீல் வந்து ""இறைத் தூதரே, உங்களுக்கு இறைவன் உஹது மலை (மதினாவிற்கு அருகில் உள்ள மலைக் குன்று) அளவிற்கு தங்கம் தரத் தயாராக உள்ளான். அதனைப் பெற்று, உங்கள
முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை வானவர் ஜிப்ரயீல் வந்து ""இறைத் தூதரே, உங்களுக்கு இறைவன் உஹது மலை (மதினாவிற்கு அருகில் உள்ள மலைக் குன்று) அளவிற்கு தங்கம் தரத் தயாராக உள்ளான். அதனைப் பெற்று, உங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளவும். தான, தர்மங்கள் செய்யவும் இறைவன் அனுமதி அளிக்கிறான். நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதனை ஏற்க மறுத்து ஜிப்ரயீலிடம், ""எனக்கு மலையளவு தங்கம் எல்லாம் வேண்டாம். என்னுடைய ஆசையெல்லாம் எனக்கு ஒருநாள் உணவும், ஒருநாள் பசியும் இப்படி மாறி மாறி வேண்டும்'' என்றார்கள்.
அதற்கு வானவர் ஜிப்ரயீல் அவர்கள் ""என்ன இறைத் தூதுவரே மலையளவு தங்கத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு, விநோதமாக ஒருநாள் பசியையும், ஒருநாள் உணவையும் கேட்கிறீர்களே, என்ன காரணம்?'' என்றார்கள்.
அதற்கு நபிகள் நாயகம், ""நான் இறைவனிடமிருந்து ஒருநாள் உணவைப் பெறுவதன் மூலமாக இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாகவும், மறுநாள் உணவில்லாது பசித்திருக்கும் நிலையில் பொறுமையுள்ள அடியானாகவும் இருக்க விரும்புகிறேன்'' (அரபியில்: அப்தன் சுகூறா, அப்தன் சபூறா) என்று கூறினார்கள். வானவர் ஜிப்ரயீல் வியந்தார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தினம் தினம் உணவு வேண்டும் என்று கூடக் கேட்கவில்லை. வரம் என்று கேட்கும்போதுகூட ஒரு நாள் பசியும் வேண்டும் என்று கேட்டார்கள். காரணம் அவர்கள் கிடைத்ததினால் நன்றியுள்ளவனாக மட்டும் தன்னை காட்டிக்கொள்ள விரும்பாமல், கிடைக்காத நிலையிலும் தன்னைப் பொறுமையாளனாகவும் காட்டிக் கொள்ள விரும்பினார்கள்.
ஒரு முறை நபிகள் நாயகம், பைத்துல்மாலில் (தர்ம அறக்கட்டளை) நின்று ஜக்காத்தாக (கட்டாய தர்மம்) வந்த பொருட்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது, அங்கே வந்த அவரது பேரன் பாலகர் ஹசன் அவர்கள் தர்மமாக அறக்கட்டளைக்கு வந்த
பேரிச்சம் பழத்திலிருந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அதைக் கண்ட நபியவர்கள் திடுக்கிட்டு, துப்பு துப்பு என்று கத்திக்கொண்டு ஓடிச்சென்று தனது பேரனின் வாயில் கையை விட்டு அவர் மென்ற பேரிச்சம் பழத்தை வெளியில் எடுத்து வீசினார். ""எனக்கும் என் வாரிசுகளுக்கும் பைத்துல்மாலின் பொருட்களை உண்பதற்கும், பயன்படுத்துவதற்கும் எந்த நிலையிலும் (ஏழையாக இருந்தாலும்கூட) பெற்றுக்கொள்வதற்கும் தடுக்கப்பட்டதாகும்(ஹராம்)'' என்று கூறினார்கள். என்ன விந்தை! தடை தனக்கு மட்டுமல்லவாம், தனது வாரிசு
களுக்குமாம்.
இவ்வளவு வியப்பிற்குரிய நபிகள் நாயகத்திடம் என்ன உடமை இருந்தது என்று பார்க்கும்போது அவர்களிடம் துண்டு நிலம் சொந்தமாக இருந்தது. அதையும் தான் இறக்கும் முன்பே மக்களுக்கு ஒப்படைத்துவிட்டார்கள் (உயில் எழுதிவிட்டுச் செல்லவில்லை). இறக்கும்போது அவர் விட்டுச்சென்ற சொத்து என்ன தெரியுமா? ஒரு கோவேறு கழுதை, ஒரு கல்லாலான பாத்திரம், வாள், ஒரு கேடயம்.
நபிகள் நாயகம் போரின் போது உடம்பில் அணிந்துகொள்ளும் பாதுகாப்பு கவசமோ ஒரு யூதரிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது.
இத்தனைக்கும் மதினாவையும், மக்காவையும் அதன் சுற்றுப்பகுதியையும் வெற்றிகொண்டு ஆண்ட மக்களாட்சியின் அரசியல் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்தவர். அவர்கள் நினைத்தால் சம்பளமாகவோ, காணிக்கையாகவோ, சன்மானமாகவோ, அன்பளிப்பாகவோ எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றிருக்க முடியும்.
இறைவன் தங்க மலையைத் தருகிறேன் என்று கேட்டபோதுகூட எனக்கு ஒருநாள் பசியையும் ஒருநாள் உணவையும் தா என்று கேட்கத் துணிந்தவருக்கு, இறப்பின்போது இருந்த மேற்சொன்ன இருப்பு கூட நமக்கு ஒரு பாடம்தானோ.
இதை இன்றைய தலைவர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீக வாதிகள், மக்கள் படித்தால் மட்டும் போதாது. அது போன்று வாழ்வதுதான்
முக்கியம்.