உலகம்

நவாஸின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி

DIN


ஊழல் வழக்கில் நவாஸ் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஊழல் தடுப்பு அமைப்பின் மேல் முறையீட்டு மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. 
பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு மேல் முறையீடு செய்தது.
இந்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாகிப் நிஸார் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்க அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும், ஊழல் தடுப்பு அமைப்பின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் பனாமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது.
அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
அதையடுத்து, பனாமா முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது உறவினர்கள் மீது தனித் தனியாக 3 வழக்குகள் நடைபெற்று
வந்தன.
அவற்றில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அவென்ஃபீல்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு கடந்த ஜூலை மாதம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதையடுத்து, அந்த மூவரும் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நவாஸ், மரியம், சஃப்தார் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருவருக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். 
மேலும், தலா ரூ.5 லட்சம் பிணைத் தொகையின் பேரில் அவர்கள் மூவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நவாஸ் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இது, நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தற்போது அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது நவாஸுக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT