"இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத திட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்'
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
ஜெனீவாவில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த அமலாக்கம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடைக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தாமஸ் கன்ட்ரிமேன் பேசியதாவது: தெற்காசியாவில் அணு ஆயுதங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படுவதால் எழுந்துள்ள அபாயம் குறித்து அமெரிக்கா மிகவும் கவலை அடைந்துள்ளது.
அணு ஆயுதங்களே இல்லாத உலகம் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். எனவே, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்துகிறது.
Advertisement
மேலும், அணு ஆயுதத்தில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளின் உற்பத்தியை முடிவுக்குக் கொண்டுவருமாறும் ஆயுத ஒழிப்புக் கருத்தரங்கில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதை ஆதரிக்குமாறும் இந்த நாடுகளைக் கேட்டுக் கொள்கிறோம். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதை ஆதரிக்க பாகிஸ்தான் தயங்குவது எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் என்னும் இந்த இரண்டு அணு ஆயுத நாடுகளிடையே அர்த்தமுள்ள நம்பிக்கை ஏற்படுவதை நாங்கள் வரவேற்போம். இந்த நாடுகளிடையே பிராந்தியப் பதற்றங்களைக் குறைக்கவும், ஆணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் ஆபத்தைக் குறைக்கவும் நாம் வழிகளைக் கண்டறிவோம்.
உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடை என்ற விஷயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்கபூர்வமாகப் பங்கெடுக்கவும், ஆயுதப் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தொடர்ந்து ஊக்கமளிப்போம் என்றார் தாமஸ் கன்ட்ரிமேன்.