முகப்பு
உலகம்

வடக்கு மாகாணத் தேர்தல் தொடர்பாக இலங்கை ஆளும் கூட்டணியில் மோதல்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அந்நாட்டின் ஆளும் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

Updated On : 2 மே 2013, 1:35 am IST
பகிர்:

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அந்நாட்டின் ஆளும் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத் தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் நடத்துவது என்று அதிபர் ராஜபட்ச உறுதிபூண்டுள்ளார். இதைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கும் பெரிய நடவடிக்கை என்று சர்வதேச நாடுகள் கருதுகின்றன. எனினும், அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய சுதந்திர முன்னணிக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தனது அதிருப்தியை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இகக்கட்சியின் தலைவரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச புதன்கிழமை மே தினப் பேரணியைத் தனியாக நடத்தினார். ஆளும் கூட்டணியின் மே தினப் பேரணியில் அவர் கலந்து கொள்ளவில்லை.

Advertisement

Advertisement

இது குறித்து அவர் கூறுகையில், ""வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்துவது என்பது தமிழர்களுக்கு தனி நாடு உருவாகவே வழிவகுக்கும் என்பதால், நாங்கள் அதை எதிர்க்கிறோம். வடக்கு மாகாணக் கவுன்சிலை அமைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம்'' என்றார்.

இதேபோல், வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்தப்படுவதை சிங்கள இனவாதக் குழுக்களும் எதிர்க்கின்றன. இத்தேர்தலை நடத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டணி, தேர்தலுக்குப் பின் தனது பிரிவினைவாதச் செயல்திட்டத்தை மேலும் தீவிரமாக வலியுறுத்தும் என்று அவை கருதுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.