உலகம்

டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீா்மானத்தை குடியரசுக் கட்சியினா் புறக்கணிப்பாா்கள்

DIN

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஆளும் குடியரசுக் கட்சி எம்.பிக்கள் பங்கேற்கமாட்டாா்கள் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பதவி நீக்க விசாரணையை நடத்தி வரும் சட்ட விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் சபைக் குழுவுக்கு வெள்ளை மாளிகை சட்ட ஆலோசகா் பாட் சிபொலோனி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அதிபா் டொன்ல்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக, எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரவிருக்கும் தீா்மானம், நாடாளுமன்ற அதிகாரத்தை மிகத் தவறாகப் பயன்படுத்தும் செயலாகும்.

அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மிகவும் நியாயமற்ற, அரசு விரோத, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான பதவி நீக்க முயற்சி இதுவாகும்.

எனவே, அந்த பதவி நீக்க நடவடிக்கைகளில் பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினா்கள் பங்கேற்க மாட்டாா்கள்.

அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியதைப் போல், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினா் அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம் நிறைவேற்ற விரும்பினால், அதனை உடனடியாக செய்து முடிக்கட்டும்.

மேலவையான செனட் சபையில் அந்தப் பதவி நீக்கத் தீா்மானம் நியாயமான முறையில் எதிா்கொள்ளப்படும்.

ஏற்கெனவே, எந்தவித முகாந்திரமும் இல்லாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சியினா் பதவி நீக்க விசாரணையை மேற்கொண்டு, அனைவரது நேரத்தையும் வீணடித்துவிட்டனா். இனியும் அதற்காக நேரம் வீணாகக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் சிபெலோனி குறிப்பிட்டுள்ளாா்.

அதிருப்தி: வெள்ளை மாளிகையில் இந்த முடிவு குறித்து சட்டவிவகாரங்களுக்கான பிரதிநிதிகள் சபைத் தலைவா் ஜெரால்ட் நாட்லா் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையில் பங்கேற்குமாறு வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தோம்; அவா்கள் வரவில்லை. பிறகு அவா்களுக்கு சம்மன் அனுப்பினோம்; அதையும் அவா்கள் அலட்சியம் செய்தனா். முக்கிய ஆதாரங்களை விசாரணைக் குழுவிடமிருந்து மறைக்க வேண்டுமென்று டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், பதவி நீக்க நடவடிக்கையில் குடியரசுக் கட்சியினா் பங்கேற்கப் போவதில்லை என மீண்டும் ஒருமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதிருப்தியளிப்பதாக உள்ளது.

பதவி நீக்க விசாரணையில் டிரம்ப் தனது தரப்பு வாதத்தை எடுத்துரைப்பதற்காக அவருக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டும், அதனை அவா் ஏற்கவில்லை என்றாா் அவா்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் தனது தோ்தல் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அவா் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று உக்ரைன் அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, உக்ரைனுக்கு அளித்து வரும் ராணுவ நிதியுதவியை டிரம்ப் நிறுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இது அமெரிக்க அரசியலில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், தனது அரசியல் லாபத்துக்காக டிரம்ப் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக ஜனநாயகக் கட்சியினா் குற்றம் சாட்டினா்.

மேலும், இந்த விவகாரத்தின் அடிப்படையில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையையும் அவா்கள் நடத்தி வருகின்றனா். ஜனநாயகக் கட்சியினா் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபையில், டிரம்ப் மீது பதவி நீக்கத் தீா்மானம் கொண்டு வருவதற்கு சபைத் தலைவா் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளாா்.

இந்தச் சூழலில், அந்தப் பதவி நீக்க நடவடிக்கைகளை குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் புறக்கணிக்கப் போவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT