முகப்பு
உலகம்

சீனாவின் வளர்ச்சிக்கு வளமூட்டும் யாங்சி ஆறு

உலகில் ஆற்றங்கரையோரம்தான் நாகரிகம் பிறந்தது. மனிதனை ஓரிடத்தில் தங்க வைக்க, வேளாண் வளர்ச்சிக்காக,..

Updated On : 24 ஆகஸ்ட் 2020, 6:15 pm IST
யாங்சி ஆறு
பகிர்:

உலகில் ஆற்றங்கரையோரம்தான் நாகரிகம் பிறந்தது. மனிதனை ஓரிடத்தில் தங்க வைக்க, வேளாண் வளர்ச்சிக்காக, புதுப்புதுக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த என ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய அச்சாணியாக ஆறுகள்தான் காலங்காலமாக இருந்து வருகிறது.

சீனாவில் பல ஆறுகள் இருந்தாலும் பல மாநிலங்களை வளமூட்டி, அவற்றின் வளர்ச்சிக்கு உரமூட்டிச் செல்லும் யாங்சி ஆறும் மஞ்சள் ஆறும் மிக முக்கியமானவை. நாட்டின் பிரதான வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத சக்திகளாக இவ்விரு ஆறுகளும் விளங்குகின்றன. அதிலும், 11 மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளைக் கடந்து செல்லும் யாங்சி ஆறு சீனாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. யாங்சி ஆற்று பொருளாதார மண்டலம் என்ற வியூகத்தைச் சீன அரசு தொடங்கி 4 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இது, நாட்டின் உயர்தர வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான வியூகமாகும். தவிரவும், இரு நூற்றாண்டு இலக்கு நனவாக்கம் மற்றும் சீன தேசத்தின் மறுமலர்ச்சி ஆகிய இரு பெரும் இலக்குகளுக்கு உயிராற்றலாகவும் விளங்குகிறது.

யாங்சி கடந்து செல்லும் 11 மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளின் ஜிடிபி, நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 40 விழுக்காடு வகிக்கிறது. ஜிடிபி அடிப்படையிலான தரவரிசைப்படி சீனாவில் முதல் 15 இடங்களைப் பிடித்துள்ள நகரங்களில் 10 நகரங்கள் யாங்சி ஆற்று பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளன. இம்மண்டலம் கையாளும் சரக்குகளின் அளவு நாடளவில் 50 விழுக்காடு ஆகும். அதேபோல், 50 விழுக்காட்டு வெளிநாட்டு முதலீடு இம்மண்டலத்துக்கே செல்கிறது. இந்த வளர்ச்சி நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் 2035ஆம் ஆண்டுக்குள் இம்மண்டலத்தின் ஜிடிபியானது நாடளவில் 50 விழுக்காடு வகிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் விதம், சமீபத்தில் ஹேஃபெய் மாநிலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், “யாங்சி ஆற்றின் கழிமுகப் பகுதியின் ஒருங்கிணைந்த மற்றும் உயர்தர வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

யாங்சி பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சியில் முதலாவதாக இருப்பது பசுமை வளர்ச்சி. ஆற்றின் சூழலியலுக்குப் பாதிப்பு இல்லாவிதம் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதில் ஷிச்சின்பிங் உறுதியுடன் உள்ளார். அவ்வாறு இல்லாவிடில், பெரும் வளர்ச்சி கிட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாவதாக இருப்பது, உயர்தர வளர்ச்சி. நாட்டின் மிகப் பெரிய இரும்பு தொழிற்சாலைகள் இம்மண்டலத்தில் அமைந்துள்ளன. பாரம்பரியத் தொழிற்சாலைகள் உயர் தொழில்நுட்பத்துடன் இணைந்து புத்தாக்கம் மற்றும் உயர்தர வளர்ச்சியில் துடிப்புடன் ஈடுபட்டு வருகின்றன. உதாரணத்துக்கு, நான்ஜிங் இரும்பு குழுமமானது உயர் தொழில்நுட்ப மண்டலமாக மாறியுள்ளது.

பெரிய தரவு, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டுகள், பொருள்களின் இணையம், மின்னணு வணிகம், தகவல் மற்றும் மென்பொருள் சேவை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இம்மண்டலத்தில் பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றன. நாட்டின் முதல் 10 இடங்களில் இருக்கும் புத்தாக்க நகரங்களில் 5 நகரங்கள் இம்மண்டலத்தில் இருப்பது சுட்டிக்காட்டத் தகுந்தது. ஆற்றில் பாய்ந்தோடும் நீரைத் தவிர, ஆற்றின் இரு மருங்கிலும் தொழில்நுட்பம், திறமைசாலிகள், நிதி, உலக சந்தைக்கான வளங்கள் மற்றும் முதலீடு ஆகியவை பாய்ந்தோடுவதற்கு இம்மண்டலம் ஊக்கம் அளித்து வருகிறது. இம்மண்டலத்துக்குள் இருக்கும் ஷாங்காயின் பாவ் ஷன் இரும்பு தொழிற்சாலை, வூஹான் இரும்பு தொழிற்சாலையுடன் ஒன்றிணைந்து, உலக அளவில் பெரிய தொழிற்சாலையாக உருவெடுத்துள்ளது.

ஷிச்சின்பிங் வகுத்த வழிகாட்டலைத் தொடர்ந்து, யாங்சி ஆற்று பொருளாதார மண்டலத்தின் கடந்த 4 ஆண்டுகால வளர்ச்சியில் சீனாவுக்கு கிடைத்த முக்கிய அனுபவங்கள்: பசுமை, உயர் தரம் மற்றும் இணக்கமான வளர்ச்சி. இயற்கையுடன் இயைந்த வளர்ச்சியை சீனா மேற்கொண்டு வருகிறது. இப்பொருளாதார மண்டலம், நாட்டின் இரு நூற்றாண்டு இலக்கு மற்றும் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்கு முக்கியமாகப் பங்காற்றும் என்பதில் ஐயம் இல்லை. ஆறுகளும், அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் என்பதை சீன அரசும் மக்களும் நன்கு உணர்ந்து வைத்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.