உலகம்

பொருளாதார வளர்ச்சிக்கு பிரிக்ஸ் நாடுகளிடையே வலுவான தோழமை அவசியம்: பிரதமர் மோடி

DIN

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்கு பிரிக்ஸ் நாடுகளிடையே வலுவான தோழமை அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சீனா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு மோடி பேசுகையில் பிரிக்ஸ் நாடுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே புத்தாக்கம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றில் வலுவான தோழமை ஏற்படுவதன் மூலம் வளர்ச்சியை அதிகரித்தல், வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல், நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிறைவேற ஆதரவளித்தல் ஆகியவற்றுக்கு உதவ முடியும்.
பிரிக்ஸ் அமைப்பின் அவசரக்கால தொகுப்பு நிதியத்துக்கும், சர்வதேச செலாவணி அமைப்புக்கும் (ஐஎம்எஃப்) இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும், தங்களின் திறன்களை வலுப்படுத்தவும் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் முயற்சியெடுக்க வேண்டும்.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனை தரவரிசைப்படுத்த மேற்கத்திய நாடுகளில் பல்வேறு அமைப்புகள் உள்ளன. அதேபோல் பிரிக்ஸ் அமைப்பின் சார்பிலும் ஓர் அமைப்பை உருவாக்க கடந்த ஆண்டு நாம் விவாதித்தோம். இதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. விரைவில் அந்த அமைப்பை உருவாக்குவதற்கு செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
இந்தியாவும் பிரான்ஸýம் கடந்த 2015 நவம்பர் மாதம் ஏற்படுத்திய சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புடன் (ஐஎஸ்ஏ) பிரிக்ஸ் நாடுகள் நெருங்கிப் பணியாற்ற முடியும். நமது பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஐந்து நாடுகளிடமும் சூரிய மின்சக்தி பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான பலம் உள்ளது. இதற்கான ஒத்துழைப்புக்கு ஆதரவு அளிப்பதற்காக ஐஎஸ்ஏ-வுடன் பிரிக்ஸ் அமைப்பின் வங்கியான புதிய வளர்ச்சி வங்கி (என்டிபி) தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
புதிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து தூய்மையான எரிசக்திக்கு, குறிப்பாக சூரிய மின்சக்திக்கு அதிக அளவிலான நிதி அளிக்கப்படுவதைக் காண நாம் விரும்புகிறோம். திறன் மேம்பாடு, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, பயணத் தொடர்பு ஆகிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே அதிக அளவில் உறவுகள் ஏற்படுவதற்காக பாடுபடுவதற்கு இந்தியா தயாராக உள்ளது.
பொலிவுறு நகரங்கள் திட்டம், நகரமயமாக்கல், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது அவசியமாகும். பிரிக்ஸ் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக புதிய வளர்ச்சி வங்கி கடன்களை அளிக்கத் தொடங்கியுள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரிக்ஸ் அமைப்பானது, ஒத்துழைப்புக்கான சிறப்பான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது. நிச்சயமற்ற தன்மையை நோக்கி நழுவிச் செல்லும் இந்த உலகில், நிலைத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் நாம் பங்களிப்பை ஆற்றி வருகிறோம்.
நமது ஒத்துழைப்பின் அடிப்படை அம்சங்களாக வர்த்தகமும் பொருளாதாரமும் இருந்து வரும் அதேவேளையில், தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாசாரம், வேளாண்மை, சுற்றுச்சூழல், எரிசக்தி, விளையாட்டு, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய வேறுபட்ட துறைகளிலும் நம்மிடையிலான ஒத்துழைப்பை நாம் எட்டியுள்ளோம்.
இந்தியா தற்போது ஏழ்மையை ஒழிப்பதற்கும், மக்களுக்கு சுகாதாரம், துப்புரவு, திறன்கள், உணவுப் பாதுகாப்பு, பாலினச் சமத்துவம், எரிசக்தி, கல்வி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் லட்சியப் பாதையில் பயணித்து வருகிறது.
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்கள் உற்பத்தித்திறனைப் பெருக்குவதோடு, தேச நிர்மாணத்தில் பெண்களை பங்கேற்கச் செய்வதாகவும் உள்ளன. இந்தியா தற்போது கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. எங்கள் தேசிய அனுபவத்தைப் பயன்படுத்தி, பிரிக்ஸ் நாடுகள் தோழமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
உலகிலேயே சந்தை வாய்ப்புள்ள பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா வேகமாக மாறி வருகிறது. மிகப்பெரிய சீர்திருத்தமான பொருள்கள் - சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) மூலம் எங்கள் நாடு ஒரே சமச்சீரான சந்தையாக உருவெடுத்துள்ளது.
நிலைத்தன்மை, நீடித்த வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை நாம் நாட உள்ள அடுத்த பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானவை. இந்த உருமாற்றத்தை ஏற்படுத்துவதில் பிரிக்ஸ் நாடுகளின் தலைமை மிகவும் அவசியமாகும். பிரிக்ஸ் அமைப்பு என்ற முறையில் இந்த விவகாரங்களுக்கான செயல்திட்டத்தை நம்மால் உருவாக்க முடிந்தால், தனது பொற்கால பத்தாண்டு என்று அடுத்த பத்தாண்டுகளை உலகம் அழைக்கும்.
மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை மேற்கொள்வதில் சீனா காட்டும் ஆர்வம் பாராட்டுக்குரியது.
அவ்வாறு நாடுகளிடையிலான மக்கள் ஒன்றிணைவது நமது தொடர்புகளை ஒன்றுதிரட்டுவதோடு, நம்மிடையிலான புரிதலையும் வலுப்படுத்தும் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சகல துறைகளிலும் உச்சத்தில் இருந்தவா் கருணாநிதி: கமல்ஹாசன்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

மாணவிக்கு கல்வி நிதியுதவி அளிப்பு

முட்டை விலையில் மாற்றமில்லை

347 வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு

SCROLL FOR NEXT