வங்க தேசத்தில் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 46ஆக உயர்வு
வங்க தேசத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, நிகழ்ந்த வன்முறைக்கு
வங்க தேசத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, நிகழ்ந்த வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வங்க தேச எல்லை பாதுகாப்புப் படை தலைவர் மேஜர் ஜெனரல் அஜிஸ் அகமது கூறுகையில், ""பிரச்னைக்குரிய 15 மாவட்டங்களில் எல்லை பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கலவரம் எங்கு நடைபெற்றாலும் உடனடியாக அப்பகுதிக்கு செல்வதற்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்துக்கு ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி (ஜே.ஐ.) எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டது. 9 மாதங்களாக நடைபெற்ற இந்த மோதலில் சுமார் 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 2 லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஜே.ஐ. கட்சியின் துணைத் தலைவர் டெல்வர் ஹுசைன் சையதி (73) மீது கொலை, பலாத்காரம் உள்பட 20 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவற்றில் 8 குற்றங்கள் நிரூபணமானதையடுத்து, சையதிக்கு மரண தண்டனை அளித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைக் கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
அதேநேரம் தீர்ப்பை எதிர்க்கும் வகையில் ஜே.ஐ. கட்சியினர் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதலைத் தடுக்க வந்த பாதுகாப்புப் படையினருடனும் ஜே.ஐ. கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறைக்கு இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 போலீஸாரும் அடங்குவர்.
ஜே.ஐ. கட்சியினர் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, மசூதிகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது.
எனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.