முகப்பு
உலகம்

சிரியாவில் ரசாயன குண்டுகள் வீச்சு: 1300 பேர் படுகொலை

சிரியாவில் புதன்கிழமை ரசாயன வெடிகுண்டுகளை வீசி 1300 பேரை ராணுவம் கொன்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 4:04 am IST
பகிர்:

சிரியாவில் புதன்கிழமை ரசாயன வெடிகுண்டுகளை வீசி 1300 பேரை ராணுவம் கொன்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு எதிராக 2011-ம் ஆண்டு முதல் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள அரசுக்கு எதிரான புரட்சியாளர்களும், ஆசாதுக்கு ஆதரவான ராணுவத்தினரும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதி வருவதால் இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் ஆவர்.

தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் ராணுவத்தினர் ரசாயன வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் புதன்கிழமை 1300 பேரை கொன்றுவிட்டதாக எதிர்க்கட்சியான சிரிய தேசிய கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

Advertisement

இது மிகப்பெரிய படுகொலை என்றும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று சிரியாவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

இருப்பினும், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மனித உரிமைகள் அமைப்பு உறுதி செய்யவில்லை.

டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கோவ்டாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ராணுவத்திடம் இருந்து புரட்சிப் படையினர் கைப்பற்றியுள்ள அப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். நச்சுவாயு கலந்த ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை சுவாசித்த பலர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. எனினும், தாக்குதலுக்கு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை சிரியா அரசுத் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் தரப்பில் வெளியிடப்பட்ட விடியோ அசல்தானா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.