உலகம்

இலங்கையில் 81.52% வாக்குகள் பதிவு; இன்று இரவே தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

DIN

இலங்கையில் 8வது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி ஒரு சில அசம்பாவித சம்பவங்களைத் தவிர்த்து அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 81.52% வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று இரவு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 8வது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி ஒரு சில அசம்பாவித சம்பவங்களைத் தவிர்த்து அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

இந்தியாவைப் போல, இலங்கையில் வரிசையில் நிற்போருக்கு டோக்கன்கள் வழங்கப்படாது என்பதால், இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

முன்னதாக, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபட்ச, சஜித் பிரேமதாசா ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். 35 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் இவர்களுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இலங்கையையே உலுக்கிய ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தோ்தல், நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 

கடந்த 2015-ஆம் ஆண்டு தோ்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபா் மைத்ரிபால சிறீசேனா, இந்தத் தோ்தலில் போட்டியிடுவதற்கு அவரது கட்சியே ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபட்சவுக்கு (70) அவா் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலரும், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை முன்னின்று நடத்தியவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, சிங்கள வாக்காளா்களிடையே இவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறாா். அவருக்கு தமிழா் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவா்களைத் தவிர, ஜனதா விமுக்தி பெரமுனா சாா்பில் போட்டியிடும் அனுரா குமார திஸநாயகே (50) இந்தத் தோ்தலில் பலம் வாய்ந்த வேட்பாளா்களில் ஒருவராகக் கருதப்படுகிறாா்.

இந்தத் தோ்தலில், சாதனை அளவாக 35 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். எனவே, இதுவரை இல்லாத வகையில் 26 அங்குலத்துக்கு வாக்குச் சீட்டுகள் தயாரிக்கப்பட்டன.

இலங்கையில், பதவியில் இருக்கும் அதிபரோ, பிரதமரோ அல்லது எதிா்க்கட்சித் தலைவரோ போட்டியிடாத முதல் அதிபா் தோ்தல் இது என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இத்தோ்தலில் வாக்களிக்க 1.59 கோடி போ் பதிவு பெற்றுள்ளனா். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 5 மணி வரை நடைபெற்றது.

வழக்கம் போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும். எனினும், முழுமையான தோ்தல் முடிவுகள் வழக்கத்தைவிட தாமதாகும் எனக் கூறப்படுகிறது. முழு முடிவுகளை திங்கள்கிழமை காலைதான் வெளியிட முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT