முகப்பு
உலகம்

இன, மதவாத குழுக்களை தடை செய்ய இலங்கை அரசு திட்டம்

நாட்டில் இயங்கி வரும் இன, மதவாத குழுக்களைத் தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 2 ஏப்ரல் 2013, 12:22 am IST
பகிர்:

நாட்டில் இயங்கி வரும் இன, மதவாத குழுக்களைத் தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் சில சிங்கள இயக்கங்களும் புத்த மத அமைப்புகளும் சிறுபான்மையினரான தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

அண்மையில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது புத்த மத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இலங்கையின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்துறை அமைச்சர் வாசுதேவன் நாணயக்கர கூறியதாவது: இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு புத்த மதத்தைச் சாராதவர்களுக்கும் சிங்களர்கள் அல்லாதவர்களுக்கும் சம உரிமை, சுதந்திரம் உண்டு.

ஆனால் இங்குள்ள சில இன, மதவாத குழுக்கள் தங்களுடைய நடவடிக்கைகளால் நாட்டில் அமைதியைக் குலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதை அரசு ஏற்றுக்கொள்ளாது. எனவே இந்த அமைப்புகளை சட்டரீதியாகத் தடை செய்ய நாடாளுமன்றத்தில் விரைவில் தீர்மானம் தாக்கல் செய்யப்படும். நாட்டை நேசிக்கும் அனைவரும் நாட்டில் இனம் மற்றும் மத ஒற்றுமை நிலவ முயற்சிக்க வேண்டும் என்றார்.

இது குறித்து புத்த மத அமைப்பான "பொது பல சேனை'யின் பொதுச் செயலாளர் கல்கொதாட்டே ஞானசர கூறியதாவது:

நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் சிங்களர்களுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும். மொழித்துறை சார்ந்த அமைச்சரான நாணயக்கரவின் கடமையும் அதுதான். எங்கள் அமைப்பை தடை செய்யாமல் நிலைமையை சீராக்க வேண்டும் என அவருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். அவரால் எங்கள் அமைப்பைத் தடை செய்ய முடியாது என்றார்.

இந்த அமைப்பு தவிர சிங்கள ராவய, ராவண ராவய போன்ற அமைப்புகளும் இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.