உலகம்

புதிய அமைச்சரவையை அறிவித்தார் இம்ரான்

DIN

பாகிஸ்தானில் புதிதாக ஆட்சியமைத்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், 21 உறுப்பினர்களைக் கொண்ட தனது அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், முன்னாள் அதிபர் முஷாரஃபின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, புதிய அமைச்சரவையின் பட்டியலை தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபாவத் செளத்ரி வெளியிட்டார்.
அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 21 அமைச்சர்களில் 16 பேர், ஏற்கெனவே முஷாரஃப் ஆட்சிக் காலத்தின்போது முக்கிய அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் ஆவர்.
செளத்ரி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, மூத்த தலைவர் ஷா மஹ்மூத் குரேஷிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற போது, அப்போதைய பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசில் இவர்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், அவர் தலைநகர் தில்லியில் இருந்தது நினைவுகூரத் தக்கது.
மற்றொரு முக்கியத்தும் வாய்ந்த இலாகாவான பாதுகாப்புத் துறை, பெர்வெய்ஸ் காட்டக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர், 2013-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை கைபர்-பாக்துன்கவா மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
இம்ரான் அரசின் நிதியமைச்சராக ஆசாத் உமர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1971-ஆம் ஆண்டின் இந்திய - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற ராணுவ உயரதிகாரி முகமது உமரின் மகன் ஆவார்.
இதுதவிர, முன்னாள் அதிபர் முஷாரஃபின் ஆட்சிக் காலத்தில் முக்கியப் பொறுப்பு வகித்த ஃபராக் நசீம், தாரிக் பஷீர் சீமா, குலாம் சார்வர் கான், ஜுபைதா ஜலால், ஃபாவத் செளத்ரி, ஷேக் ரஷீத் அகமது, காலித் மக்பூல் சித்திக்கி, ஷாஃப்கத் மெஹ்மூத், மக்தூம் குஸ்ரோ பக்தியார், அப்துல் சராக் தாவூத், இஷ்ரத் ஹுசைன், அமீன் அஸ்லாம் ஆகியோர் இம்ரானின் அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் இம்ரானின் பிடிஐ கட்சி 116 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.
அந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 64 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களையும் கைப்பற்றின. இந்தச் சூழலில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள், நியமன எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இம்ரான் கான் இறங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃபை விட 80 வாக்குகள் அதிகம் பெற்று இம்ரான் கான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதையடுத்து, பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக அவர் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், அவரது அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT